Monday, July 7, 2014

பிரதமர் மோடியின் அரசு ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளி களை விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளது. இந்திரா காங்கிரஸின் அரசியல் கொள்கைகளை கடுமை யாக விமர்சித்தாலும், பிரதமரின் கொலையாளிகளை விடுவிக்க பா.ஜ.க. ஒருபோதும் விரும்பமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதமாக பதில் அளிக்கப்பட்டதால், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து ராஜிவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி அறிவித்தார்.மேலும் இது குறித்து மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்கவில்லை என்றால், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களை விடுவிப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெப்ரவரி 20 ம் திகதி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஒருநாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து ஏப்ரல் 25ம் திகதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சாந்தன். முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment