Sunday, July 20, 2014

அமெரிக்க சிறைச்சாலைகளில் சித்திரவதையும், மரணங்களும். Andre Damon

பேச்சுவழக்கில் பில்லியனர்களின் குடியிருப்பு பகுதி என்று குறிப்பிடப்படும், நியூ யோர்க்கின் மத்திய பூங்காவின் தெற்கு ஓரத்தில் வரிசையாக நிற்கும் மிக உயர்ந்த பல பில்லியன் டாலர் மதிப்பிலான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து பார்த்தால், கிழக்கு ஆற்றின் கரையோரத்தில் ரைக்கர்ஸ் தீவு அமைந்திருப்பது தெரியும். அழுக்கடைந்த மற்றும் அவலட்சணமான 12,000கும் அதிகமான சிறைக்கைதிகளை அடைத்து வைத்திருக்கும் அந்த பரந்து விரிந்த தீவு சிறைச்சாலை வளாகம், அமெரிக்க பில்லியனர்களின் ஐந்தாவது வசிப்பிடமான மான்ஹாட்டனுக்கும், மற்றும் மொத்த எண்ணிக்கையில் பாதி குழந்தைகள் எந்த நகரத்தில் சாப்பிடுவதற்கு கூட போதிய வசதியில்லாத குடும்பங்களில் வாழ்கின்றனவோ அந்த புரோன்க்ஸ் நகரத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

“அங்கே நிறைய காட்டுமிராண்டித்தனங்கள்... கொடூரமான காட்டிமிராண்டித்தனங்கள் உள்ளன," என்று ரைக்கர்ஸில் இருந்து மனநோய் மருத்துவ சேவைக்கான முன்னாள் இயக்குனர் நியூ யோர்க் டைம்ஸிற்கு தெரிவித்தார். சிறைச்சாலையினது உள்ஆவணங்களின் மீளாய்வை அடிப்படையாக கொண்டு அந்த பத்திரிகை திங்களன்று குறிப்பிடுகையில், வெறும் பதினொரு மாத காலகட்டத்தில், 129 சிறைக்கைதிகள், “சிறைச்சாலை சிகிச்சை மையங்களின் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு" சிறைச்சாலை பாதுகாவலர்களால் மிக கடுமையாக அடித்து காயப்படுத்தப்பட்டு இருந்தனர். அந்த கைதிகளில் ஐந்தில் நால்வர், கைகள் கட்டப்பட்டு அடிக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவ பணியாளர்கள் அடிப்பதை நிறுத்துமாறு பாதுகாவலர்களிடம் கெஞ்சிய போதும் கூட, சிறைக்கைதிகள் கட்டப்பட்டு, நனவு இழக்கும் வரையில் வெண்கல கைவளையங்களால் இடிக்கப்பட்டார்கள் என்பதையும், அந்த விசாரணை அறை சுவர்களில் இரத்தம்-தெறித்திருந்ததையும் டைம்ஸ் கட்டுரை சித்தரிக்கிறது. இது ஏதோ "மூன்றாம் உலக" சர்வாதிகாரத்தில் நடந்து கொண்டிருப்பதல்ல, மாறாக உலக முதலாளித்துவத்தின் நிதியியல் மையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கானவர்களை அவலநிலைமைக்குள் தள்ளிவிட்டு, சில பத்து ஆயிரக் கணக்கானவர்களின் ஒரு செல்வந்த மேற்தட்டு தானே அனைத்தையும் விழுங்குகின்ற அமெரிக்காவில், வர்க்க உறவுகளின் மொத்த காட்டுமிராண்டித்தனமும், அமெரிக்காவினது நிரம்பி வழியும் சிறைச்சாலைகளில் வெளிப்படுகிறது.

ரைக்கர்ஸ் தீவு ஒரு விதிவிலக்கல்ல, ஒரு நடைமுறையாக உள்ளது. மியாமியின் Dade Correctional Institutionஇல் பாதுகாவலர்களால் முந்தைய இரவு கொதிநீர் ஊற்றி கொல்லப்பட்ட 50 வயதான சிறைக்கைதி டேரன் ராய்னியின் உரிந்து போன "உடல் தோலின் மிச்சமீதியைச்" சுத்தப்படுத்த அவர் எவ்வாறு பாதுகாவலர்களால் காலையில் எழுப்பப்பட்டார் என்பதை நினைவுகூர்ந்த ஒரு சிறைக்கைதியின் நேர்காணலை கடந்த மாதம் மியாமி ஹெரால்டு பிரசுரித்தது.

ஒரு சித்திரவதை கூடத்திற்குள் மேலிருந்து தண்ணீர் கொட்டும் மேற்குழாய்களில் ஒன்றை, அதன் கையாள்வதற்கான கட்டுப்பாடு அருகிலிருக்கும் ஒரு சுத்திகரிப்பு அறையில் இருந்த நிலையில், பாதுகாவலர்கள் அதை திறந்து விட்டிருந்தார்கள். மேலிருந்து தண்ணீர் கொட்டும் மேற்குழாய் அறைகளில் அவர்களின் குற்றவாளிகளை அடைத்து வைத்து, சிரிப்பதும், எள்ளி நகையாடுவதும், “இந்த சூடு உனக்கு போதுமா?” என்று கேட்பதும் அவர்களுக்கு ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்தது.

ஜூலை 4இல் வாரயிறுதியின் போது, புளோரிடா மாநில சிறைச்சாலைகளில் இருந்து மர்மமான முறையில் இன்னும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதனோடு சேர்ந்து புளோரிடாவில் விசாரணையின் கீழ் தடுப்பு காவல் சிறைச்சாலை மரணங்களின் இப்போதைய மொத்த எண்ணிக்கை பத்தாக ஆகி உள்ளது.

பரவலாக பத்திரிகைகளில் எப்போதாவதும் மற்றும் மேலோட்டமாகவும் மட்டுமே தெரிவிக்கப்படுகின்ற அத்தகைய சம்பவங்கள், ஜனநாயகத்தின் ஒரு முன்மாதிரியாகவும் மற்றும் உலகெங்கிலும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாவலராகவும் இருந்து வரும் அமெரிக்காவின் பாசாங்குத்தனத்தை முழுமையாக ஏளனப்படுத்துகிறது.

அமெரிக்க சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட அல்லது சித்திரவதை செய்யப்பட்டவர்களில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லது ஊனமுற்றவர்களும் பெரும் பங்கினராக உள்ளனர். ஒரு பிபிசி புலனாய்வின்படி, "2003இல் இருந்து மன நோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்டவர்கள், அமெரிக்க சிறைகளில் துஷ்பிரயோகத்தாலோ அல்லது அலட்சியத்தின் விளைவாகவோ இறந்துள்ளனர்."

அமெரிக்க சிறைச்சாலைகளில் மனநோய் பிரச்சினைகளோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மன நோய்க்கான அரசு நிதியுதவி குறைக்கப்பட்டதன் பாகமாக, அமெரிக்காவில் மனநோயைக் குணப்படுத்தும் மையங்கள் அமைப்புரீதியாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்களால் 95 சதவீதம் நிரம்பி உள்ளது.

டிக்கென்சியன் இங்கிலாந்தினது கடனாளிகளின் சிறைச்சாலைகளை நினைவுபடுத்தும் விதத்தில் அமெரிக்காவில் நிலைமைகள் உருவாகி வருகின்றன. கடந்த வாரம், ஒரு பெண்மணியின் குழந்தைகள் பல நாட்கள் பள்ளிக்குச் செல்லாததால் விதிக்கப்பட்ட, காரணமற்ற விடுப்பு அபராதங்களை செலுத்த தவறியதற்காக இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கப்பட் டிருந்தபோது, சிறையிலேயே 55 வயதான ஏழு குழந்தைகளின் அந்த தாய் இறந்து போனார். கட்டணங்களைச் செலுத்தவோ அல்லது இதர நீதிமன்ற அபராதங்களைச் செலுத்தவோ தவறியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பத்து ஆயிரக் கணக்கான ஏழை மக்களில் அந்த பெண்மணியும் ஒருவராக இருக்கிறார்.

அமெரிக்காவில், ஒவ்வொரு சமூக பிரச்சினையும், அது துப்பாக்கி வன்முறை ஆகட்டும் அல்லது உள்நாட்டு துஷ்பிரயோகம் ஆகட்டும், அது கண்காப்பு செய்யப்படுவதில் இருக்கும் பிரச்சினையாகவும் மற்றும் நீண்டகால தண்டனைகளை விதிப்பதற்கும் மற்றும் நிறைய பொலிஸை நியமிப்பதற்கும் ஒரு காரணமாகவும் கையாளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அதிகரித்து வருகின்ற ஒரு பரந்து விரிந்த சிறைச்சாலை அமைப்புமுறைக்குள், ஒட்டுமொத்தமாக ஏனைய அனைத்து அபிவிருத்தி அடைந்த அனைத்து நாடுகளையும் விட அதிக மக்களை அமெரிக்கா சிறையில் அடைத்துள்ளது.

அமெரிக்க சிறைச்சாலைகளில் சித்திரவதை மற்றும் படுகொலைகள் குறித்து சமீபத்தில் வெளிவந்திருப்பவை, அமெரிக்க பொலிஸால் ஒவ்வொரு நாளும் திணிக்கப்பட்ட மிரட்டல், வன்முறை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தின் ஏதாவவொரு அம்சத்தை தொடுகிறது. நாடு முழுவதிலும் ஆத்திரத்தைத் தூண்டிவிட்ட வீடற்ற ஒரு மன நோயாளியான ஜேம்ஸ் போய்ட் இன் படுகொலை உட்பட, 2010இல் இருந்து, 26 பேரை ஆல்புகெர்க்கி பொலிஸ் துறை கொன்றுள்ளது. ஆல்புகேர்க்கி பொலிஸ் துறை போய்ட் ஐ கொலை செய்ய பயன்படுத்திய அதேமாதிரியான தாக்குதல் துப்பாக்கிகளில், குறைந்தபட்சம் இன்னும் கூடுதலாக 350தாவது விலைக்கு வாங்க இருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் பொலிஸ் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு "நியாயப்படுத்தப்பட்ட ஆட்கொலைகளை" நடத்துகிறது. ஜூலை 4 வாரயிறுதியில், சிகாகோ பொலிஸ் ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டதில், இருவர் உயிரிழந்தனர்.

இரவு நேர, கதவைத் தட்டாமல் நடத்தப்படும் பொலிஸ் தேடுதல் வேட்டைகள் அமெரிக்காவில் அதிகளவில் மேலோங்கி உள்ளன, ஒவ்வொரு 24 மணி நேரமும் SWAT குழுக்களால் 100 தேடுதல் வேட்டைகளுக்கும் அதிகமாக நடத்தப்படுகின்றன. கடந்த மாதம், அமெரிக்க மக்கள் சுதந்திரங்களுக்கான சங்கம் குறிப்பிடுகையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதமேந்திய வாகனங்கள் உட்பட இராணுவத்துறை 4.3 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உடைமைகளைப் பொலிஸ் துறைக்கு மாற்றி இருப்பதாக குறிப்பிட்டது.

பொலிஸ் வன்முறையின் அதிகரிப்பு என்பது சமூக சமத்துவமின்மை மற்றும் ஒரு முடிவில்லாத, தீவிரமடைந்து வரும் தொடர்ச்சியான யுத்தங்களுக்கு இடையே சமூக காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு வெளிப்பாடாகும். 2008இல் இருந்து அந்நாட்டின் பில்லினியர்களின் செல்வ வளம் இரட்டிப்பாகி உள்ள நிலையில், தொழிலாளர்களின் ஊதியங்களோ குறைக்கப்பட்டு வருவதோடு, சமூக திட்டங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் எந்த அமெரிக்க நகரையும் விட உயர்ந்த வாழ்க்கை தரங்களைக் கொண்டிருந்த டெட்ராய்டில், அங்கே குடியிருக்கும் ஆயிரக் கணக்கானவர்களின் வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது, அத்தோடு அந்நகர ஓய்வூதியதாரர்கள் அந்நகரின் மில்லியனர் பங்குபத்திரதாரர்களுக்கு பணம் வழங்குவதற்காக அவர்களின் ஓய்வூதியங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து வருகிறார்கள்.

பொலிஸ் வன்முறை தற்போது வீடற்றவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட சமூகத்தின் மிகவும் பாதிக்கப்பட்ட உட்கூறுகளையும், ஏழைகளையும் இலக்கில் வைத்துள்ளது. ஆனால் இந்த நடைமுறைகள், சமத்துவமின்மை மற்றும் யுத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பு வளர்ந்து வருவதற்கு இடையே, மக்களின் ஒரு பரந்த பிரிவுக்கு எதிராக பயன்படுத்த தயாரிப்பு செய்யப்பட்டு வருவனவாகும்.

இது ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் பாகமாக உள்ளது. ஜனாதிபதியோ அமெரிக்க பிரஜைகளைப் படுகொலை செய்வதற்கான அவரது "உரிமைகளை" பாதுகாக்கிறார், CIA விலக்கீட்டு உரிமையோடு செனட்டின் ஆவணங்களை திருடுகிறது, அமெரிக்கர்களின் மிகவும் அந்தரங்கமான தனிப்பட்ட தரவுகள் கூட உளவுத்துறை முகமைகளால் வாசிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படுகிறது. ஜனநாயகத்தின் பிடி நழுவி வருகின்ற நிலையில், சமூகத்தின் மீதான நிதியியல் மேற்தட்டின் சர்வாதிகாரம் இன்னும் கொடூரமாக, அப்பட்டமாக, பகிரங்கமாக மாறி வருகிறது.

சமத்துவமின்மை, யுத்தம் மற்றும் பொலிஸ் வன்முறை ஆகியவை ஒரு ஆரோக்கியமான சமூக அமைப்புமுறை மீதான வெறும் களங்கங்கள் அல்ல. அதற்கு மாறாக, ஒருபுறம் வறுமை மற்றும் அவலத்தின் தவிர்க்கவியலா விளைபொருளையும் மறுபுறம் பெரும் செல்வ வளத்தின் திரட்சியையும் கையாள முடியாத முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சோசலிச இயக்கத்தை ஒழுங்கமைப்பதும் மற்றும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதுமே, விவகாரங்களின் இந்த நிலைக்கு ஒரே மாற்றீடாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com