Saturday, July 12, 2014

ரவூப் ஹக்கீமிடம் புலனாய்வுப் பிரிவினர் வெகுவிரைவில் விசாரணை!

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தவுள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அமைச்சர் ஹக்கீம் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின்போது உயிரிழந்த இரண்டு முஸ்லிம்களினதும் பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார்.

உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். இரண்டு முஸ்லிம்களும் துப்பாக்கிச் சூடு காரணமாகவே உயிரிழந்த்தாக நேரில் கண்டவர்கள் தெரிவித்த போதும், அறிக்கையில் வாள் வெட்டுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக்க் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.

பின்னர் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில் ஒருவரின் மரணித்திற்கான காரணம் துப்பாக்கிச் சூட்டினால் எற்பட்டது என குறிப்பிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் எனவும் அதனை நிரூபிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக் கொள்ள சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் அனுமதி கோரத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கேற்ப, வெகுவிரைவில் அமைச்சர் ஹக்கீமை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ்தான் பேருவளை, அளுத்கம சம்பவங்களுக்கு காரணம் எனவும், அதற்காக அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment