கறுப்பு ஜூலையின் மறுபிறப்பு! தமிழில்: - (இரண்டாம் இணைப்பு) கலைமகன் பைரூஸ்
“முதலில் மனிதன் தன் உயிரைப் பாதுகாப்பதற்கே போரிட்டான். அதன் பின்னர் தனது குழுவை, தனது இனத்தை, நீதியை பாதுகாப்பதற்காகப் போரிட்டான். அத்தோடு மதத் தலைவர்கள் தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டார்கள். ஆயினும், இன்று இனங்களிடையே பரஸ்பர நல்லுறவையும், சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் போரிட வேண்டியுள்ளது”
“இங்கு நாங்கள் வாழ்வதுடன் மற்றவர்களும் வாழ்வதற்கு இடங்கொடுக்க வேண்டும். இது அவ்வாறானதொரு காலகட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் குரோதம் நினைக்க எங்களால் முடியாது.”
மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிதா என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க 1956 இல் மக்கள் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைக்கொண்டதன் பின், ஐக்கிய நாடுகள் பேரவையில் உரையாற்றிய உரையின் ஒரு சிறு பகுதியாகும். அன்றும் நாட்டிலே வர்க்கவாத வேற்றுமை சிறிது தலை தூக்கியே இருந்தது.
தற்போதைய இலங்கை கூட, எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க நிர்மாணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துடன் கூடிய அரசினாலேயே ஆளப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவலை, அளுத்கம பகுதிகளில் நடந்த சிங்கள - முஸ்லிம்களுக்கிடையேயான தகராறு கூட இவ்வரச நிருவாகத்தின் கீழேயே நடைபெற்றது. தங்கள் கட்சியை நிர்மாணித்தவரின் கூற்றை யார்தான் மறந்தாலும், அக்கட்சியை சேர்ந்தவர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்பது உறுதி.
எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அன்று அவ்வாறு சொன்னது ஒருபுறமிருக்க, கொழும்பு பற்றி எழுதியுள்ள இந்திய தூதுவர் ஒருவர் வேறொரு வகையில் குறிப்பிடுகிறார்.
“சமாதானத்திற்காக பாடுபடுபவர்களும், சமாதானத்திற்கான அனைத்து விடயங்களும் ஆசிர்வாதிக்கப்படுவர், ஆசிர்வாதிக்கப்படும் என அனைத்து மத நூல்களும் கூறுகின்றன. ஆயினும் 1986 இல் ஸ்ரீலங்காவில் சமாதானத்திற்காக செயற்படுவது படுபயங்கரமான செயலாக இருந்தது.”
“விஜய குமாரத்துங்க அவருள் இருந்த சமாதானத்திற்கான விருப்பு மற்றும் சிந்தனைகளுக்காக அவ்வாண்டின் சில மாதங்களுக்கு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார். ”
1980 களில் சமாதானத்திற்காக பாடுபட்டவர்களின் நிலை இவ்வாறாகத்தான் இருந்தது. இது 30 ஆண்டு கடும் யுத்தத்தின் பின்னர்தான் இராணுவத்தினரின் பலத்தினால் முடிவுக்கு வருகின்றது. அன்றிலிருந்து ஐந்து வருடங்கள் உருண்டோடியுள்ள போதும், சமாதனம் மற்றும் இனங்களிடையே புரிந்துணர்வு பற்றிப் பேசுவது மீண்டும் பிரச்சினைக்குரிய செயற்பாடாக உள்ளது. சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அது “மும்மணிகளின் ஆசிர்வாதம்” (துன் சரண) என்பதற்குப் பதிலாக “நாங்கள் சரணம்” (அப சரண) முளைத்தெழுந்ததுடன் ஆரம்பமானதோ என்று கூறத் தெரியவில்லை. ஒரு சிறு கல் பேருவலையைத் தீப்பற்றி எரியச் செய்தது. அதற்கு முன் சாம்பலுக்குள் தீப் பொறிகள் ஆங்காங்கே இருந்திருக்கலாம். ஆயினும் சிங்கள - முஸ்லிம்கள் அதிகமானோருக்கு அவர்கள் இருந்த இடங்கள், உடைமைகள் அனைத்தும் இல்லாதொழித்தே தீயணைந்தது.
இலங்கையின் முதலாவது சுதந்திரம் முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் தலைமையிலேயே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அது பூர்த்தியான சுதந்திரம் அல்ல என சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் - இனங்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்பி “இலங்கையர்” என்ற தன்மையை ஏற்படுத்த முடியாமற் போனமையே அதற்குக் காரணம். இதனால் அடிக்கடி ஏற்பட்ட குழுவாத பிளவுகள் பின்னர் இனவாதப் பிளவாக உருமாறி 30 ஆண்டு சிவில் யுத்தத்திற்கு அடிகோலியது. அதனால் மீண்டும் நாங்கள் இரண்டாவது சுதந்திரத்தைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார். இதனால் முதலாவது சுதந்திரத்திற்காக தேசபிதாவையும் இரண்டாவது சுதந்திரத்திற்காக தற்போதைய ஜனாதிபதியையும் நினைவுகூருகிறோம்.
இரண்டாவது சுதந்திரத்தின் தேனிலவையும் வீணாகக் கழித்துள்ள நாங்கள் மீண்டும் வர்க்கவாத பிளவினைக் கட்டியெழுப்பியுள்ளதாகவே எண்ணவேண்டியுள்ளது. தமிழ் மக்களுடனான பிரச்சினை இன்னும் இருக்க, தற்போது முஸ்லிம்களுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்களே என யாரேனும் ஒருவர் குறிப்பிடுவாராயின், அது பொய்யே அல்ல என்று சொல்லும் அளவுக்கு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
“அதற்குக் காரணம் முஸ்லிம் அடிப்படைவாதம்தானே?”
எனவும் ஒருவருக்கு தர்க்கிக்க முடியும். அதற்கு உதாரணமாக “ஜிஹாத்”, “தலிபான்”, “அல்-கைதா” அமைப்புக்கள் சிலவற்றை காட்ட முடியும். எல்.ரீ.ரீ.யின் அனைத்து இரகசியங்களையும் வெளிக்கொணர்ந்த எங்கள் அதிதிறமைமிகு புலனாய்வுப் பிரிவினருக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி கண்டுபிடிப்பதற்கு சிரமமே இருக்காது என்று ஒருவர் சிந்திப்பதில் எவ்வித்த் தவறும் கிடையாது.
“முஸ்லிம் சமூகத்தினுள்ளும் அடிப்படைவாதக் குழு இருக்கின்றது. பௌத்த தலிபான்களும் உள்ளனர். அவர்களுக்கு நோர்வேயிலிருந்து உதவித் தொகை வருகின்றது. என்றாலும் இந்நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு நடைபெற்றால் அதற்குப் பலியாவது இளைஞர்களே, அவ்வாறு பலியானால் இந்நாடு சுடுகாடாக மாறிவிடும்.”
-அமைச்சர் விமல் வீரவங்ச (25.06.2014 லங்காதீப)
இவ்வாறு சென்றால், இலங்கை என்ற நாடு எவ்வாறு வெளியே வருவது?
அமைச்சர் விமல் வீரவங்ச மேற்சொன்ன உண்மையைத்தான் தெளிவுறுத்துகின்றார். எந்நாளும் யுத்தம் செய்துகொண்டே இருக்கலாம். அவ்வாறாயின் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? கடந்த காலங்களில் நாங்கள் பெற்ற படிப்பினைகளை கருத்திற் கொண்டு, இப்போதாவது விடயங்களில் தெளிவு கண்டு, இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கு சிறந்ததொரு அரசியலை நாடுவதே அதற்கான வழி. கடந்த கால படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்திற்கொண்டு நிகழ்காலத்திற்கு ஏற்ப அதனைச் செயற்படுத்துவதே தேவையாக இருக்கின்றது.
“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் ஏதோவொரு அசமந்த நிலையினால் 1983 ஜூலைக் கலவரம் பெரும் வடுவை ஏற்படுத்தியது. கலவரம் ஏற்பட்டவுடனேயே ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கவில்லை என ஜனாதிபதிமீது குற்றம் சுமத்தினர். உண்மையான நிலை என்னவென்றால், ஊரடங்குச் சட்டம் பின்னர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதனை நடைமுறைப்படுத்த விருப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.”
“1983 கலவரம் 1958 கலவரத்துடன் வேறுபடுவது எவ்வாறெனின், பாதுகாப்புப் பிரிவினரின் நாடகத்தினாலேயே. கலவரத்தின் ஆரம்ப நாட்களில், என்றும் இல்லாதவாறு சட்ட நடவடிக்கைகள் மந்தநிலையிலேயே இருந்தன.”
“தான் அவ்விடத்திற்கு சென்று உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சென்ற வேளையிலும் அவர்கள் அவ்விடத்தில் பங்களிப்புச் செய்யாமல் கவனத்திற் கொள்ளாதிருந்தனர். சட்டமும் நீதியும் முழுமையாக செயலிழந்திருந்தன.”
(ஜே.ஆர். ஜயவர்த்தன வாழ்க்கை வரலாற்றிலிருந்து..)
பிற்காலத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.எம்.த. சில்வா தெளிவுறுத்தும் இவ்விடயத்துடன் தொடர்பான காரணிகளை அன்று எதிர்க்கட்சியில் இருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் வலது சாரிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு தெளிவுறுத்தியபோதும், தேவையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இயலாது போயுள்ளது. இதனால் 1983 கறுப்பு ஜூலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஜே.ஆர். ஆட்சி தள்ளப்பட்டது. பிற்காலத்தில் இவ்வனைத்து விடயங்களையும் தனது ஞானத்தினால் தெரிந்துகொண்ட ஜே.ஆர்., சிரில் என்ற அரசியல் அபிமானம்மிக்க தனது உற்ற உறவினரைக்கூட அரசாங்கத்திலிருந்து தூக்கிவிட்டார். ஜே.ஆரின் நெருக்கமான உறவினர் ஒருவரே அதற்குக் காரணமாக இருந்தவர் என்பது தெளிவாகியது. என்றாலும், அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக செயற்பட்டிருந்தன.
1983 கறுப்பு ஜூலையின் படிப்பினைகள் தற்போதைய அரசுக்கும் தேவைப்பாடானது. அளுத்கம, பேருவலை கலவரம் தொடர்பில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் கட்சிக்கு விரல் நீட்டிக் கொண்டிருக்கின்றது. இதில் அரசியல் கலந்துள்ளது என்பது உண்மை. அன்று எதிர்க்கட்சியும் இவ்வாறுதான் நடந்துகொண்டது. அது பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் நடாத்தப்படுகின்றது. மங்கள சமரவீர பாரதூரமான குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு அடங்கிப்போய் தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணர்வதில்லை எனச் சொல்வது மேலும் பாரதூரமானது.
“இது எங்கள் நாட்டுடன் வெளிநாட்டு உறவை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியாகும்.”
“சிங்கள ராவய, பொதுபல சேனா அமைப்புக்களின் பின்னணியில் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கின்றர்”
“அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கையில் வியாபார நிலையங்கள், வீடுகள் தீவைக்கப்படும்போது பாதுகாப்புப் பிரிவினர் எங்குதான் நின்றிருந்தார்கள்?”
இது மங்கள சமரவீர முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒருசில மட்டுமே. இது மங்களவின் தனிப்பட்ட செயற்றிட்டமாக இருக்க முடியாது. அத்தோடு அவர் நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு பின்வாங்கவுமில்லை. மிலேனியம் சிட்டியை எதிர்பார்த்து அரசியல் செய்வதை விடவும் இதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. “ஆம், நான் குற்றம் சுமத்துகிறேன்.. என்னைக் கைதுசெய்து விசாரணை மேற்கொள்ளுங்கள்” என வேறுவிதமாகவும் சொல்லியிருக்கிறார். இது அவர் முஸ்லிம்களைக் கருத்திற் கொண்டுதான் சொல்கிறார் எனவும் கொள்ளமுடியாது. அதற்கப்பாற் பட்டது. இது பச்சைப் பொய் என வைத்துக் கொள்வோம். என்றாலும் தர்க்கிக்க வேண்டியதாகின்றது. மறுபுறத்தில் எதிர்க்கட்சி இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்தும்போது, அரசாங்கம் வாய்பொத்தி மௌனியாக நின்றிருக்குமாயின் 1983 ஜே.ஆர். ஜெயவர்த்தன சாப்பிட்டதையே சாப்பிட வேண்டிவரும்.
இவை அனைத்தும் சர்வதேச காலஅட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதோ என சந்தேகம் எழுகின்றது. இலங்கையில் பேருவல, அளுத்கம தீப்பற்றி எரிவது ஜோர்தான் இளவரசர் அஸ்ஸெய்யித் ராட் அஸ்ஸெய்யித் அல் - ஹுஸைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளராக பதவியேற்றதன் காலகட்டத்திலேயே. எங்கிருந்தோ வேலை நடக்கின்றது என்றிருந்தால் அது சரிவர நடக்கின்றது என்பது தெளிவாகின்றது.
அவ்வாறாயின், அரசாங்கத்திலுள்ள பாதுகாப்புப் பிரிவில் உள்ள சிலர் அரசாங்கத்திற்கு குழி பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனரா? அதற்கு உதவியாக இருக்கின்றனரா? பார்த்தபார்வையில் அதற்கு இடமில்லை எனத் துணியலாம். ஆயினும், 1983 இல் அவ்வாறான நிகழ்வு நடைபெற்றிருப்பது பிற்காலத்தில்தான் தெரியவந்துள்ளது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை மேற்கொள்வதே உசிதமானது. அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் புதியதொரு பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கலாம்.
வர்க்கவாதம் மற்றும் பிளவுகள் வளர்ந்துவந்தபோதும், அவற்றை வெற்றி கொண்ட நாடுகளையும் நாங்கள் தற்காலத்தில் காண்கிறோம். அதற்குச் சிறந்த உதாரணமாக தென்னாபிரிக்காவை எடுத்துக் காட்டலாம். ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று பெயர்பெற்று, பின்னர் நோபல் பரிசுக்குரியவராக மாறியவர் நெல்சன் மண்டேலா. இன்று இறந்தும் இறவாதவராக அவர் மக்கள் மனதில் இடம்பெறக் காரணம் செயற்கரிய செய்ததனாலாகும்.
ஒருமுறை அரசியலில் பெரும்பங்கு கிடைத்தாலும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் மீறப்படுமோ என்ற வாதம் நிலவியபோது, ஆபிரிக்காவின் வெள்ளையரான தலைவர்களுக்கு அவ்வாறு நடக்காது என நெல்சன் மண்டேலா குறிப்பிட்ட கூற்றானது எங்கள் நாடும் அவ்வாறானதொரு பாதையில் செல்லும்போது முக்கியத்தும் பெறும்.
மேலும், “ஆபிரிக்கா அங்கு வாழும் கறுப்பர் வெள்ளையர் அனைவருக்கும் சொந்தமானது. வெள்ளையரும் ஆபிரிக்கர்கள்தாம். எதிர்கால நிருவாகத்தின்போது பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினர் தேவைப்படுவர். அவர்களை கடலில் தள்ளிவிட வேண்டிய அவசியமில்லை என நான் சொன்னேன்.”
(நெல்சன் மண்டேலாவும் சுதந்திரம் தேடிச் சென்ற பாதையும்”)
மண்டேலாவின் கூற்றை தேவ வாக்காகக் கொண்டு, அதனை அரசியல் யாப்பிலும் சேர்த்து அதற்கேற்ப செயற்பட்டனர். அழகியல் அம்சம்மிக்க கதையாக மட்டும் கொள்ளவில்லை. எங்களுக்கான தேவைப்பாடும் அதுவே என்று புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.
சிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්රිය රාමනායක)
தமிழில் - கலைமகன் பைரூஸ்
0 comments :
Post a Comment