பொது அபேட்சகராகப் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சி அழைத்தால் வருவேன்! - மாதுலுவாவே தேரர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கு எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை பெருமனதோடு ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் நேற்று குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து, நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் தனது ஒரே எதிர்பார்க்கை என குறிப்பிட்ட சோபித்த தேரர், அதற்காக பொது அபேட்சகராக எதிர்க்கட்சியிலிருந்து வேறொரு திறமையான ஒருவரை நியமித்தாலும் தான் அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாகக் குறிப்பிட்டார்.
இங்கு முக்கியத்துவம் பெறுவது என்னவென்றால், எதிர்க்கட்சியின் பிரதான கட்சி வேறு வேறாகப் போட்டியிடாமல் ஒன்றிணைந்து பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தேரர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,
எதிர்கவரும் காலங்களில் மீண்டும் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடக்காதிருக்கும் வண்ணம் அதனை இல்லாதொழிக்குமாறு தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி போட்டியிட்ட இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பொதுமக்களுக்கு வாக்களித்த வண்ணம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமற் செய்து, அதற்கேற்ப செயற்பட்டால் நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு தனது பூரண ஒத்துழைப்பை அவருக்கு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்யாதுவிட்டால், பொது அபேட்சகர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு தான் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment