Friday, June 20, 2014

குழப்ப நிலையை ஏற்படுத்துவதில் அமெரிக்கா பின்னணி! 'தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்!

இலங்கையில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதில் அமெ ரிக்கா பின்னணியாக இருக்கின்றது. இவ்வாறான தொரு நிலையில், மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியஸ்தர்களை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'இலங்கையில் அசாதரண சூழ் நிலையை உருவாக்குவதில் அமெரிக்கா பின்னணியில் இருந்து வருகின்றது. இதற்காக அமெரிக்கா பண உதவியையும் வழங்கி வருகின்றது. இது விடயத்தில் மக்கள் பொறுப்புனர்ச்சியுடனும் அவதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு காரணமாகும். செய்திகளை திரிபு படுத்தி பொய்யான தகவல்களை குறுஞ்செய்தி மூலமும், முக நூல் மூலமும், ஏனைய இணைய தளங்கள் மூலமும் பரப்பியிருந்தனர். சில திரிபுபடுத்தப்பட்ட குறுஞ் செய்திகள் மூலம் நாட்டில் குழப்பத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முனைகின்றனர்.

அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 40பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை செய்யப்பட்ட பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். தீவிரமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி, முஸ்லிம் மக்களுடன் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளவர் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சகல தரப்பினருக்கும் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் என்னுடன் தொடர்புகொண்டு, கிழக்கு மாகாணத்தில் சுமூக நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அந்த வகையில் நான் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன்.

இங்கு பல தரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் உள்ளனர். இயல்பு நிலையை பாதிக்கச் செய்வதால் அன்றாடம் தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குழுவின் நடவடிக்கையினால் பலரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது' என்றார்.

'தீய சக்திகளுக்கும் அடிப்படைவாத சிந்தனை உள்ளவர்களுக்கும் பலியாகிவிடாமல் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும். இன்று சில அறபு நாடுகளில் நடைபெறும் பிரச்சினைகள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அழிவுகளை நாம் பார்க்கின்றோம். அதைப்போன்று இந்த நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க கூடாது' என்று அவர் வலியுறுத்தினார்.

'அளுதகமை தர்கா நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு வதற்காக இங்கும் பொருட்கள் சேகரிப்பு மற்றும் பண வசூலிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் மோசடிகள் இடம் பெற்று விடக் கூடாது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து இங்கு உங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்களை அவரிடம் கலந்துரையாடி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் வன்முறைச்சம்பவங்களினால் சேதமடைந்துள்ள வீடுகளை இலங்கை இராணுவத்தினரினால் புனரமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். யாராக இரந்தாலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் படையினால் செயற்படுவார்கள். அளுத்கமை மற்றும் தர்கா நகர் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள' என்றும் லால் பெரேரா கூறினார்.

பொது பல சேனா ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாக முஸ்லிம்கள் மீது குறி வைத்து செயற்படுகின்றனர். பள்ளிவாயல்களை தாக்குகின்றனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தாக்குகின்றனர். இந்த நிலையில் பொது பல சேனாவை ஏன் தடை செய்யவில்லை என அங்கு ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி, 'இது ஒரு ஜனநாயக நாடு எடுத்த எடுப்பில் எவரையும் தடை செய்ய முடியாது' என்றார்.

'நிலைமைகளை அவதானித்து வருகின்றோம். சட்டத்தின் மூலம் இவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர், கல்குடா ஆகிய பிரதேசங்களிலுள்ள உலமா சபை பிரதிநதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 comments :

Arya ,  June 20, 2014 at 7:02 PM  

He said true, USA paid NGO and politicians in Sri Lanka and Tamil naadu to do act against Sri Lanka, also in europe got payments Tamil LTTE diasporas and medias.

இவர் சொல்வது உண்மை, இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமெரிக்க இலங்கைக்கு எதிராக செயல் படுவதுக்கு பெரும் தொகை பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பாவில் புலன் பெயர் புலிகளுக்கும் ஊடகங்களுக்கும் பணம் வழங்க பட்டுள்ளது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com