Wednesday, June 18, 2014

ILO அறிக்கை: வறுமை மற்றும் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட ஓர் உலகம்! Jerry White

“மிகவும் முன்கூட்டியே மற்றும் இயற்கையாக அல்லாத ஒரு மரணத்தைத் தவிர்க்கவியலாமல் சந்திக்க வேண்டிய ஒரு நிலைமையில் ஒரு சமூகம் நூற்று கணக்கான பாட்டாளிகளை கொண்டு வந்து நிறுத்தும் போது... வாழ்வின் ஆயிரக் கணக்கான தேவைகளை அது இழக்கச் செய்யும் போது... தவிர்க்கவியலாத விளைவாக மரணம் வரும் வரையில், சட்டத்தின் பலமான கரங்களால், அதே போன்ற நிலைமைகளில் வாழ வைக்க அவர்களை நிர்பந்திக்கும் போது... நிச்சயமாக ஒரு தனிநபரின் நடவடிக்கையைப் போலவே அந்த செயலும் படுகொலை தான்...” இது இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமை (1845) என்பதில் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதியதாகும்.

உலக மக்கள்தொகையில் மிகப் பெருபான்மையினர் அத்தியாவசிய சமூக பாதுகாப்புகள் இல்லாமல் இருப்பதுடன், ஒவ்வொரு நாளும் ஐந்து வயதிற்கு குறைந்த 18,000 குழந்தைகளை அவை தடுக்கக்கூடிய மரணங்களுக்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றன. இது கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் வெளியிடப்பட்ட உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2014-15 இல் கண்டறியப்பட்டவைகளில் ஒன்றாகும்.

பிரசவ கால கவனிப்பு, மற்றும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் வயதுடையோர் மற்றும் முதியோருக்கான வருமான பாதுகாப்பு உட்பட அடிப்படை மருத்துவ பராமரிப்பு கிடைக்கிறதா என்பதற்கான ஆய்வை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 200 நாடுகளில் மேற்கொண்டது. அந்த நாடுகளில் 2012இல் வேலைக்குச் செல்லும் வயதுடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரில் 27 சதவீதத்தினருக்கு மட்டுமே அதுபோன்ற பாதுகாப்புகள் கிடைத்திருந்தன என்பதை அது கண்டறிந்தது. ஏனைய மூன்று கால் பங்கினர் — அதாவது சுமார் 5.2 பில்லியன் மக்களுக்கு அது போன்ற வசதிகள் இல்லை.

“சமூக பாதுகாப்பின் அவசியம் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது என்ற போதினும், சமூக பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை உலக மக்கள்தொகையின் பெரும் பெரும்பான்மையினருக்கு பூர்த்தி ஆகாமலேயே உள்ளது,” என்று அந்த அறிக்கை தீர்மானத்திற்கு வருகிறது. “போதுமானளவிற்கு பாதுகாக்கப்படாத பலர் வறுமையில் வாழ்கின்றனர், மத்திய மற்றும் குறைந்த வருமான நாடுகளின் மக்கள்தொகையில் பாதிப் பேர் இவ்வாறுதான் உள்ளனர். அவர்களில் பலர், அதாவது சுமார் 800 மில்லியன் மக்கள், உழைக்கும் ஏழைகளாக உள்ளனர், மற்றும் பலர் உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தில் வேலை செய்கின்றனர்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கை உலக முதலாளித்துவ நிலையின் பேரழிவுகரமான சித்திரத்தை சித்தரிப்பதால், பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் இந்த அறிக்கையை இருட்டடிப்பு செய்துவிட்டன.

மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருப்பது குழந்தைகளைக் குறித்த புள்ளிவிபரங்களாகும். குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நலன்களுக்காக அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 0.4 சதவீதம் மட்டுமே ஒதுக்குகின்றன, இது மேற்கு ஐரோப்பாவில் 2.2 சதவீதத்திலிருந்து ஆபிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக்கில் 0.2 சதவீதம் வரை என வேறுபடுகிறது. இது போன்ற நலன்களுக்காக அமெரிக்கா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.699 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது—இது இலத்தீன் அமெரிக்காவை விடவும் சற்று குறைவாகும். ஆனால் அதற்கு நேரெதிராக, அமெரிக்கா இராணுவத்திற்கு அதன் பொருளாதார வெளியீட்டில் 4.2 சதவீதத்தை செலவிடுகிறது.

இந்த அலட்சியத்தின் மனித மற்றும் சமூக தாக்கங்கள் கணக்கில்லாதவை. உணவு இல்லாமை மற்றும் மருத்துவ பராமரிப்பு வழங்க இயலாமை, துப்புரவு, சுத்தமான குடிநீர் மற்றும் ஏனைய அவசியமான அடிப்படை தேவைகள் இல்லாதிருப்பதானது, மூளை வளர்ச்சி பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பாற்றலின்மை மற்றும் முன்கூட்டிய மரணம் போன்றவற்றிற்கு இட்டுச் செல்வதாக நீண்ட காலத்திற்கு முன்பே விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள வேலை செய்யும் பெண்களில் ஒரு கால் பங்கினருக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த புள்ளிவிபரம் ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் 10 சதவீதம் அளவிற்கு கீழே இருப்பதாகவும் ILO அறிக்கை குறிப்பிடுகிறது. சிக்கன நடவடிக்கைகள் ஜேர்மன், இங்கிலாந்து, அயர்லாந்து, செக் குடியரசு மற்றும் ஏனைய நாடுகளில் பிரசவ கால சலுகைகளைக் குறைத்து விட்டிருக்கின்றன.

புதிய தாய்மார்களுக்கு அரசிடமிருந்தோ அல்லது தொழில் வழங்குனரிடமிருந்தோ சம்பளத்துடன் கூடிய விடுமுறை இல்லாத மூன்று நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும் — ஓமான் மற்றும் பாப்புவா நியூ கெனியா ஆகியவை ஏனைய இரண்டு நாடுகளாகும்.

உலகெங்கிலும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் சுமார் 202 மில்லியன் தொழிலாளர்களில், வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே வேலையின்மை சலுகைகளைப் பெற்று வருகின்றனர். “வேலைவாய்ப்பின்மை 45 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து விட்டது, OECD இன் உயர் வருவாய் நாடுகளில் 2008 உடன் ஒப்பிடுகையில் 2013 இல் 44 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருந்தனர், அதேவேளையில் வேலைவாய்ப்பின்மை சலுகைகள் மற்றும் வரியிலிருந்து வழங்கப்படும் சமூக உதவிகள் ஆரம்பத்தில் உயர்த்தப்பட்டு பின்னர் குறைக்கப்பட்டன, வேலைவாய்ப்பற்றோரில் சுமார் பாதி பேருக்கு வேலைவாய்ப்பின்மை சலுகைகள் கிடைப்பதில்லை,” என்று, ஒட்டுமொத்தமாக, அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குறைந்த வருவாய் நாடுகளில் வாழும் மக்கள்தொகையில் தொன்னூறு சதவீதம் பேர் எந்தவொரு மருத்துவ காப்பீடும் இல்லாமல் வாழ்கின்றனர். உலகளவில் மக்கள்தொகையின் சுமார் 39 சதவீதம் பேருக்கு அதுபோன்ற காப்பீடுகள் இல்லை. இதன் விளைவாக, உலகளவில் செய்யப்படும் மருத்துவ செலவுகளில் சுமார் 40 சதவீதத்தை நோய்வாய்பட்டவர்களே நேரடியாக தோள்களில் சுமக்கின்றனர். அரசாங்கங்களின் சுகாதார செலவுகள் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் வெட்டப்பட்டுள்ளன, இது நோய்விகிதம் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தின் உயர்விற்கு இட்டுச் சென்றுள்ளது.

ஓய்வூதியம் பெறும் வயதிற்கு மேல் உள்ள மொத்த மக்களில் சுமார் பாதிப் பேர் (48 சதவீதத்தினர்) ஓய்வூதியமின்றி உள்ளனர். ஓய்வூதியம் பெறுபவர்களில் பலருக்கு, ஓய்வூதிய அளவுகள் வருந்தத்தக்க விதத்தில் போதுமானளவிற்கு இல்லை. அந்த அறிக்கை குறிப்பிடுகிறது, “அதன் விளைவாக, உலகின் வயதான ஆண்கள் மற்றும் பெண்களில் பெரும்பான்மையினருக்கு வருமான பாதுகாப்பு இல்லை, அவர்களுக்கு ஓய்வு பெறும் உரிமை கிடையாது, மற்றும் அவர்கள் அவர்களால் முடியும் மட்டும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் — அதுவும் பெரும்பாலும் படுமோசமான சம்பளத்திலும், கஷ்டமான நிலைமைகளிலும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.”

மோசமடைந்து வரும் இந்த நிலைமைகளுக்கான காரணம், பாரிய சமூக வளங்கள் நிதியியல் பிரபுத்துவத்திற்கு மாற்றப்படுவதினால் ஆகும். ILO அறிக்கை தெளிவுபடுத்துவதைப் போல, 2008 பொறிவுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளானது, "திவால்நிலைமையிலிருந்து நிதியியல் துறைகளை மீட்க வழங்கப்பட்ட வங்கி பிணையெடுப்புகள், மீட்பு பொதிகள், மற்றும் பொருளாதார நடவடிக்கையின் மந்தநிலைமைகளால் அரசாங்க வருவாய் குறைந்ததன் விளைவாக ஏற்பட்ட பற்றாக்குறைகள் மற்றும் அதிகரித்து வரும் கடன்களை" முக்கியமாக சரிகட்டுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்தன.

இந்த நிலைமைகள் முதலாளித்துவத்தின் மீது வைக்கப்படும் ஒரு குற்றப்பத்திரிக்கை ஆகும். 170 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸின் சக-சிந்தனையாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸால் கண்டனம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை விட எந்தவிதத்திலும் குறைவில்லாமல், இந்த பாரியளவிலான நோய் பரவல்களுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களே — அவற்றை பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் — பொறுப்பாகின்றன என்பதை இந்த நிலைமைகள் தெளிவுபடுத்துகின்றன.

சமூகத்தின் ஒரு சதவீத மற்றும் ஒரு சதவீதத்தில் பத்தில் ஒரு சதவீத பணக்காரர்களால் மலைப்பூட்டும் அளவிற்கு செல்வவளம் திரட்டப்படும் அதே நிலைமைகளின் கீழ் தான் பெரும்பான்மையினரின் இறப்புகளும் நிகழ்கின்றன. வெறும் எண்பத்தி ஐந்து பில்லியனர்கள் ஒட்டுமொத்தமாக 1.68 ட்ரில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளனர், இது உலக மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள பாதி மக்களின், அதாவது 3.5 பில்லியன் மக்களின் செல்வ வளத்திற்கு சமமானதாகும்!

உலகளாவிய பங்குச் சந்தைகள், பெருநிறுவன இலாபங்கள் மற்றும் செயலதிகாரிகளின் சம்பளங்களோ தொடர்ந்து புதிய சாதனைகளை எட்டுகின்றன, அதேவேளையில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களோ, பிரதான வங்கிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்படிந்து, இன்னும் மேலதிகமாக செல்வ வளத்தை பெரும் பணக்காரர்களுக்கு திருப்பி விட, மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிக்கின்றன.

“பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவசரமாக அரசு உதவி தேவைப்பட்டதற்கு இடையில், அரசாங்கங்கள் 2010 வாக்கில் "நிதியை உறுதிப்படுத்திக்கொண்டதோடு மற்றும் முன்கூட்டி செலவுகளைச் சுருக்கிக் கொண்டு" அவற்றின் உதவித் திட்டங்களை உடனடியாக கைவிட்டன என்று ILO குறிப்பிடுகிறது. 122 நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தில் செலவுகளைக் குறைக்கும் என்றும் மற்றும் ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் ஐந்தில் ஒரு பங்கு நாடுகள் நெருக்கடிக்கு முந்தைய அளவுகளுக்கு செலவுகளைக் குறைக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அனுமானிப்பதால், 2014 இல் பொது செலவின வெட்டுக்கள் "குறிப்பிடத்தக்க அளவிற்கு தீவிரப்படும்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுவாக சிக்கன நடவடிக்கைகள் என்பது ஐரோப்பாவோடு இணைந்தது என்ற போதினும், “அபிவிருத்தி அடைந்து வரும்" நாடுகள் என்றழைக்கப்படுவதன் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிபொருள் மானியங்களைக் குறைக்கின்றன அல்லது நீக்குகின்றன, அரசுத்துறை ஊதியங்களை வெட்டுகின்றன அல்லது மட்டுப்படுத்துகின்றன, பிற்போக்குத்தனமான வரிகளைத் திணிக்கின்றன, மற்றும் ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீட்டு முறைகளை "சீர்திருத்துகின்றன" என்று ILO அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவை பொறுத்த வரையில், “பயனற்றதாக கருதப்படும் 120 திட்டங்களை வெட்டுவதன்/குறைப்பதன் மூலமாக மூன்று ஆண்டுகளுக்கான பாதுகாப்பற்ற விருப்புடை நிதியுதவியை உறைய செய்தமை, அரசுத்துறை ஊதியங்களை உறைய செய்தமை, வேலைவாய்ப்பின்மை காப்பீட்டின் காலத்தைக் குறைத்தமை, உணவு மானிய உதவி முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தமை, மற்றும் தனிநபர்களின் மீது செலவுகளைச் சுமத்தும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியமை" ஆகியவற்றை அரசாங்கம் திணித்துள்ளதாக ILO குறிப்பிடுகிறது.

அரசாங்கங்கள் மற்றும் ஒவ்வொரு அரசியல் குழுக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு — உலகளவில் இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்ற உண்மை, தொழிலாள வர்க்கத்தை வறுமையில் தள்ளுவதென்பது அமைப்புமுறைக்கு உள்ளேயே உள்ளார்ந்து இருக்கிறது என்பதையும், அது ஏதோ வெறுமனே இந்த அல்லது அந்த அரசியல் தலைவர் அல்லது கட்சிக்கு சொந்தமானதல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

நாகரீகமான வாழ்க்கைக்கு தேவைப்படுபவை, ஒரு காலங்கடந்த மற்றும் தோல்வி அடைந்த பொருளாதார அமைப்புமுறையான முதலாளித்துவத்தோடு பொருத்தமின்றி உள்ளன, அது உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமை, இலாபத்திற்கான உற்பத்தி, மற்றும் உலகை போட்டி தேசிய-அரசுகளாக பகுத்தறிவின்றி பிளவுபடுத்துவதை அடித்தளத்தில் கொண்டுள்ளது. “அபிவிருத்தி அடைந்து வரும்" நாடுகளின் மக்களைத் தூக்கிவிடுவதற்கு இல்லாமல், பழைய தொழில்துறை நாடுகளில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை தரங்களை முன்னாள் காலனி நாடுகளில் இருந்த நிலைமைகளுக்கு சுருக்கும் விதத்தில், நிலைமைகளை மட்டந்தட்டுவதற்கு நிகழ்முறை நடந்து வருகிறது.

மனித வரலாற்றில் வேறெந்த காலத்தையும் விட மனிதகுலம் இப்போது மிகவும் ஆக்கபூர்வமாக இருப்பதோடு, அது வறுமை மற்றும் தேவைகளைக் களைந்தெறிவதற்கு முற்றிலும் தகைமை பெற்றுள்ளது. ஆனால் இந்த உற்பத்தி சக்திகள் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த மேற்தட்டுகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் ஒரு ஜனநாயக மற்றும் விஞ்ஞானபூர்வ முறையில் ஒழுங்கமைக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com