ஜேர்மனியில் அரசு இரகசிய பொலிஸின் மீள்வருகை! By Ulrich Rippert
தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கடந்த ஆண்டு ஊடகங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த 50க்கும் மேலான NSA ஆவணங்களை Der Spiegel கடந்த வாரம் பிரசுரித்தது. அமெரிக்க உளவுத்துறை முகமைக்கும், ஜேர்மனிய வெளிநாட்டு உளவுத்துறை சேவைக்கும் (BND) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை முகமைக்கும் (BfV) இடையே எந்தளவிற்கு நெருங்கிய ஒத்துழைப்பு இருந்ததென்பதை இந்த உயர்மட்ட இரகசிய ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஜேர்மனியில் NSA இன் இந்தளவிலான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருப்பதாக கூறும் பாதுகாப்புத்துறை எந்திரத்தின் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னணி அதிகாரிகளின் வாதங்களுக்கு இவை முற்றிலும் முரண்பாடாக இருக்கின்றன. NSAஇன் தகைமைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து BND மற்றும் BfVக்கும், அத்தோடு அமைச்சக பிரதிநிதிகளுக்கும் முழுமையாக தகவல் தெரிந்திருந்தது என்பதை Spiegel இன் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஜேர்மனியின் உளவுத்துறை முகமைகள் NSA உடன் மேலும் நெருக்கமாக கூடி வேலை செய்யவும் கூட அழுத்தம் அளிக்கப்பட்டது. BND மற்றும் BfV அவற்றின் சொந்த நடவடிக்கைகளை பரந்தளவில் விஸ்தரிக்கவும், மற்றும் அரசுக்குள் ஒரு அரசை தோற்றுவிக்கும் மற்றும் எந்தவொரு ஜனநாயக கட்டுப்பாட்டில் இருந்தும் சுதந்திரப்பட்ட ஒரு பாதுகாப்பு எந்திரத்தை உருவாக்கவும் ஜேர்மன் எல்லைக்குள் இருந்த NSA இன் உளவு நடவடிக்கைகளை அவை பயன்படுத்தி கொண்டன.
Der Spiegel குறிப்பிடுகையில், “கடந்த 13 ஆண்டுகளில் ஜேர்மன் முகமைகளோடு அதிகளவில் மிக நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்திருந்ததும், அதேநேரத்தில் அதன் பிரசன்னத்தை பாரியளவில் விஸ்தரித்து இருந்ததுமான ஒரு சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க முகமையின் சித்திரத்தை அந்த ஆவணங்கள் சித்தரிக்கின்றன,” என்று எழுதியது. “பாதுகாப்பு விருப்பம் மட்டும் இல்லாமல், ஆனால் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் பெறுவதில்" அக்கறை கொண்டிருந்த "ஒரு இரகசிய NSA உளவுத்துறை எந்திரம்" பெடரல் குடியரசில் இருந்ததைப் போல அங்கே "வேறெந்த நாட்டிலும் இருக்கவில்லை." 2007இல், செயல்பட்டு கொண்டிருந்த ஒரு டஜன் சேகரிப்பு மையங்களை NSA ஜேர்மனியில் கொண்டிருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.
Der Spiegel இன் பதிப்பாசிரியர்களின் கருத்துப்படி, ஜேர்மனியில் சேகரிக்கப்பட்ட உளவு தகவல்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும், கொல்வதற்கும் உபயோகிக்கப்பட்டதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. “அவ்வாறானால் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் உயிர்பறிக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி ஒரு பாலமாக சேவை செய்துள்ளதா?” என்று அந்த பதிப்பாசிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். “NSA ஜேர்மனியில் சேகரித்த தரவுகளை அமெரிக்க இராணுவமும், CIAஉம் அவற்றின் டிரோன் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினவா?” Der Spiegelலிடம் இருந்து வந்த இந்த கேள்விகளுக்கு NSA விடையிறுக்கவில்லை, ஆனால் உண்மைகள் எடுத்துக்காட்டும் விதத்தில் "ஆமாம்" என்பதே ஒரே முடிவான பதிலாக உள்ளது.
அந்த இரகசிய ஆவணங்களில் இருந்து அம்பலமான NSAஇன் நடவடிக்கைகள், ஜேர்மன் சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானவை ஆகும். “ஜேர்மன் எல்லைக்குள் நடத்தப்பட்ட இத்தகைய NSA நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஒன்றும் தெரியாது என்பதை ஏற்க முடியுமா?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிய Der Spiegel, பதிலுக்கு காத்திராமல், “அவ்வாறு கற்பனையும் செய்து பார்க்க முடியாது,” என்று எழுதியது. NSA பல தசாப்தங்களாக ஜேர்மனிக்குள் செயல்பட்டு வந்துள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக சான்சலரின் அலுவலகத்திற்குள் அதன் கண்காணிப்பு அமைப்பைக் கொண்டிருக்கும் BND உடனும் அது நெருக்கமாக கலந்தாலோசித்து வேலை செய்கிறது.
“ஜேர்மன் உடனான NSAஇன் உளவுத்துறை உறவுகள்" என்ற தலைப்பில் ஜனவரி 17, 2013 தேதியிட்ட ஒரு ஆவணத்தில், BND, BfV மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகத்தோடு (BSI) இருக்கும் நீண்டகால கூட்டுவேலைகளை NSA விவரிக்கிறது. அந்த ஆவணத்தின் படி, “விரிவான பகுப்பாய்வு, செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளோடு" 1962க்கு முன்னர் இருந்து BND உடனான கூட்டுவேலைகள் தொடங்கி இருந்தன.
“இருதரப்பு கூட்டுறவை பலப்படுத்துவதற்கான மற்றும் விஸ்தரிப்பதற்கான BND தலைவர் [ஹெகார்ட்] ஸ்ஷின்ட்லரின் ஆர்வத்தை NSA வரவேற்பதாக," அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. தங்களின் சொந்த SIGINT தகைமைகளை மேம்படுத்தவும் தகவல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் அமெரிக்காவின் தேவைகளுக்கு ஒத்துழைக்கும் பணியில், தங்களின் சொந்த முன்முயற்சியை மற்றும் சுய-தீர்மானங்களை ஜேர்மன் முகமைகள் வெளிப்படுத்தி உள்ளன.
சமிக்ஞைகளை உளவுபார்த்தல் (signals intelligence) என்பதன் சுருக்கமே SIGINT என்பதாகும், அதாவது செயற்கோள் சமிக்ஞைகளைக் இடைமறித்தல் அல்லது தொலைதொடர்பு கேபிள்களிலிருந்து உருவி எடுத்தல் போன்ற மின்னணு தரவுகளை இடைமறிப்பதன் மூலமாக தகவல்களைப் பெறுவது என்பதே அதன் அர்த்தமாகும்.
“அங்கே 'SIGDEV முறையை அறிமுகப்படுத்தவும் மற்றும் உள்நாட்டு தரவுகளைப் பெற்று பயன்படுத்துவதில், பகுப்பதில், மற்றும் செயல்படுத்துவதில் BfVஇன் திறனை மேம்படுத்துவதற்கான தொழில்பழக்கத்தை அறிமுகப்படுத்தவும் மற்றும் ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இரண்டிற்கும் ஆதாயமளிக்கக்கூடிய பெரிய சேகரிப்பு மையங்களை சாத்தியமானால் அபிவிருத்தி செய்யவும் BND/BfV/NSA/CIAஇன் பல பன்முக தொழில்நுட்ப கூட்டங்களும் NSA ஆல் நடத்தப்பட்டிருந்தது' என்பதைப் போன்ற பலவித வாக்கியங்கள் அதில் காணப்படுகின்றன" என்று எழுதி Die Zeit உம் அந்த ஆவணம் குறித்த விவரங்களை வெளியிட்டது.
NSA உடன் இன்னும் நெருக்கமாக, குறைந்தபட்சம் அமெரிக்க உளவுத்துறை முகமைக்கு ஏற்ப அது வேலை செய்யக்கூடிய விதத்தில், தரவு பாதுகாப்பைத் தளர்த்த BND ஜேர்மன் அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்கும் அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மன் உளவுத்துறை முகமைக்கு இடையிலான கூட்டுறவு இருந்தது. “BND அதன் வெளிநாட்டு கூட்டாளிகளுடன் இன்னும் இலகுவாக தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியாக ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மன் பிரஜைகளின் தகவல் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கும் ஜி-10 தனிநபர் சட்டத்தின் பொருள்விளக்கத்தை திருத்தி அமைத்ததாக" அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
அந்த ஆவணத்தில் “முக்கிய விடயங்கள்” என்பதன் கீழ், அது இவ்வாறு குறிப்பிடுகிறது, “மே 2012இல் NSAஇன் பிரதிநிதிகள் குழுவிற்கு ஜேர்மனியோடு புதிய கூட்டுறவு வாய்ப்புகளை ஏற்படுத்த அனுமதிக்கும் வகையில், FORNSAT சேகரிப்பு திட்டத்தின் முழு பொறுப்பையும் BNDயிடம் NSA ஒப்படைத்தது.” FORNSAT என்பது வெளிநாட்டு செயற்கோளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல் (foreign satellite collection) என்பதைக் குறிக்கிறது, அதாவது உளவுபார்த்தல் என்பதாகும்.
2007இன் ஒரு இரகசிய அறிக்கையில், ஜேர்மன் அமைப்புகளை நிறுவி ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர் முன்னுரிமை இலக்குகளில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதையும், அபிவிருத்தி செய்வதையும் மேம்படுத்தி இருந்ததாக NSA எழுதியது. அந்த ஆவணத்தின்படி, தானியங்கி கண்காணிப்பு அமைப்புகள், மெட்டா-டேட்டாகளைத் திரட்டுதல், IP வழி உரையாடல்களைப் பிரித்தெடுத்தல், மற்றும் மொபைல் தொலைபேசி வலையங்களில் இருந்து மெட்டா-டேட்டாக்களைத் திரட்டுதல் ஆகியவை புதிய அல்லது மேம்பட்ட தகைமைகளில் உள்ளடங்கி இருந்தன. வலையக பகுப்பாய்வில் BND ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்த, NSA ஊழியர்கள் அவர்களின் சக BND ஊழியர்களுக்கு பாடங்களையும், நடைமுறைகளையும் கற்றுத் தந்திருந்தனர்.
இதற்கும் கூடுதலாக, குறுந்தகவல் சேதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தரவுகளை NSA எங்கே வைத்திருக்கிறதோ அந்த DISHFIRE தரவுக்களஞ்சியம் என்பதையும் அந்த ஆவணம் குறிப்பிட்டது. பாட் அய்பிலிங் நகரை மையமாக கொண்டதும், NSA மற்றும் BNDஇன் கூட்டு தொழில்நுட்ப உளவுத்துறை நடவடிக்கையுமான Joint SIGINT Activity (JSA) என்பது, NSAஇன் தரவுகளஞ்சியத்திற்குள் புதிய தரவுகள் பாய்வதற்கு பாதையைத் திறந்துவிட்டிருந்தது. JSA அன்றாடம் குறுந்தகவல்களில் இருந்து 330,000 சேதிகளை DISHFIREக்கு அனுப்புகிறது.
ஆகவே ஜேர்மன் பாதுகாப்பு முறைமைகள் NSAஇன் சட்டவிரோத நடைமுறைகளை அறிந்திருந்தன என்பது மட்டுமல்ல. அவையும் இத்தகைய உளவுபார்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. BND, BSI, இராணுவ உளவுவேலை-தடுப்பு சேவை (MAD) மற்றும் BfV ஆகியவை அன்றாடம் எண்ணற்ற தரவுகளை அவற்றின் அமெரிக்க கூட்டாளிகளோடு பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்காவும் சரி ஜேர்மன் அரசாங்கமும் சரி இந்த கூட்டுறவை எவ்விதத்திலும் மட்டுப்படுத்த எந்தவொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. இந்த புதிய அரசாங்கம் NSA விவகாரம் அம்பலமாவதைத் தடுக்க இதுவரையில் அதனால் ஆனமட்டும் எல்லாவற்றையும் செய்துள்ளது.
இருந்த போதினும், NSA நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியை ஸ்தாபிப்பதற்கு உடன்பட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள், மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் அரசு பொது வழக்கறிஞர் ஹரால்ட் ரன்க, சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் மொபைலில் ஊடுருவியதன் மீது ஒரு புலனாய்வை அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டு இருந்தார்.
உளவுத்துறை முகமைகள் அமெரிக்காவிடமிருந்து இன்னும் சுதந்திரமாக, சுய-நிர்ணயம் பெற்றிருக்க வேண்டுமென்று ஊடகங்கள், வணிக வட்டாரங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளிடமிருந்து முறையீடுகள் மேலெழும்பி வருகின்ற சூழலில் தான், சில காலமாக Der Spiegelஇன் வசமிருந்த இந்த NSA ஆவணங்கள், இப்போது பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன.
இது பலமான நாடாளுமன்ற கட்டுப்பாடு உடனோ அல்லது உளவுத்துறை எந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்பதோடோ சம்பந்தப்பட்டதல்ல. அதற்கு நேர்மாறாக, NSA உளவுவேலை மீதான விமர்சனம் "ஜேர்மன் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான" (Die Zeitஇன் பதிப்பாசிரியர் ஜோசெப் ஜோஃபே) அழைப்போடு பிணைந்துள்ளது.
BND இன் முகவர்களை இந்த கோடையில் மத்திய பேர்லினின் ஒரு புதிய மையத்திற்கு மாற்றியதே இந்த முறையீடுகளை அடையாளப்படுத்துகின்றன. ஐரோப்பாவின் இந்த மிகப்பெரிய அலுவலக வளாகத்தில், உலக மக்களை உளவுபார்ப்பதில் ஏனைய உளவுத்துறை முகமைகளோடு நெருக்கமாக கூடி வேலை செய்ய 4,000கும் மேற்பட்ட முகவர்கள் பணிக்கப்படுவார்கள்.
BND மற்றும் ஏனைய உளவுத்துறை முகமைகளைப் பலப்படுத்துவதென்பது ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தையும் பரந்தளவில் மறுகட்டமைப்பு செய்வதோடு இணைந்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக என்ற போலிக்காரணத்தின் கீழ், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளின் அதிகாரங்கள் கடந்த தசாப்தத்தில் பரவலாக விரிவாக்கப்பட்டுள்ளன. 2004இல், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பிற்கான கூட்டு மையம் (GTAZ) ஸ்தாபிக்கப்பட்டது, அது ஜேர்மனியின் அனைத்து உளவுத்துறை முகமைகளின் பிரதிநிதிகளையும் ஒரே இடத்திற்குள் கொண்டு வந்தது.
பேர்லினின் திரெப்டோவ் நகரில் சிறப்பான முறையில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில், BfV, BND, BKA (மத்திய குற்ற புலனாய்வு அமைப்பு), MAD, மத்திய பொலிஸ், சுங்க நெறிமுறை ஆணையம், மத்திய தலைமை வழக்கறிஞர் அலுவலகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம், அதனோடு சேர்ந்து அனைத்து 16 மாநில உளவுத்துறை முகமைகளும் மற்றும் குற்றவியல் விசாரணை அமைப்புகளும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கின்றன. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளாலும் BKAஇன் "பயங்கரவாத எதிர்ப்பு தகவல் களஞ்சியத்தை" அணுக முடியும்.
நாஜி சர்வாதிகாரத்தின் போது நடத்தப்பட்ட குற்றங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு முக்கிய படிப்பினையாக, பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பிரித்து வைப்பதென்று ஜேர்மன் அரசியலமைப்பில் ஸ்தாபிக்கப்பட்டது, இது இப்போது நடைமுறையில் கைவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையையும் அரசின் எதிரியோ என்று பார்க்கும் மற்றும் அவர்களை உளவுபார்க்கின்ற ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கண்ணுக்கு முன்னால் விரிந்து வருகின்றன.
அனைத்திற்கும் மேலாக இது போர் குறித்த கேள்வியின் மீது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. இராணுவ கட்டுப்பாடுகள் மீதான ஜேர்மன் சகாப்தம் முடிந்துவிட்டது, அதாவது அது நெருக்கடி பிரதேசங்களில் சுதந்திரமாகவும், சுயநம்பிக்கையோடும் தலையீடு செய்யும் என்ற ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்-வால்டர் ஸ்ரைன்மையர், மற்றும் பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லையன் ஆகியோரிடம் இருந்து வந்த அறிக்கைகளுக்கு ஜேர்மன் மக்களோ அதிகளவில் கோபத்தோடு விடையிறுப்பு காட்டியுள்ளனர்.
அரசாங்கம் இந்த எதிர்ப்பிற்கு ஒரு விரிவான பிரச்சார இயக்கத்தோடு மட்டும் விடையிறுப்பு காட்டவில்லை, மாறாக பாதுகாப்பு எந்திரங்களை பலப்படுத்தியும் மற்றும் அரசு கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியும் கூட விடையிறுப்பு காட்டியுள்ளது. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை இவ்விதத்தில் நாஜிக்களின் கீழ் கெஸ்டாபோ (Gestapo) கொண்டிருந்த அதிகளவிலான அதிகாரங்களின் எச்சசொச்சங்களோடு ஒரு பொலிஸ் அரசின் கட்டுமானத்தோடு கை கோர்த்து செல்கிறது.
0 comments :
Post a Comment