Sunday, July 13, 2014

மலையகத்தில் மினி சூறாவளி! 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

நாட்டில் வீசிய பலத்த காற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 376 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பதுளை பகுதியை சேர்ந்த ஆண் ஒருவர் மரம்முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மேலும் இந்த அனர்த்தத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே வீடுகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இடர்முகாமைத்தவ நிலையம் குறிப்பிடுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக 199 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜீ. குமாரசிறி தெரிவிக்கின்றார்

அங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவில் 143 வீடுகளும், வலப்பன பிரதேச செயலாளர் பிரிவில் 43 வீடுகளுக்கும், நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் 13 வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.

மாவட்டத்திலுள்ள 196 குடுப்பங்களைச் சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். இதேவேளை, மாவட்டத்தில் தற்போது ஒரு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பதுளை மாவட்டத்தில் பலத்த காற்று காரணமாக 150 அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஹல்தமுல்லை பிரதேச செயலாளர் பிரிவிலேயே, பலத்த காற்றினால்அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பி.எம்.எல். உதயகுமார தெரிவிக்கின்றார்.

ஹல்தமுல்லை பகுதியில் 75 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அப்புத்தளை, வெலிமடை, ஊவா பரணகம மற்றும் சொர்ணா தொட்ட ஆகிய பகுதிகளிலும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி ஹல்பே பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 30 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருவேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இம்புலலே பிரதேச செயலாளர் கீர்த்தி ஜயசிங்க குறிப்பிடுகின்றார். இதனிடையே பலத்த காற்று வீசுவதனால் பதுளை கொழும்பு வீதியின் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் தென்மேல் பருவகாற்று வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

(க.கிஷாந்தன்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com