அடிப்படைவாதிகள் தங்கள் மார்க்கத்திற்கு இழுக்கு உண்டுபண்ணுகிறார்கள்! - மகிந்தர்
ஒரு மதத்தை வன்மையாகக் கண்டிப்பதும் ஒரு மதத்திற்கு எதிராகச் செயற்படுவதும் தத்தமது மதங்களுக்கு செய்யும் நிந்தனையாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலியில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்சில விடயங்களை சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டுபோய், பெரும் பிரச்சினையை ஏற்படுவதாக வெளியுலகிற்குக் காட்டுவதற்காக சிலர் முயன்று வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அடிப்படைவாதிகளாக இருக்கக் கூடாது. அடிப்படைவாதிகளால் தங்களது மதங்களுக்கும் நல்லது நடப்பதில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மெதோதிஸ்த சபையின் 200 ஆவது நிறைவு விழாவின் போது, புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காலி மெதோதிஸ்த தேவாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் ரூபா 40 இலட்சம் செலவில் இந்த தேவாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
எந்த மதத்தில் நாங்கள் பிறந்தாலும் தாம் வாழ்கின்ற தாய்நாட்டுக்கு மரியாதை செய்ய வேண்டும். இந்த தேவாலயத்தை புனர்நிர்மாணம் செய்து கிறிஸ்தவர்களுக்கு கையளிப்பது வரலாற்றுத் தேவையாகும்.
மத ஒற்றுமை பற்றிய தேவைப்பாடு இக்கால கட்டத்தில் மிகவும் வேண்டப்படுகின்றது. இந்நேரத்தில் மதப் புரிந்துணர்வுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்ரீலங்கா மெதோதிஸ்த திருச்சபையின் பேராயர் கலாநிதி ஜெபபேஸன் அடிகளார் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், அமைச்சர் பியசேன கமகே, முன்னாள் கடற்படைத் தளபதி ஜனரல் ஜயனாத் கொழம்பகே, கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா மற்றும் பல முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment