மலையகத்தில் முதன் முறையாக அதிக சம்பளம் பெற்ற பெண் தொழிலாளிகள் கௌரவிப்பு!
அண்மைக்காலமாக நமது தேயிலை தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. தோட்டங்களிலிருந்து உருவாகி வரும் ஆசிரியர்கள், அரச நிறுவனங்களில் தொழில்புரிவோர், வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், நகரங்களில் பணிபுரிபவர்கள் என பெரும் மத்தியதர வர்க்கமொன்று தோன்றி வளர்ந்து வருகின்றது.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுதல், பெருநகரங்களில் வீட்டு வேலைக்கு செல்லுதல் போன்றவற்றை சில பெண்கள் விரும்புகின்ற மனோநிலையை பெற்றிருக்கிறார்கள்.
இதுதவிர தேயிலை தொழிற்துறையில் நிர்வாகங்களால் வழங்கப்படும் நெருக்கடிகள், தொழிற்சாலை பராமரிப்புகள் அல்லது தொழிற்சாலையை மூடுகின்ற நிலைக்கு வழிநடத்துதல் தேயிலை மரங்களையும் பராமரிக்கின்ற விதங்கள் போன்ற பல காரணங்கள் ஒன்று கூடி இவ்வாறான எதிர்மறையான மனநிலைகளை தோற்றுவிக்கின்றன.
ஆனால் மலையகத்தில் இதற்கு எதிர்மாறாக பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்ட தொழிலாளிகள் கொழுந்து பறிப்பதில் மிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலையகத்தில் வரலாற்றில் முதன் முறையாக கொழுந்து பறித்து கூடுதலாக சம்பளம் பெற்ற பெண் தொழிலாளிகள் 10.06.2014 அன்று தோட்ட உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் கொழுந்து பறித்து வந்த எம்.சாந்தகுமாரி என்ற பெண் தொழிலாளி ஒருவர் மொத்த சம்பளமாக ரூபா 57395 பெற்று சாதனைப்படைத்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு 18 கிலோ கொழுந்து பறிக்குமிடத்தில் மேற்படி பெண் மேலதிக கொழுந்தாக ஒரு மாதத்திற்கு 1899 கிலோ கொழுந்து பறித்துள்ளமை குறிப்பிடதக்கது.
கடந்த மாதம் தேயிலை கொழுந்து செழிப்பாக காணப்பட்டதால் குறித்த பெண் மட்டுமல்லாமல் ஏனைய தோட்ட தொழிலாளிகளும் மேலதிகமாக கொழுந்து பறித்து 30000ற்கும் கூடுதலாக சம்பளம் பெற்றுள்ளதாக தோட்ட அதிகாரி ஆர்.ஜீ.எம்.ரோஹன எட்வட் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யும் பெண்கள் கூட இவ்வாறான சம்பளம் பெறுவதில்லை. வைத்தியர், தோட்ட உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் கூட இவ்வாறான சம்பளம் பெறுவதில்லை. இது மலையக தோட்ட தொழிலாளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சம்பளமும் குறைவாகவே கிடைக்கின்றது. இச்சம்பவத்தினால் தற்போது தேயிலை கொழுந்து பறிக்கலாம் என யோசிக்க வைத்துள்ளது. தோட்ட தொழிலாளிகள் கொழுந்து பறிப்பதில் தங்களது விருப்பத்தோடு ஆர்வம் காட்டி வந்தால் நாடும், தோட்ட நிர்வாகமும் வளர்ச்சியடையும் எனவே இதை முறையாக செய்தால் ஏனைய தோட்டங்களும் வளர்ச்சியடையும் என தோட்ட உதவி அதிகாரி அர்ஜுன மெதகம தெரிவித்தார்.
இவ்வாறு கூடுதலாக சம்பளம் பெற்ற தொழிலாளிகளுக்கு தோட்ட நிர்வாகம் பரிசில்களும் வழங்கியமை பாராட்டக்கூடிய விடயமாகும். ஏனைய தோட்டங்களை விட எங்களுடைய தோட்டம் தொழிலாளிகளுக்கு பல சலுகைகளும் வழங்குகின்றது. தோட்ட அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், என பலரும் எங்களோடு ஒற்றுமையாக இருப்பார்கள் அதுமட்டுமில்லாமல் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் கொழுந்து பறித்தால் அதிக சம்பளம் பெறலாம் என தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான தொழிலாளிகள் இருப்பதனால் தோட்ட நிர்வாகமும் அதிக வளர்ச்சியடைகின்றமை குறிப்பிடதக்கது. எனவே வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுதல், பெருநகரங்களில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமங்களையும் எதிர்நோக்கி குறைவாக சம்பளம் எடுக்கும் பெண்கள் எமது பாரம்பரிய தொழிலான தேயிலை கொழுந்து பறிப்பதில் ஆர்வம் காட்டி வந்தால் தமது வாழ்க்கையில் வளர்ச்சி அடையாளம் என இச்சம்பவம் எடுத்துகாட்டுகின்றது.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment