Monday, July 14, 2014

நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை! ஜீ. ஏ. சந்திரசிறி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை தான் பெரிதாக பொருட்படுத்தப் போவதில்லையென வட மாகாண ஆளு நராக மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். கூட்டமைப் பினரின் எதிர்ப்பும் வட மாகாண சபையின் புறக்கணிப்பும் எனக்கொன்றும் புதிதல்ல என தெரிவித்த ஆளுநர் “நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை” யெனவும் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் வட மாகாண ஆளுநராக மீண்டும் இராணுவ அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண சபையும் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் சார்ந்த அரசியல் நிர்வாக நடவடிக்கைகளில் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தலையிடுவது சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த ஐந்தாண்டு காலம் வட மாகாண ஆளுநராகப் பணியாற்றிய ஜீ. ஏ. சந்திரசிறி இப்பிராந்திய மக்களின் தேவைகளை நாடிபிடித்தறிந்து தனக்கு இயலுமான நன்மைகளையும் சேவைகளையும் செய்தவர். பாடசாலைகள் வீதிகள், வைத்திய சாலைகள். மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் என்பன வழங்கப்பட்டு பயங்கர வாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டது. ஜீ. ஏ. சந்திரசிறியின் சேவைகளை அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புகள் பொதுமக்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டோர் எனப் பல தரத்தினரும் பாராட்டியுள்ளனர்.

வழமையான அரசியல் குரோத நோக்கின் அடிப்படையிலே தமிழ் கூட்டமைப்பு இவரின் மீள் நியமனத்தை எதிர்க்கிறது. அரசின் அபிவிருத்திப் பணிகளில் மக்களின் கவனம் சென்றால் தங்களது அரசியல் பிழைப்புகள் தவிடிபொடியாக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழ் கூட்டமைப்பினர் இந்நியமனத்தை எதிர்ப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். சகல தரப்பினராலும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலே ஜனாதிபதியவர்கள் மீண்டும் இவரை வட மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment