கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா 2014.08.01 – 2014.08.03
கிழக்கில் கண்ணகி அம்மன் வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பின்ணிப்பிணைந்த ஒன்றாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள குக்கிராமங்கள்தோறும் கண்ணகி அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அவ்விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்ணகி அம்மன் வழிபாட்டினையும், தமிழர் பண்பாட்டினையும் எடுத்து இயம்பு வகையில் கிழக்கில் ஒவ்வொரு வருடமும் கண்ணகி கலை இலக்கிய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் கண்ணகி கலை இலக்கிய விழா இம்முறை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தம்பிலுவில் கிராமத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம், 02ஆம், 03ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழ் மண்ணோடும், தமிழர் மரபோடும் இணைந்த கதை கண்ணகி கதை. அவளின் திண்மையும், தீரமும் நிறைந்த வாழ்வும் மக்கள் நலன் நாட்டமும் அவளை மக்களின் தெய்வமாக்கின.
சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வீகமான கண்ணகி, ஈழ நாட்டில் சிங்கள தமிழ் மக்களின் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானவள். பின்னாளில் கண்ணகி 'கண்ணகையம்மன்' என கிழக்கிலங்கையில் நிலைபெற்றுவிடுவதுடன் கிழக்கிழங்கையில் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகவும் ஆகி விடுகின்றாள். கிழக்கிலங்கையில் வைகாசித் திங்கள் அவளுக்குரியதாகும். இதன் போது கிழக்கிலங்கை விழாக்கோலம் பூணும்.
மக்கள் தெய்வமான கண்ணகியின் கதை சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கண்ணகி காவியம், கண்ணகி வழக்குரை, குளுத்திப்பாடல், கண்ணகையம்மன் நாடகம், கண்ணகி வசந்தன் கும்மி, கரகம், காவடி, கொம்பு முறி, குரவைக் கூத்து என தமிழில் கண்ணகி கலை இலக்கியமாக விரிந்துள்ளது.
கண்ணகிக்குரிந்தான வைகாசி மாதத்தில் அவளை நினைவு கூறவும், அவளது இலக்கியங்களைப் பரவலாக்கவுமான நோக்குடன் கண்ணகி இலக்கிய விழா 2011.06.08 அன்று தொடக்கி வைக்கப்பட்டு. அதற்கென கண்ணகி கலை இலக்கிய கூடல் என்ற அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இக் கூடலின் தலைவராக செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் செயற்படுகின்றார். இவரின் முயற்சியினாலும் கண்ணகி கலை இலக்கிய கூடல் நிர்வாகிகள் மற்றும் அபிமானிகள் மூலம் கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா வருடந் தோறும் மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகின்றது.
இவ்விழா கண்ணகி கலை இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல் பண்டைய காலம் தொடக்கம் இன்று வரை பயின்றுவரும் கண்ணகி தொடர்பான தொன்மங்களை மீட்டுப் பார்த்தல், கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக்கொணர்தல், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையேயான பொதுமைகளை ஆராய்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டே இக் கண்ணகி கலை இலக்கிய விழா தோற்றம் பெற்றது.
கிழக்கின் முதலாவது கண்ணகி விழா 2011 18,19 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இரண்டாவது விழா 2012 ஜீலை 28,29 ஆகிய தினங்களில் மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது, மூன்றாவது விழா 2013 யூன் 15,16 இல் ஆலையடி வேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இம்முறை நான்காவது கண்ணகி கலை இலக்கிய விழா திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 01ஆம், 02ஆம, ஆனி 03ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் விழாக் குழுவினரால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
2014 இன் கண்ணகி கலை இலக்கிய விழா நிகழ்வுகள் முறையே ..
ஆகஸ்ட் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதலாம் நாள் காலை தொடக்க விழா ஆரம்பமாகின்றது. காலை 7.15 மணிக்கு பண்பாட்டு பவனி விநாயகபுரம் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து பிரதான வீதி வழியாக தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையவுள்ளது. இவ் ஊர்வலத்தில் கண்ணகி வழிபாட்டு அம்சங்கள், தமிழர் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களுடன் ஊர்திகளும், நடன நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து 8.00 மணிக்கு பூஜை இடம்பெற்று 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை காலை அமர்வுகள் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலை அரங்கில் கூல வாணிகன் சாத்தனார் அரங்கு அமைக்கப்பட்டு விழாக்குழு தலைவர் வி.ஜயந்தன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறும். இன் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல்.டி.அல்விஸ், கிழக்கு மாகாண பண்பாட்டு பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எல்.விக்கிரம ஆராச்சி, பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பிரதேச உயர் அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதில் முக்கிய நிகழ்வாக போர்த்தேங்காய் உடைத்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலை அமர்வு காந்தியடிகள் அரங்கில் பிற்பகல் 3 மணி தொடக்கம் 7.30 மணி வரை கலாபூசணம் த.மகேந்திரா தலைமையில் இடம்பெறுகின்றது. இதில் முதன்மை விருந்தினர்களாக விசேட இருதய சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி க.இராஜகாந்தன், தமிழ் பாடசாலைகள் அபிவிருத்திப் பணிப்பாளர் கு.ராஜேந்திரா உட்பட பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இதில் முக்கிய நிகழ்வாக 4.22 மணிக்கு 'கொம்பு முறி விளையாட்டு' இடம்பெறவுள்ளது.
இரண்டாம் நாள் ஆகஸ்ட் 02 ஆம் திகதி இயலரங்கு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் காலை 8.45 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணி வரை சேரன் செங்குட்டுவன் அரங்கில் கோட்டக் கல்வி அதிகாரி சு.தவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வின் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் செ.திலகராஜா, முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ.குணபாலன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வே.யுகபாலசிங்கம் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இதில் கூடல் விழா மலர் வெயியீடு, கண்ணகி கூடல் இணையத் தளம் தொடக்கி வைப்பு 'வந்தாள் கண்ணகி வந்தாள்' தலைப்பில் கவிஞர் முல்லை வீரக்குட்டி தலைமையில் கவியரங்கம், நூலங்காடி அறிமுகம், கண்காட்சி , 2013 கண்ணகி விழா தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி ஆகியன இடம்பெறவுள்ளது.
மாலை அமர்வு பி.ப 3 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை கோவலன் அரங்கில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. அந் நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன், பேராசிரியர் வ.மகேஸ்வரன், கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் ஆ.இரகுபதி பாலசிறீகரன் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் கண்ணகி காவடிப் பாடல்கள், தமிழருவி த.சிவகுமாரன் மாதர்க்கு அணி சிறப்புரை, நளவெண்பா சுயம்வர காண்டம் மனை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுங்கள் பரிசு வழக்கல் நிகழ்வுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவுபெறவுள்ளது.
மூன்றாம் நாள் ஆகஸ்ட் 03ஆம் திகதி காலை 9.20 மணி தொடக்கம் பி.ப 1.30 மணிவரை இளங்கோவடிகள் அரங்கில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் 'ஆய்வரங்கு' கண்ணகி வழக்குரைக் காவியம் இடம் பெறவுள்ளது. இதில் முதன்மை விருந்தினர்களாக யாழ்பல்கலைக்கழக கலாநிதி சி.பத்மநாதன், வைத்திய கலாநிதி க.முருகானந்தன், பொறியியலாளர் வ.கருணநாதன் உட்பட பிரதேச துறைசார் வல்லுநர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இங்கு கண்ணகி வழக்குரைக் காவியத்தின் காவிய அமைப்பு, கண்ணகி வழக்குரைக் காவியத்தின் பாத்திர வார்ப்பு, கண்ணகி வழக்குரை காவியத்தில் கப்பல் கட்டும் கலையும், போர்க் கலையும், கண்ணகி வழக்குரைக் காவியத்தின் இலக்கியநயம் போன்றவற்றின் ஆய்வுரைகள் இடம்பெறவுள்ளன.
மூன்றாம் நாள் மாலை அமர்வுகள் பி.ப 5 மணிதொடக்கம் இரவு 9 மணி வரை மாதவி அரங்கில் இடம்பெறவுள்ளது. ஓய்வு நிலை சிரேஷ்ட போதனாசிரியர் ஆ.உலகராஜா தலைமையில் முதன்மை விருந்தினர்களாக மட்டு விபுலானந்த அழகியற் கற்கை நிறுவ பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகரன், முதுநிலை விரிவுரையாளர் அனுசூயா சேனாதிராஜா உட்பட அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதில் கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு, கண்ணகி அம்மன் காவியப் பாடல்கள், கொம்பு முறி நடனம், நர்தன பவனம், நாட்டியப்பள்ளி மாணவிகள் நடனம், விஷ்ணு புத்திர வெடியரசன் கூத்து ஆகியன இடம்பெற்று இரவு 9 மணிக்கு கண்ணகி கலை இலக்கிய கூடல் துணைத்தலைவர் மா.சதாசிவம் நிறைவுரையுடன் இவ்வருடத்திற்கான கிழக்கின் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன் பாண்டிருப்பு
0 comments :
Post a Comment