கொலைகாரனின் மரண தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்!
ராஜகிரிய றோயல் பார்க் தொடர் மாடிக் குடியிருப்பில் 2005 ஆம் ஆண்டு தங்கியிருந்த 18 வயதான இவோன் ஜோன்சன் என்ற யுவதியின் கொலை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஜூட் சமந்த ஜயமக என்பனுக்கு மேன்முறை யீட்டு நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை உயர்நீதி மன்றத்தினால் உறுதி செய்யப்பட்டதாக மேல்நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க அறிவித்துள்ளார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜூட் சமந்த ஜயமகவிற்கு நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த சிறைத்தண்டனையை எதிர்த்து ஜுட் சமந்த ஜயமக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை போதுமானதாக இல்லை எனவும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளியின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து ஜுட் சமந்த ஜயமக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேன்முறையீட்டினை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை உறுதிசெய்தது.
0 comments :
Post a Comment