ஐ. நா மனித உரிமை குழு இங்கு வந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது! சபாநாயகரிடம் பிரேரணை!
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ. நா மனித உரிமை குழு இங்கு வந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என்று கோரி, ஆளும் தரப்பு எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் நேற்று பிரேரணையொன்று கையளிக்கப்பட்டது.
இந்த பிரேரணையில் ஆளும் தரப்பு எம். பிக்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்தது. இதன்படி குறித்த பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கும் தினம் தொடர்பாக நாளை நடைபெறும் (13) கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான விவாதம் அடுத்த வாரம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மனித உரிமை பேரவை அரசாங்கத்திடம் கோரியிருந்தது. ஆனால் மனித உரிமை விசாரணைக் குழுவுக்கு இங்கு வர அனுமதிப்பதா? இல்லையா என்ற பொறுப்பை பாராளுமன்றத்திடம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவை எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழு தீர்மானித்தது.
இது தவிர நேற்று முன்தினம் மெதிரிகிரியவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனீவாவில் நியமிக்கப்பட்ட குழு இங்கு வர அனுமதி கோரியிருப்பதாகவும் அது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை பாராளுமன்றத்திடம் வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை ஜெனீவா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது என ஐ.நா.வுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவும் மனித உரிமை பேரவை மா நாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஒன்பது பேர் நேற்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் பிரேரணையொன்றை கையளித்தனர். அதில் இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையில் அசல ஜாகொட, மாலனி பொன்சேகா, ஜானக பிரியந்த பண்டார, துமிந்த சில்வா, உதித்த லொகுபண்டார , ஏ.எச்.எம். அஸ்வர். சாந்த பண்டார, ஜே.ஆர்.பி. சூரியப் பெரும, நிமல் விஜேசிங்க ஆகிய எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்தப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் நாளை (13) கட்சித் தலைவர் கூட்டமொன்றை கூட்டியுள்ளதோடு பிரேரணையை எத்தனை நாட்கள் விவாதத்துக்கு எடுப்பது என்பது குறித்தும் அதற்கான திகதி குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி கூட உள்ளதோடு அடுத்த வாரத்தில் ஜெனீவா விசாரணைக்குழுவை அனுமதிப்பதற்கு எதிரான பிரேணை குறித்து விவாதம் நடாத்தப்படும் என தெரியவருகிறது. சாதாரண பெரும்பான்மையுடன் குறித்த பிரேரணையை நிறைவேற்ற முடியும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment