Wednesday, July 9, 2014

அளுத்கம, பேருவளையில் சாட்சிகளும் தடயங்களும் அழிக்கப்படவில்லை! ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாக தெரிவிப்பு!

அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதி களில் திருத்தப்பணிகளை ஆரம்பிக்க முன்னர் தேவையான சகல சாட்சியங்களும் தடயங்களும் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு களை மறுப்பதாகவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் தீக்கிரையான வீடுகள் மற்றும் கடைகள் சில குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டவையென்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே சகல இடங்களிலும் இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. சகல சாட்சியங்களும், தகவல்களும் திரட்டப்பட்டிருப்பதாக அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனக்கு அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் பதிலளித்த அவர், சகல சாட்சியங்களும் தகவல்களும் திரட்டப்பட்ட பின்னரே புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சந்தேகத்துக்கிடமான இடங்களில் மாத்திரம் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் சோதனைகள் நடத்தியுள்ளனர். பாணந்துறையில் வர்த்தக நிலையமொன்று தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருந்தமையால் அங்கு இரசாயனப் பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

வெலிப்பன்ன பிரதேசத்தில் உயிரிழந்த இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விசாரணைகளில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். இந்த சம்பவங்கள் குறித்த மஜிஸ்திரேட் விசாரணைகளை தம்மால் கையாளமுடியுமென பொலிஸார் தரப்பில் கூறப்பட்டமையால் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை. சகல விசாரணைகளிலும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் அவசியமில்லை.

அதேநேரம், உயிரிழந்த இருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை மஜிஸ்திரேட் கோரியுள்ளார். ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவருடைய உயிரிழப்பு குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம், சம்பவம் நடைபெற்ற சமயம் கடமையிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் துப்பாக்கிகளிலிருந்த குண்டுகள் குறித்த விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் விரைவில் கிடைக்கும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment