காசா மற்றும் உக்ரேன் மீதான அமெரிக்காவின் பொய்களும், போலித்தனமும்! Bill Van Auken
“ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மழலைகள் என சுமார் 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்—அவர்களுக்கும் உக்ரேனிய நெருக்கடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களின் உயிரிழப்பு சொற்களில் விவரிக்க முடியாத ஒரு குமுறலாக இருக்கிறது." —இது உக்ரேனிய விமான வெடிப்புக் குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியது.
"யுத்தம் கடுமையானது, அதை நான் பகிரங்கமாக கூறி இருந்தேன், மீண்டும் அதை நான் கூறுவேன். இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை செய்வதற்கான அதன் உரிமையை நாங்கள் பாதுகாக்கிறோம் ..." —இது காசாவில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்கப்பட்ட போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி கூறியது.
"இதுநாள்வரையிலான சமூகங்கள் வர்க்கப் பகமைகளால் நகர்ந்துள்ளமையால், அறநெறி என்பது எப்போதுமே வர்க்க அறநெறியாக இருந்துள்ளது ..." —இது டூரிங்கிற்கு-மறுப்பில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதாகும்.
கடந்த வாரத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான போலித்தனமும், பொய்களும் உலக மக்களின் கருத்துகள் மீது வீசப்பட்டிருக்கின்றன, அவை சமீபத்திய வரலாறில் சில முன்னுதாரணங்களையும் கொண்டிருக்கின்றன.
இது எப்போது பிரகாசமாக முன்னால் வருகிறதென்றால், உக்ரேனில் மலேசிய பயணிகள் ஜெட் விமான வெடிப்பில் 298 பயணிகள் மற்றும் விமானக்குழு உறுப்பினர்களின் உயிரிழப்புகளுக்குக் காட்டப்படும் எதிர்வினையோடும், இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் காசா தாக்குதலில் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள உயிரிழப்புகளுக்குக் காட்டப்படும் விடையிறுப்போடும் ஒருவர் முரண்படும் போது, இது பிரகாசமாக தெரிய வரும்.
உக்ரேனிய விமான விபத்து சம்பவத்தில், நிரூபித்துக் காட்டுவதற்கு ஒரு ஆதார துணுக்கும் கூட இல்லாமல், ரஷ்யாவும் மற்றும் உக்ரேனின் கிழக்கில் சண்டையிட்டு வரும் கியேவ் விரோத படைகளும் பாரிய படுகொலையாளர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கின்றன. தோற்றப்பாட்டளவில் ஜூலை 17இல் அந்த போயிங் 777 சுட்டு வீழ்த்தப்பட்டதன் முதல் செய்தி வந்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகத்தால் இந்த போக்குத்தான் எடுக்கப்பட்டு இருந்தது — உத்தியோகபூர்வ செய்திகளோடு அதே அணிவகுப்பில் நடைபோட்ட ஊடகங்களாலும் அது எதிரொலிக்கப்பட்டது.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட அவரது முதல் அறிக்கையில், அந்த விமான வெடிப்பின் மரணங்களை "இதயத்தை பிளப்பதாக," ஒரு "கொடூர இழப்பாக" மற்றும் "சொற்களில் விவரிக்க முடியாத ஒரு குமுறலாக" ஒபாமா வர்ணித்தார். ஊடங்களும் அதே தொனியை, அதில் உயிரிழந்தவர்களின் விபரங்களோடும் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்த இரங்கல் செய்திகளோடும் பின்தொடர்ந்தன.
காரணம் என்னவாக இருந்தாலும், அந்த 298 அப்பாவி மக்களின் உயிரிழப்பு ஒரு கொடூரமான துயரமாகும். ஆனால், காசாவில் கொல்லப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 700ஐ எட்டி வருகின்ற நிலையில், அமெரிக்க-நிதியுதவி அளிக்கப்பட்ட அந்த தாக்குதலுக்கு வாஷிங்டன் மற்றும் ஊடகங்களின் மூச்சடைக்கும் இரக்கமற்ற விடையிறுப்போடு அது எந்தளவிற்கு முரண்படுகிறது பாருங்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்த்து போராட முடியாத அப்பாவி பொதுமக்கள், அவர்கள் குறித்த அடையாளங்கள் கூட பெரிதும் பதிவு செய்யப்படவில்லை, அத்தோடு அவர்களது அன்புக்குரியவர்களின் மரண வேதனைகள் கூட பொதுவாக புறக்கணிக்கப்பட்டிருந்தன.
ABC செய்தி நிகழ்ச்சியான "This Week"இன் ஒரு நேர்காணலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கெர்ரி, காசாவில் நடக்கும் பாரிய கொலைகள் ஒரு இனப்படுகொலையாகும் மற்றும் யுத்த குற்றமாகும் என்ற குற்றச்சாட்டுக்களை உதறித் தள்ளியதோடு, “அந்த புலம்பல்களை நாம் பல பலமுறை கேட்டிருக்கிறோம்," என்று இழிவாக அறிவித்தார். “யுத்தம் அருவருப்பானது, மேலும் மோசமான விடயங்கள் நடக்க உள்ளன," என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
இவ்விதத்தில், உக்ரேனில் விமான உயிரிழப்புகளின் மீது தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, ரஷ்யாவிற்கு எதிராக அறநெறி கடப்பாடுகளின் மீது மிகவும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற அதே அரசாங்கம், காசாவில் மக்கள் கொல்லப்படுவதில் முற்றிலும் உடந்தையாய் இருக்கிறது. அந்த சம்பவத்திற்கு நேரடியாக பொறுப்பான இரத்தவெறி கொண்ட இஸ்ரேல் அரசுக்கு அதன் அரசியல் ஒப்புதலை மட்டுமல்ல, மாறாக மேற்கொண்டும் தாக்குவதற்கு ஒரு நிபந்தனையற்ற ஆதரவையும் அது வழங்குகிறது.
இத்தகைய கொடூரமான சம்பவங்கள் கட்டவிழ்ந்து வருகின்ற நிலையில், இந்த இரண்டு மனித துயரங்களுக்கும் அவை காட்டிய முற்றிலும் வெவ்வெறான விடையிறுப்புகளில் இருந்த விசித்திரமான முரண்பாடுகளோடு கூடிய பிரச்சார முயற்சியிலிருந்து, வாஷிங்டனோ அல்லது மேற்கத்திய ஊடகங்களோ பின்வாங்கவில்லை.
சட்ட நெறிமுறைகளில் “அசுத்தமான கரங்களின்" தத்துவங்கள் தங்கியிருக்கின்றன, அது நீதிமன்றத்தின் உதவி கோரும் எவரொருவரும் அவரவரின் வாதத்திற்குரிய விடயத்தில் தவறு செய்யாத அப்பாவியாக இருக்க வேண்டும் என்பதை தாங்கிப் பிடிக்கிறது. அதுபோன்றவொரு தத்துவத்தை உலக அரசியலின் நிஜத்தோடு பொருத்திப் பார்த்தால், அது அமெரிக்க அரசாங்கத்திற்கு தான் பொருந்துகிறது.
அறநெறி விடயம் மீது ஏதாவதொரு சொற்பொழிவை வழங்க, உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களையும் நிறுத்தினால், வாஷிங்டனே அடிமட்டத்தில் கடைசியாக நின்று கொண்டிருக்கும். இடைவிடாது குண்டுவீசுவதில் ஆகட்டும் அல்லது காசாவில் வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் மனித உயிர்களை அழிப்பதில் ஆகட்டும் ஒபாமா நிர்வாகம் இவற்றில் நேரடியாக உடந்தையாய் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கம் கடந்த தசாப்தத்தில் மத்திய கிழக்கில் ஏறக்குறைய 500,000 மற்றும் ஒரு மில்லியனுக்கு இடையிலான மக்களின் உயிர்களைப் பறித்துள்ள இராணுவ நடவடிக்கைகளை அதுவே நடத்தியுள்ளது, இதில் பாரிய பெரும்பான்மையினர் அப்பாவி பொதுமக்களாவார்கள்.
அமெரிக்காவினதும் மற்றும் அந்த மலேசிய விமான பேரிடருக்காக மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டுவதில் வாஷிங்டனின் பிரதான பங்காளியான உக்ரேனினதும் கடந்தகால வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கையில், அந்த குற்றஞ்சாட்டுபவர்கள் மீதே நேரடியாக சந்தேகங்களைத் திருப்புவதற்கு அங்கே எல்லா காரணங்களும் இருக்கின்றன.
முதல் சான்றாக, அந்த இரண்டு அரசாங்கங்களுமே பயணிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதில் புதியவை அல்ல. மிக சமீபத்திய முந்தைய சம்பவம் அக்டோபர் 2001இல் நடந்தது, அப்போது இஸ்ரேலுடன் பிணைப்புக்கொண்டிருந்த ஒரு சேர்பிய ஏர்வேஸ் விமானத்தை உக்ரேன் இராணுவம் ஒரு ஏவுகணைக் கொண்டு தாக்கியதில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரும் கொல்லப்பட்டார்கள்.
வாஷிங்டன் அதன் பங்கிற்கு, அதேபோன்ற சம்பவத்தில் முந்தைய மிகப் பெரிய உயிரிழப்புகளில் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்தது. 1988இல், அதிநவீன அமெரிக்க யுத்தக்கப்பலான வின்சென், ஈரானிய கடல்பகுதிக்குள் சென்று, ஈரானிய ஏர்லைன்ஸ் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதில் இருந்த 290 பேரும் மொத்தமாக கொல்லப்பட்டார்கள். இந்த அட்டூழியத்திற்கு வாஷிங்டன் ஒருபோதும் மன்னிப்பு கோரவில்லை என்பது மட்டுமல்ல, ஏவுகணையை ஏவிய அந்த கப்பலின் முதன்மை அதிகாரிக்கு ஒரு விருதையும் வழங்கி கவுரவித்தது.
மலேசிய ஏர்லைன்ஸ் பேரிடரைக் குறித்து குமுறிய ஊடக செய்திகள் எதிலுமே, இத்தகைய அதிர்ச்சியூட்டிய வரலாற்று முன்னுதாரணங்கள் குறிப்பிடப்படவே இல்லை என்பதைக் குறிப்பிடுவதும் மதிப்புடையதாக இருக்கும்.
அமெரிக்காவும் கியேவில் உள்ள ஆட்சியும் மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டியுள்ளதோடு, கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ்-விரோத கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதமளித்துள்ளது என்ற அடித்தளத்தில் மற்றும் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த உபயோகப்படுத்தப்பட்டதாக கருதப்படும் விமானந்தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு அது ஆயுதப்பயிற்சி அளித்தது என்ற அடித்தளத்திலும், மலேசிய ஏர்லைன்ஸ் விபத்துக்கான முழு பொறுப்பையும் சுமத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அசுரத்தனமாக சித்தரித்தன.
இதுவரையில், யாருடைய முந்தைய வெறித்தனமான ரஷ்ய-விரோத குற்றச்சாட்டுக்கள் பொய்கள் என அம்பலமாகி உள்ளதோ, அதே உக்ரேனிய உளவுத்துறை அமைப்பால் யூ-டியூப்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் காணொளிகளை இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலுமாக அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அந்த புள்ளிக்கு கூடுதலாக, புட்டினுக்கு எதிரான குற்றச்சாட்டின் அரசியல் சாரம்—அதாவது கிழக்கு உக்ரேனின் மேலெழுச்சிகளை அடக்க அவர் தவறியதால் அந்த பேரிடருக்கு அவரே பொறுப்பாகிறார் என்பது—வாஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு இன்னும் மேலதிகமாக பொருந்துவதாக இருக்கிறது. அதற்கும் மேலாக, 100,000க்கும் மேற்பட்ட சிரிய மக்களின் மரணங்களோடு அந்நாட்டைச் சின்னாபின்னமாக ஆக்கி, ஒரு மிக பரந்த அளவிலான மனித துயரத்தை உருவாக்கியுள்ள ஒரு உள்நாட்டு யுத்தத்தை தூண்டுவதில், ஒபாமா நிர்வாகம் சிரியாவில் உள்ள இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு அரசியல்ரீதியாக ஆதரவளித்தது, நிதியுதவி அளித்தது மற்றும் ஆயுத உதவியும் அளித்தது. லிபியாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக, 50,000 லிபிய மக்களைக் கொன்ற, அதேயளவிற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்திய, நேட்டோ குண்டுவீச்சோடு ஆதரிக்கப்பட்ட, இதே போன்றவொரு யுத்தத்தை அது நடத்தியது.
அதுவே இஸ்ரேலியர்கள் நடத்தும் பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலைகள் என்று வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் இராணுவ உதவியாக பில்லியன் கணக்கான டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்ற அமெரிக்காவிற்கு அந்தமாதிரியான அறநெறி தரமுறைகள் பொருந்துவதில்லை.
உக்ரேன் விவகாரத்திலேயே கூட, தற்போதைய நெருக்கடிக்கான முதன்மை பொறுப்பு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி மீதே விழுகிறது, கடந்த பெப்ரவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக கியேவில் பாசிசவாதிகள்-முன்னிலை வகித்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அவை ஆதரித்ததோடு, அதற்கு ஒத்து ஊதியிருந்தன, அதுவே மொத்த இரத்தந்தோய்ந்த நிகழ்வுப்போக்கையும் இயக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
வாஷிங்டன், அப்போதும் சரி இப்போதும் சரி, யுரேஷியா மற்றும் பூகோளம் தழுவிய மேலாதிக்கத்திற்கான அதன் வேட்கைக்கு ரஷ்யாவை ஒரு தடையாக கருதி அதை நீக்கும் நோக்கில் ஒரு ஆத்திரமூட்டும் கொள்கையைப் பின்தொடர்ந்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்த என்ன உண்மைகள் வெளியானாலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் அதைக் கடந்தும் தங்களின் இராணுவவாத மற்றும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுக்க இந்த துயர சம்பவத்தை சுரண்டுவதே அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளின் முதன்மை நோக்கமாகும் என்பது மிக வெளிப்படையாக தெளிவாகி உள்ளது.
ரஷ்யாவின் தரப்பிலிருந்து, அதாவது அந்த விமான பேரிடர் மீதான கவலைப்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது கேள்விகளையும், உண்மைக்கு புறம்பான முரண்பாடுகளையும் அது எழுப்புகிறது, அது உலகம் தழுவிய "பிரச்சாரம்" மற்றும் "சூழ்ச்சி கோட்பாடுகளுக்கு" கண்டனம் தெரிவித்துள்ளது, மற்றும் ரஷ்ய ஊடகங்கள், அரசாங்கம் மீது பரப்பி விடப்படும் பொய்களை ஒதுக்கித் தள்ளியுள்ளன. எவ்வாறிருந்த போதினும், மேற்கின் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான பிரச்சார எந்திரத்தோடு ஒப்பிடுகையில் கிரெம்ளின் ஒரு ஆரம்ப படியில் இருக்கிறது, அது வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளிடம் இருந்து வரும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் மூர்க்கமான பழித்தூற்றல்களைக் கேள்வியின்றி திரும்ப திரும்ப கூறி வருவதோடு, அவற்றை பெரிதாக்கிக் காட்டுகிறது.
வாஷிங்டன் மற்றும் அதன் அதிகாரிகளால் கூறப்படும் எதையுமே அதன் உண்மை மதிப்பில்லாமல் ஒப்புக் கொள்ள முடியாது என்பதை சமீபத்திய வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. உலகில் வேறெந்த அரசாங்கமும் அமெரிக்கா அளவிற்கு இத்தனை மோசமான பொய்களுக்கு உடந்தையாய் இருந்திருக்காது. அதன் நம்பகத்தன்மை அமெரிக்காவிற்குள்ளேயே மிக மிக குறைவாக இருக்கிறது, அங்கே "பேரழிவு ஆயுதங்கள்" குறித்த பொய்களின் அடித்தளத்தில் தொடங்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான யுத்தத்தின் கொடுமையான அனுபவம், அமெரிக்க உழைக்கும் மக்களின் நனவில் பதிந்து போயுள்ளது.
இந்த அல்லது அந்த நாட்டின் மனித உயிரிழப்புகள் மீதோ அல்லது குற்றகரமான முறையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைமீறல்கள் மீதோ வெளிப்படும் வாஷிங்டனின் சீற்றமான வாதங்கள், எப்போதும் போலித்தனத்தில் வீழ்ந்திருக்கின்றன. காசாவில் அப்பாவி மக்களை அறநெறியின்றி படுகொலை செய்வதை ஒரேசமயத்தில் ஆதரிக்கின்ற அதேவேளையில், உக்ரேனில் MH17 விமான பேரிடரோடு தொடர்புபடுத்தி அது விடுக்கும் போலியான அறநெறி முறையீடுகள், 137ஆண்டுகளுக்கு முன்னர் பிரெட்ரிக் ஏங்கெல்ஸால் வழங்கப்பட்ட பகுப்பாய்வு அன்றைக்கு போலவே இன்றைக்கும் உண்மையாக இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.
அறநெறி என்பது "எப்போதும் ஒரு வர்க்கரீதியிலான அறநெறியாகவே" இருந்துள்ளது என்று ஏங்கெல்ஸ் எழுதினார். அது "ஒன்று ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்துகிறது, அல்லது... அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களுக்கு எதிரான தாக்குதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது."
0 comments :
Post a Comment