சபரகமுவ பல்கலை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது..!
பலங்கொடைப் பிரதேசத்தில் தற்போது நிலவுகின்ற கடும் காற்றுடனான மோசமான காலநிலை காரணமாக சபரகமுவ பல்கலைக் கழகம் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடி, மாணவர்களை அங்கிருந்து தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறு நேற்று (13) அறிவுறுத்தியதாக உப வேந்தர் சந்தன பீ. உடவத்த தெரிவித்தார்
சபரகமுவ பல்கலைக்கழகம் அமைந்துள்ள பலங்கொட பம்பஹின்ன பிரதேசத்தில் இந்நாட்களில் கடும் காற்று (மினி சூறாவளி) வீசுவதாக்க் குறிப்பிட்ட உபவேந்தர், தனியார் ஒருவரிடம் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பெண்கள் தங்குமிடத்தின் கூரை முழுமையாக காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலுள்ள மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாலும், கிளைகள் உடைந்து விழுந்துள்ளதாலும் பல்கலைக்கழகத்திற்கு உள் நுழையவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், இதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் உப வேந்தர் குறிப்பிட்டார். 3500 மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளதால் பல்கலைக்கழகம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்படுகின்றது எனவும் காற்றின் பாதிப்பினால் சேதமடைந்துள்ளவற்றைச் சரிசெய்வதற்கு ஒரு வாரமேனும் தேவைப்படுவதனாலேயே இவ்வாறு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment