இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடன்று! - வஜித தேரர்
இலங்கை நாடு சிங்களவர்களுக்கு பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான நாடென்பதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை எனவும், உரிமைகளைப் பாதுகாத்து சமாதானத்துடன் வாழும் உரிமை நாட்டில் வாழும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனவும் பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் குறிப்பிடுகிறார்.
வதந்திகளை நம்பாமல் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக செயற்படுமாறு தான் நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக இன்று (17) தேசிய ஒற்றுமைக்காக சர்வமத அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழ்கின்ற சிலர் நாட்டின் சமாதானத்தையும், மக்கள் மத்தியில் இருக்கின்ற புரிந்துணர்வையும் இல்லாமல் செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும், அந்த முயற்சியின் பிரதிபலிப்பை நேற்று முன்தினம் அளுத்கமவில் தான் கண்டதாகவும் வஜிர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம், மதவாதம் எனும் செயற்பாடுகளின் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை கடந்த முப்பது ஆண்டுகளாக மக்கள் அனுபவித்திருக்கின்றனர். “குரோதத்தினால் குரோதத்தை வெல்லவியலாது” என்ற தாரகமந்திரத்தை மனதிற்கொண்டு செயற்படுமாறு நாட்டு மக்கள் அனைவரையும் தான் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
யார் தவறிழைத்தாலும் அவரது தவறுக்கு அரசாங்கம் தக்க தண்டனை வழங்க பின்வாங்கக் கூடாது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் குறிப்பிட்டிருக்கின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment