Wednesday, July 23, 2014

ஆடு மாடுகளைப் போடுவது போல ஒரு வகுப்பறையில் அதிக மாணவர்களைச் சேர்க்கவியலாது!

பாடசாலைகளில் முதலாந்தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும் அளவினை தன்னால் அதிகரிக்க இயலாது என்றும், அதற்காக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சென்று சுற்றுநிரூபமொன்றைச் சரிசெய்துவருமாறும் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சர் காமினி லொக்குகேவிடம் நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட கொழும்பு மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, எழு மாதங்களாக மேல் மாகாணத்தில் பாடசாலைகள் கிடைக்கப்பெறதாக மாணவர்கள் இருக்கின்றார்களே என்ற வினாவினை காமினி லொக்குகே எழுப்பியபோது பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்ணளவாக பாடசாலையொன்று சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை 41 ஆக இருக்க வேண்டும் என்றே சுற்று நிரூபம் கூறுகின்றது. வெற்றிடம் இல்லாத பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவியலாது என்று தெளிவுறுத்தியுள்ள ரணதுங்க, பிரபலமான பாடசாலைகளுக்காகவே சில பெற்றோர் ஏங்கிநிற்பதனாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை அநுமதிப்பது தொடர்பில் மேல் மாகாண சபை கல்வியமைச்சு தேவையான உதவிகளைச் செய்துள்ளது. மேலும் மாணவர்களை வீட்டுக்குள் பூட்டி வைக்காது வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்குமாறும் மேல் மாகாண சபை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேலும் பிரபல பாடசாலைகளை எதிர்பார்த்திருக்க வேண்டாம் எனவும் கோழிகள், ஆடு மாடுகள் போன்றவை ஒரு கூட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவே போடமுடியும். அதேபோல ஒரு வகுப்பறையில் இத்தனை மாணவர்களைத்தான் சேர்க்கவியலும் என்பதால், அதிகளவு மாணவர்களைச் சேர்க்க முடியாது எனவும், அதற்குப் பிறகு தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

No comments:

Post a Comment