Monday, June 30, 2014

உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு புதிய இறுதி எச்சரிக்கை விடுக்கின்றன. By Bill Van Auken

வியாழனன்று பாரீசில் உரையாற்றுகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ரஷ்ய அரசாங்கத்திற்கு ஒரு புதிய இறுதி எச்சரிக்கை விடுத்தார், மேற்கால் கியேவ்வில் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வர செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அது "சில மணி நேரங்களுக்குள்" எடுத்துக்காட்ட வேண்டும் அல்லது விளைவுகளை முகங்கொடுக்க வேண்டுமென அவர் எச்சரித்தார்.

“அவர்கள் பிரிவினைவாதிகளை நிராயுதபாணியாக்குவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த சில மணிநேரங்களில் எடுத்துக்காட்டுவதென்பது ரஷ்யாவிற்கு இக்கட்டாக இருக்குமென்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்,” என்று தெரிவித்த கெர்ரி தொடர்ந்து கூறுகையில், “ஐரோப்பிய சமூகம் அவை தடை விதிக்கவிருக்கின்ற அம்சங்கள் குறித்து விவாதிக்க ஒன்று கூடுகின்றன. அவை தயாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் அனைவரும் உடன்பட்டு இருக்கிறோம்,” என்றார்.

புருசெல்ஸில் வியாழனன்று நேட்டோ வெளியுறவுத்துறை மந்திரிகளின் கூட்டம் நிறைவடைந்திருக்கும் சூழலில் மற்றும் பெல்ஜியம் நகரில் யெப்ரெஸில் உள்ள முதலாம் உலக யுத்தக்களத்தில் இன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தொடங்க இருக்கின்ற நிலையில் கெர்ரியின் இந்த எச்சரிக்கை வெளியானது.

தெளிவாக ஏதோவொரு விதத்தில் வேறுபட்ட நிகழ்ச்சிநிரலில் செயல்பட்டு வந்த பிரெஞ்ச் வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸோடு சேர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அவரது கருத்துக்களை கால அட்டவணையைக் குறிப்பிடாமல் தெரிவித்தார். அதற்கு ஒருநாள் முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ போறோஷென்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பங்குபெற்ற நான்கு முனை தொலைபேசி கலந்துரையாடலில் புட்டின் உறுதியளித்த பொறுப்புறுதிகள் மீதும், உக்ரேனில் தீவிரத்தன்மை குறைந்திருப்பதாகவும் (de-escalation) ஃபாபியுஸ் பேசினார். “வரவிருக்கும் நாட்களில்" ரஷ்யாவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்று பிரான்ஸ் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

வாஷிங்டன் வெளிப்படையாகவே ரஷ்யாவுடன் மோதலை வளர்க்க முனைந்து வருகின்ற நிலையில், மேற்கு ஐரோப்பிய அதிகாரங்களோ அதுபோன்றவொரு தீவிரப்பாட்டிற்கு குறைவாகவே உற்சாகம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடிக்குள் திரும்பி வரும் உக்ரேனில் ஏதேனும் "தீவிரதன்மை குறைந்திருப்பதற்கான" (de-escalation) நிலைமை இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை, மேற்கத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் இந்த விபரத்தைப் பெரிதும் புறக்கணித்துள்ளன.

கடந்த வாரம் போறோஷென்கோவினால் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் என்றழைக்கப்படுவது நடைமுறையில், கியேவ் ஆட்சியிலிருந்து தன்னைத்தானே சுதந்திரமாக அறிவித்துள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் படைகள், அவற்றின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அல்லது "அழித்துவிடுவதற்கு" ஒரு இறுதிகெடுவாக செயற்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் என்றழைக்கப்பட்ட நாட்கள் முழுவதும் ஸ்லாவ்யான்ஸ்க்கிலும் மற்றும் ஏனைய மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளிலும் விமான தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டு தாக்குல்கள் உட்பட தொடர்ந்து தாக்குதல் நடந்ததாக கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கியேவ் ஆட்சியும் ஒரு இராணுவ ஹெலிகாப்டர் தகர்க்கப்பட்டதில் ஒன்பது சிப்பாய்கள் உட்பட துருப்புகளை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரை தரையிறக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து வழங்கப்பட்டு இருந்ததாக—முற்றிலும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல்—புதனன்று கியேவ் குற்றஞ்சாட்டியது, அந்த குற்றச்சாட்டை மாஸ்கோ மறுத்துள்ளது.

கிழக்கில் நிலவும் அதிகளவிலான பதட்டமான நிலைமைகளும், வெள்ளியன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரவிருக்கின்ற போர்நிறுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க ஆதரவிலான அரசாங்கத்தின் ஒரு வன்முறையான தீவிர இராணுவ தாக்குதலைக் கொண்டு வருமென்ற அச்சமும் ரஷ்ய எல்லையை நோக்கி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

“அங்கே ஸ்லாவ்யான்ஸ்க்கில் இன்னமும் நிறைய மக்கள்—தாய்மார்களும், குழந்தைகளும், முதியோர்களும் இருக்கிறார்கள்,” என்று ஸ்லாவ்யான்ஸ்க்கில் சேவையளித்து வரும் ஒரு சுய ஆர்வலர் ரஷ்யாவின் RIA நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் பணமில்லாமல் இருக்கிறார்கள். அந்நகரம் குடிநீரோ அல்லது மின்சாரமோ இல்லாமல் விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் எரிவாயு கிடையாது. விரைவிலேயே பஞ்சம் ஏற்படக்கூடும். மக்களை அங்கிருந்து வெளியேற்றி ஆக வேண்டும்,” என்று தெரிவித்தார்.

நகரை விட்டு வெளியேற முயலும் குடும்பங்களை சோதனை சாவடிகளில் இருக்கும் தேசிய பாதுகாப்பு படையின் சிப்பாய்கள் திருப்பி அனுப்பி வருவதாக ஸ்லாவ்யான்ஸ்க்கில் வசிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த தேசிய பாதுகாப்பு படையோ, கடந்த பெப்ரவரியில் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை வெளியேற்றிய மேற்கத்திய ஆதரவிலான அந்த ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்த Right Sector மற்றும் ஏனைய நவ-பாசிச மற்றும் அதிதீவிர தேசியவாத உட்கூறுகளின் அங்கத்தவர்களால் பெரிதும் நிரப்பப்பட்டதாகும்.

எவ்வாறிருந்த போதினும் அசோசியேடெட் பிரஸ் குறிப்பிட்டது, “தங்கள் உடைமைகள் நிரம்பிய கார்களில் ஆயிரக் கணக்கான உக்ரேனியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய கிழக்கு எல்லையில் வியாழனன்று அணிவகுத்து நின்றனர், அவர்களில் சிலர் தங்களின் அரசாங்கத்தால் தாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறியதோடு, மீண்டும் ஒருபோதும் திரும்ப போவதில்லை என்றும்" தெரிவித்தார்கள். சண்டை தொடங்கியதில் இருந்து தஞ்சம் கோரி 90,000 உக்ரேனியர்கள் எல்லையைக் கடந்து வந்திருப்பதாக ரஷ்ய புலம்பெயர்வு சேவை தெரிவிக்கிறது.

போர்நிறுத்தம் என்றழைக்கப்படுவதை நீட்டிப்பதன் சாத்தியக்கூறு மீது உக்ரேனிய ஆட்சி, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தலைவர்களுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

புதனன்று நேட்டோ மந்திரிகளின் மாநாடு உக்ரேனிய ஆட்சிக்கு கூடுதல் இராணுவ ஆதரவு பொதியை வழங்க ஒப்புதல் வழங்கியது. அதில் சரக்கு கையாளுகை, படை மற்றும் கட்டுப்பாடு மற்றும் இணையவழி பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவிகள் உள்ளடங்கி இருக்குமென கூறப்பட்டது. “அதன் பாதுகாப்பு மற்றும் இராணுவ துறையின் மறுகட்டுமானம் குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தையும், அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு தெளிவான மூலோபாயத்தையும்" அது கொண்டிருப்பதாக அறிவித்து, பொது செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்சென் கியேவிற்கு வரையறையற்ற ஆதரவைத் தெரிவித்தார்.

அதன் பங்கிற்கு ரஷ்யா, நேட்டோவின் நகர்வை கூடுதல் ஆத்திரமூட்டலாக குற்றஞ்சாட்டியது. “அது உக்ரேனின் இராணுவ சக்தியை, நமக்கு தெரியும், அந்நாட்டின் தென்கிழக்கில் வெகுசனங்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்ற நிலையில்" நேட்டோ ஒரு "ஆத்திரமூட்டும் போக்கை" ஏற்றிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா வியாழனன்று தெரிவித்தார். “உக்ரேனிய சம்பவங்களைக் சாக்காக வைத்து, [அவர்கள்] ரஷ்ய எல்லைக்கு அருகில் இராணுவ-அரசியல் பதட்டங்களைத் தீவிரப்படுத்த அழுத்தம் அளித்து வருகிறார்கள்,” என்று அப்பெண்மணி குறிப்பிட்டார்.

அந்த மோதலைத் தணிக்க ரஷ்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஷ்ய இன மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு உக்ரேனில் தலையீடு செய்வதற்கான அதிகாரத்தை புட்டினுக்கு அளித்து மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை புதனன்று ரத்து செய்ததும் அதில் உள்ளடங்கும். புட்டின் அரசாங்கம் போறோஷென்கோவை உக்ரேனிய ஜனாதிபதியாக அங்கீகரித்து, துருப்புகளையும் எல்லையிலிருந்து பின்னுக்கு நகர்த்தி இருப்பதோடு, ஒரு சமாதான திட்டம் என்றழைக்கப்படுவதன் மீது அவரோடு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது. மாஸ்கோ பணிந்து செல்வதானது பெரிதும் அந்நாட்டின் பில்லினிய செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கி திரும்பியதாகும், இவர்களின் செல்வம் மிக நெருக்கமாக மேற்கோடு பிணைந்துள்ளது. ஆனால், வாஷிங்டனோ மாஸ்கோவுடனான ஒரு மோதல் கொள்கையிலிருந்து—மற்றும் அதற்கு எதிராக இராணுவ அழுத்தத்தை அளிப்பதிலிருந்து—திரும்புவதற்கு எந்த அறிகுறியும் காட்டவில்லை.

வாஷிங்டனுக்கு சாதாகமாக அதன் மீது "எந்ததுறையில் தடைகளை விதிப்பது" என்ற விதமான ஒரு முடிவை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தீர்மானிப்பதற்கு சாத்தியமில்லை என்பதாக தெரிகிறது, ஏனெனில் வாஷிங்டன் எரிபொருள், இராணுவம் மற்றும் நிதி போன்ற ரஷ்ய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் இலக்கில் வைத்திருக்கக்கூடும். அமெரிக்கா எந்தளவிற்கு ரஷ்யாவுடன் வர்த்தகங்களைக் கொண்டிருக்கிறதோ அதை விட சுமார் 12 மடங்கு அதிகமான வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியம் அதனோடு வைத்திருக்கிறது, மேலும் அதன் எரிவாயு தேவைகளில் 30 சதவீதத்திற்கு ரஷ்யாவை சார்ந்துள்ளது. ரஷ்ய பொருளாதாரத்திற்கு எதிரான எந்தவொரு தீவிர நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த பொருளாதாரங்களை ஆழமான நெருக்கடிக்குள் கொண்டு செல்லும்.

“உலகளாவிய சந்தைகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குமென" அஞ்சி வாஷிங்டனே கூட "ஈரானிய பாணியிலான தடைகளை" நிராகரித்திருப்பதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு காட்டி நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. வியாழனன்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் அதற்கு கிடைத்த வரைவு ஆவணங்களின் அடித்தளத்தில் குறிப்பிடுகையில், வரையறுக்கப்படாத "இலக்கில் வைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு" உக்ரேனிய சம்பவங்கள் உகந்ததாக இருந்தால் அவற்றை மாஸ்கோ முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்று அதை எச்சரிக்க மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது என்று குறிப்பிட்டது.

அங்கே பரிந்துரைக்கப்பட்ட தடைகளின் மீது அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதியியல் ஸ்தாபகத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவுகிறது. “பல தரப்பட்ட தடைகள் அமெரிக்க நலன்களைப் பாதித்திருப்பதை வரலாறு காட்டுவதால்" மற்றும் "அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதிப்பதோடு, அமெரிக்க வேலைகளின் செலவைக் கூட்டுமென்பதால்" அவற்றிற்கு எதிராக எச்சரித்து அமெரிக்க வர்த்தக அமைப்பும், தேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பும் அமெரிக்க பத்திரிகைகளில் ஒரு கூட்டு பத்திரிகை விளம்பரங்களை அளித்தன.

ரஷ்யாவை இலாபங்களுக்கான ஒரு பிரதான ஆதாரவளமாக காணும், குறிப்பாக மிகப் பெரிய எரிசக்தித்துறை குழுமங்கள், கவலை கொண்டுள்ளன. ஒபாமா நிர்வாகம் ஒருதலைபட்சமாக தடைகளை விதித்தால், எக்ஸோன் (Exxon) மற்றும் ஹலிபர்டன் (Halliburton) போன்ற நிறுவனங்கள் டோட்டல் மற்றும் ஸ்கூலும்பெர்ஜெர் (Schlumberger) போன்ற ஐரோப்பிய போட்டி நிறுவனங்களிடம் ஆதாயமான ஒப்பந்தங்களை இழக்க வேண்டியதிருக்கும்.

எவ்வாறிருந்த போதினும் யுரேஷியாவில் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அதன் உந்துதலுக்கு ரஷ்யாவை ஒரு முக்கிய தடையாக வாஷிங்டன் கருதுவதால் அதனோடு மோதலுக்கு அழுத்தமளிக்க அமெரிக்க ஆளும் அரசியல் ஸ்தாபகம் தயாராகி உள்ளது என்பதற்கு அங்கே அறிகுறிகள் உள்ளன.

“நம்முடைய வெளியுறவு கொள்கை நலன்கள் தனிப்பட்ட வர்த்தக நலன்களைப் பாதிக்கும் காலங்கள் இருந்திருக்கின்றன, இப்போது அவ்வாறான ஒரு காலப்பகுதி நிலவுகிறது,” என்று வங்கியியல் மற்றும் வெளியுறவுத்துறை கமிட்டிக்கான டென்னஸியின் குடியரசு கட்சி செனட்டர் பாப் கோர்கெர், புளூம்பேர்க் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

இன்றைய ஐரோப்பிய ஒன்றிய உச்சமாநாட்டினோடு சேர்ந்து, உக்ரேனிய ஆட்சியானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேனுக்கு இடையிலான ஒரு கூட்டு உடன்படிக்கையின் பொருளாதார பகுதியில் கையெழுத்திட உள்ளது. அந்த உடன்படிக்கையானது உக்ரேனிய பொருட்களுக்கு மேற்கு ஐரோப்பாவில் நடைமுறை அளவில் சந்தையே இல்லை என்ற நிலைமைகளின் கீழ் மேற்கு ஐரோப்பாவிலிருந்து பண்டங்களை உக்ரேனிய சந்தைக்குள் திறந்துவிட, பெரிதும் ஒரு ஒருதரப்பு சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும்.

அதுபோன்றவொரு உடன்படிக்கை சமூக கொந்தளிப்பைக் கட்டவிழ்த்துவிடுமென அஞ்சிய யானுகோவிச் அதுபோன்றவொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பின்வாங்கியதே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒத்து ஊதப்பட்ட மற்றும் பாசிசவாதிகளால் முன்னெடுக்கப்பட்டதான ஆட்சி கவிழ்ப்பு சதியால் அவர் அதிகாரத்திலிருந்து வெளியேற காரணமாக இருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com