Monday, July 7, 2014

ஞானசாரருக்கு இன்று எச்சரிக்கை விடுத்தது நீதிமன்று!

தன்னை நாடிவரும் எந்தவொரு நபருக்காகவும் வாதிடும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அவர்களும் நீதிமன்றத்தின் அதிகாரிகளாகக் கருதப்படுவதால் அவர்களை திட்டித் தீர்த்து அச்சுறுத்தல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்து நடந்து கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதிபதி திலின கமகே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசாரருக்கு கட்டளையிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி கொம்பனித்தெரு நிபொன் ஹோட்டலில் ஜாத்திக பல சேனா அமைப்பு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து, அதன் தலைவர் வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்திய முறைப்பாட்டுக்காகவும், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் புனித திருக்குர்ஆனை நிந்தித்ததற்கான முறைப்பாடும் தொடர்பிலேயே இன்று நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போது, குர்ஆனை நிந்தித்தது தொடர்பில் உண்மையைத் தெளிவதற்காக ஞானசாரரின் பேச்சுடனான இறுவட்டு முஸ்லிம் அலுவல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com