Wednesday, June 25, 2014

உளவியல் நோக்கில் இளையோர் - இளையோர் ஓர் அறிமுகம். விரிவுரையாளர் எப். எச். ஏ. ஷிப்லி

இளையோர் பருவம் ஆங்கிலத்தில் adolescence என அழைக்கப்படுகின்றது. இப்பருவமே மனிதவிருத்திப்பருவங்களில் மிக முக்கியமான ஒரு பருவமாகக் கொள்ளப்படுகின்றது எனலாம். இப்பருவம் பிள்ளைப்பருவத்தின் முடிவின் போது ஆரம்பிக்கப்படுகின்றது. இக்குமரப்பருவம் எனும் சொல்லானது இலத்தின் மொழியிலிருந்து தோன்றியது. இது பருவமடையும் வயது அல்லது முதிர்ச்சி நோக்கி வளர்தல் என குறிக்கப்படுகின்றது. எனினும் கைத்தொழில் புரட்சியின் பின் ஏற்பட்ட விளைவுகளே இக்குமரப்பருவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தேவையை உண்டு பண்ணியது எனலாம்.
பொதுவாக இப்பருவமானது 10-24 வயதுக்குட்பட்ட வரை குறிப்பதாக கொள்ளப்பட்டாலும் உளவியலாளரின் வரையறைப்படி ஆண்பெண் இரு பாலாரிலும் 12 வயது முதல் 18, 20 வயதிற்குள் சாதாரணமாக முடிவடைகிறது எனவும் கூறப்படுகின்றது. எனினும் இப்பருவம் 25 வயதுவரை நீடிப்பதையும் கூறலாம். ஹோவின் கருத்து உலகில் இந்த வயதுடையோர் 1.8 மில்லியன்பேர் வாழ்கின்றனர். எனினும் 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி எமது நாட்டில் 5 மில்லியன் குமரப்பருவத்தினர் வாழ்கின்றார்கள் எனக்கணிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்பருவத்தினை பின்வருமாறு இலகுவாகப் பிரித்து நோக்கலாம்.

1) 10-14 வயதுக்கிடைப்பட்டவரை இளையோர் பருவத்தின் ஆரம்பப்பகுதி
2) 15-19 குமரப்பருவத்தின் இடைப்பருவம்
3) 20-24 குமரப்பருவத்தின் கடைசிப்பகுதி; எனக் கொள்ளப்படுகின்றது.

எனினும் இப்பருவத்தில் சிந்தனை, திறன்கள், ஆற்றல்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், உடல் உறுப்புக்கள் ஆகியவற்றில் துரிதமான மாற்றங்கள் நிகழும் பருவமாகவே காணப்படுகின்றது

மேலும் இளையோர் பருவத்தின் ஆய்வுகளை மேற்கொண்ட இளையோர் அளவியலின் தந்தையான (G.Stanly Hall) ஸ்டேன்லி ஹோல் இப்பருவம் ஒரு நெருக்கடியான துன்பமிக்கபருவம் “storm and stress” (குமுறலும் அழுத்தமும் நிறைந்த பருவம்) என்கின்றார். அத்தோடு இப்பருவத்தில் நேரும் நிகழ்ச்சிகள் பின்னர் நேரும் வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாய் விளங்கி அவன் பண்பு நலத்தை சீர்செய்கின்றன என்று அவர் கூறுகின்றார்

எனினும் இக் குமர்ப்பருவத்தில் உடல் வளர்ச்சி, மனவெழுச்சி, சுதந்திர உணர்ச்சி, சமூக வளர்ச்சி, அந்நியமாக்கப்படுதல் என்பன மிக முக்கியமான விடயங்களாகக் காணப்படுகின்றது. உடல்வளர்ச்சியை நோக்கும்போது உயரத்திலும் எடையிலும் குறிப்படத்தக்க மாற்றம் இடம்பெறுகின்றன. பெண்கள் ஆண்களை விட விரைவாக வளர்ச்சி அடைகின்றார்கள். இதன்போது மூளை வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. உடலியலின் மாற்றங்கள் விளைவாக மனவெழுச்சித் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

மேலும் Stanly Hall இன் கருத்துப்படி, இப்பருவம் கற்பனை இலட்சியங்களினாலும் பாலியல் உந்தல்களினாலும் சூழப்பட்ட பிரச்சினைக்குரிய பருவம் என்கின்றார். மேலும் இப்பருவத்திலேயே ஹார்மோன்கள் முதல்தடவையாக சுரக்கின்றன. உடலில் எல்லாப்பகுதிகளிலும் உடல்வளர்ச்சி சீராக நடைபெறாமையினால் சமவயதுடைய இருவரின் உடல் இயல்புகளை ஒப்பிடும்போது சிலவேளைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்தோடு இருவரது உடல்களும் சமஅளவில் சில வேளை வளர்ச்சியடைந்திருக்கவும் கூடும். இவ்வாறாக, இயல்புகள் தோன்றும் வேகம் வேறுபடுவதில் ஹோர்மோன்களின் தொழிற்பாடு, போசனை, நிலைமை, தலைமுறை இயல்வுகளின் தாக்கம் உட்பட பிற காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றது.

அத்தோடு குமரப்பருவம் பிள்ளைப் பருவத்தின் நிலையிலிருந்து ஒருவர் முழு முதிர்ச்சி நிலைக்கு மாற்றம் (transition) பெறும் பருவமாகும். இதன் முக்கிய தன்மை துரித மாற்றமாகும். இப்பருவம் இலட்சியங்கள் நிறைந்த பருவமாகவும் காணப்படுகின்றது. எனினும் இந்த லட்சியங்கள் உண்மை நிலையுடன் பொருந்தாதனவாக (unrealistic) காணப்படுகின்றது. இவற்றுடன், சமூக அறப்பண்புகளும் இப் பருவத்தில் காணப்படுகின்றது. இவையே இப் பருவத்தினரைப் பிற பருவத்தினரிலிருந்து பிரித்துக்காட்டுகின்றன.

அத்தோடு குமரப்பருவத்தினை “முரண்பாடுகள் நிறைந்த பருவம்” (stage of contradictions) எனவும் அழைக்கப்படுகின்றது. பெற்றோரின் முரண்பாடு, தன்னைப் பற்றிய கவலை, கல்வி, தொழில், எதிர்காலம் பற்றிய கவலைகளும் ஏக்கமும் நிராசையும், மனக்குழப்பமும் நிறைந்த பருவமாக இப்பருவம் காணப்படுகின்றது.

இப் பருவம் பற்றிக் கூறிய எரிக் எரிக்சன் தனக்குரிய தனித்துவத்தை அல்லது சுய அடையாளத்தை தரும் பருவம் எனக் கூறுகின்றார். இப்பருவத்தில் சிறப்பான சமூக வளர்ச்சி பெறுகின்றான், சமூக முதிர்ச்சியினையும் பொருத்தப்பாட்டினையும் அடைகின்றான். இதன் விளைவாக சமூகப் பிரச்சினைகளை தன்னல நோக்குடன் அணுகாமல் சமூகத்தில் பிறரது உரிமை, கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மதிப்புக் கொடுக்கின்றான். மேலும் பிறருடன் ஒத்துழைத்துச் செயற்படுவான். பல நண்பர்களைப் பெற்றிருப்பதோடு தன்னைப் பற்றிய உண்மையான மதிப்பீட்டைப் பெற்றிருப்பான். எனினும் சமூகத்தில் தமது பொறுப்புக்களை முழு அளவில் ஏற்கத் தேவையான திறன் இப் பருவத்தினரிடத்தில் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. இம் முழு வளர்ச்சி முதிர் பருவத்திலே ஒருவனிடம் ஏற்படுகின்றது. எனவே குமரப்பருவத்தினரிடத்தில் சமூக நிலைமைகளில் செயற்படக் கூச்சமும் குழப்பமும் காணப்படும். அத்தோடு வயது, நிலை, அறிவு ஆகியவற்றில் தன்னையொத்த பிறரின் மதிப்பைப் பெறவும் தன்னை மற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனோ நிலையும் ஏற்படும். இதன்போது ஒப்பார் குழுவின் தொடர்பு ஏற்படும்.

மேலும் அறநெறி, ஒழுக்க வளர்ச்சிகள் இப்பருவத்தில் முன்னேற்றம் அடைகின்றன. தன் வயதினை ஒத்தவரின் அறநடத்தைகளையும், கருத்துக்களையும் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்திருக்கும். இவர்கள் மரபுவழி வந்த பெற்றோர்களால் புகழப்படும் அறப்பழக்கங்களில் முழு நம்பிக்கையற்றவர்களாகக் காணப்படுவார்கள் எனலாம். அத்தோடு இக் குமரப்பருவத்தினரிடையே தலைமை தாங்கும் பண்புகள் இயல்பாகவே காணப்படுகின்றது. தன்னலமின்மை, பொறுப்புணர்ச்சி, தன்னை ஒத்தவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகளும் இவர்களிடத்தில் காணப்படுகின்றது.

இளையோரில் ஏற்படும் மாற்றங்கள்

இளையோர் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு மனிதர்களிடையேயும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள், ஏனைய பருவங்களிலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதாகவும் அமைந்து காணப்படுகின்றது. எனினும் குமரப்பருவத்தின் தொடக்கத்தை உடலியல் அடிப்படையிலே விளக்கமுடிகின்றது. ஆனால் இப்பருவத்தின் முடிவு மனவியலடிப்படையில் விளக்கப்படுகின்றது. இனி இம்மாற்றங்கள் நாம் விரிவாக நோக்குவோம்.

உடலியல் மாற்றங்கள்

உடலியல் மாற்றங்கள் நாம் நோக்குகின்ற போது பூப்புப்பருவம் தொடங்குவதிலிருந்து குமரப்பருவம் ஆரம்பிக்கின்றது. இப்பருவத்தில் ஒருவன் பிள்ளையுமல்ல முதிர்ந்தவனுமல்ல. இது ஆண் பெண் இரு பாலரினருக்கும் ஏறக்குறைய 11 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதுகளில் ஆரம்பித்து 18-21 வயதினில் முடிவடையும்.

இப்பருவத்தில் முக்கியமான உடலியல் மாற்றங்களாக இனப்பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சியடையும், பெண்களில் முதல் மாதவிடாய் ஏற்படும். ஆண்களில் பூப்பு உரோமம் தோன்றி விந்து வெளிப்படும். எனினும் வெளித்தோற்ற வளர்ச்சியைக் காட்டிலும் உள்ளுறுப்புகளின் வளர்ச்சி அதிகமாகக் காணப்படும். ஆண்பிள்ளைகளிடத்தில் முகத்தில் அரும்பு மீசை முளைக்கத் தொடங்குவதுடன் குரல்வளை முன்னோக்கித் தள்ளப்படுவதையும், சில வேளைகளில் முகத்தில் பருக்கள் தோன்றுவதையும் காணலாம்.

பெண் பிள்ளைகளிடத்தில் முகத்தில் புதுப்பொலிவும் சில வேளைகளில் பருக்களையும் உடலில் ஒருவித பூரிப்பையும் காணலாம் எனினும் குமரப்பருவத்தில் ஒருவனுடைய வளர்ச்சியில் வேகமும் தீவிரமும் அதிகம் காணப்படுகின்றது. இந்த வகையில் எலும்புக்கூடு வளர்கிறது. இதனால் உயரமும் எடையும் அதிகரிக்கின்றது. அத்தோடு, உடலின் உள்ளுறுப்புக்கள் மூளை என்பனவும் வளர்ச்சி பெறுகின்றது. எனினும் ஆண், பெண் போன்றவர்களிடத்தில் பின்வரும் உடலியல் மாற்றங்களை நாம் கண்டுகொள்ளமுடிகின்றது.

பெண்
 உயரமும் நிறையும் அதிகரித்தல்
 மார்பகங்கள் பருத்தல்
 பாலுறுப்பைச் சூழவும், கமக்கட்டுகளிலும் உரோமங்கள் வளர்தல்
 அதகளவு வியர்த்தல்
 இடுப்புப்பகுதி அகன்று விரிதல்
 தொடைகள் பருத்தல்
 பாலுறுப்பு பருத்தல்
 முகத்தில் பருக்கள் தோன்றல்
 மாதவிடாய் ஆரம்பித்தல் என்பவற்றைக் கூறலாம்.

ஆண்
 உயரமும் நிறையும் அதிகரித்தல
 தசைகள் விருத்தியடைதல்
 தோள்கள் அகன்று வளர்தல்
 குரல்வளை வெளித்தள்ளி வளர்தல்
 குரல் கட்டைக் குரலாக மாற்றமடைதல்
 கமக்கட்டுகள், மார்பு, பாலுறுப்பை சூழ்ந்த பகுதிகளில் உரோமங்கள் வளர்தல்
 அதிகளவு வியர்த்தல்
 பாலுறுப்பு (விதைகளும் ஆண்குறியும்) பருத்தல்
 முகத்தில் பருக்கள் தோன்றல்
 இந்திரிய சுக்கில வெளியேற்றம் ஆரம்பித்தல்

போன்ற தோற்றங்களை உடலியல் மாற்றங்களாக நாம் கொள்ளமுடிகின்றது. எனினும் மேலே கூறப்பட்ட வளர்ச்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆரம்பத்தில் பெண்பிள்ளைகளின் வளர்ச்சி வேகத்தை விட ஆண் பிள்ளைகளின் வளர்ச்சி வேகம் இரண்டு வருடங்கள் தாமதித்தே ஆரம்பிக்கும். ஆனால் 18 வயதினை அடையும் போது ஆண்களின் வளர்ச்சி பெண்களின் வளர்ச்சியை விட மேலோங்கிக் காணப்படும் எனலாம்.

அறிகை மாற்றங்கள்

குமரப்பருவமானது வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் ஆக்கப்பட்டுள்ள கூட்டு செய்முறை பருவமாகும். இக்காலப்பகுதியில் ஒரு இளையோரிடத்தில் அறிகை மாற்றங்கள் ஏற்படுகின்றது. அறுகைமாற்றம் பற்றி பியாஜே கருத்துப்படி ஒரு மனிதனின் சிந்தனைத்திறன் நான்கு படிகளில் வளர்ச்சியடைகின்றது என்கிறார்.

• குழந்தைப்பருவத்தில் (பிறப்பு.......வயது) ஒரு குழந்தை தனது சூழலைப் பற்றி அறிந்து கொள்கின்றது.
• முன்பிள்ளைப்பருவத்தில் நடைமுறை நடவடிக்கைகளை அறிந்து அதை நினைவில் வைத்துக்கொள்ளல்.
• பிள்ளைப் பருவத்தில் உளரீதியா நடவடிக்கைகள் தூண்டி விடப்படுகின்றன. அது ஒரு பொருளைக்கொண்டு மட்டுமே அமைகின்றது. உதாரணமாக ஒரு எட்டு வயது பிள்ளையினால் ஒரு பொருளைத் தூக்கி வீசும் போது என்ன நடக்கப்போகும் என்று எதிர்பார்க்கமுடியும்.
இளையோர் பருவத்தில் பிள்ளைப் பருவத்தில் கிடைத்த அனுபவங்களை ஒன்றிணைந்து அதனை செயற்படுத்துவதே இம்மாற்றமாகும் என Pinget கூறுகின்றார். எனினும் பிள்ளைப்பருவத்தை விட இளையோர் பருவத்தினரிடத்தில் தர்க்கவியல் திறன்களும், எதிர்காலம் பற்றிய தனது சிந்தனைத் திறனும் அதிகளவில் காணப்படும்.

எனினும் pயைபநவ இன் கருத்துப்படி இளையோர் பருவத்திலே ஏற்படுகின்ற அறிகை மாற்றமே உண்மையான அறிவு வளர்ச்சியின் ஆரம்பம் எனக் கூறுகின்றார். இக்காலத்தில் சிக்லான பல பிரச்சினைகளுக்கு முடிவு காணும் ஆற்றல் ஏற்படுகின்றது. மேலும் சமூக, அரசியல் பிரச்சினைகள், ஒழுக்கப்பிரச்சினைகள் என்பவற்றிற்கு தீர்வுகளைக் காண்பதற்கும் உண்மையான அறிவை தேடி அறிவதற்கும் அவனது உளநிலைகள் தகுதி பெறுகின்றது.


அத்தோடு நுண்மதித் திறன்களும் விரைவாக வளர்ச்சியடைவது பற்றி உளவியலாளரின் கருத்துக்களை நாம் நோக்குவோம். இப்பருவத்தில் கலந்துரையாடல் மூலமாக தங்களது கருத்துப் பரிமாற்றங்களை வெளிப்படுத்துவதோடு கருதுகோளை அமைத்து சிந்தித்தல் கோட்பாடுகளை உருவாக்குதல், கற்பனை செய்தல் ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்துவார்கள். மேலும் எடுகோள்களை உருவாக்குதல், அவற்றை பரீட்சித்தல், பொதுவிதிகளை அமைத்தல், தமது தீர்வுகளுக்கு தகுந்த காரணங்களை வெளிப்படுத்துதல், சிக்கலான தொடர்புகளை விளங்கிக்கொள்ளல் ஆகிய பல்வேறு திறன்கள் இப்பருவத்தில் விருத்தியடைகின்றது.

மனவளர்ச்சி மாற்றங்கள்

இளையோர் பருவத்தினரிடத்தில் மனவெழுச்சிகள் தீவிரமாக வளர்ச்சியடைகின்றது. இம் மனவெழுச்சி மாற்றம் உடல், உள்ளம் இரண்டையும் கலக்கும் ஒரு நிலையாகும். இம் மனவெழுச்சியானது இளையோர் பருவத்தினரை பெரிதும் பாதிக்கின்றது. இதற்குக் காரணம் இப்பருவத்தினரது வளர்ச்சியில் நிகழும் வேகமான மாறுதல்களே. உடலில் எழும் மாறுதல்களால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய கூச்சம், கவலை போன்ற மனவெழுச்சியை உண்டுபண்ணுகிறது.

மேலும் நம் தோற்றம், உடல்நலம், தம்மைப் பற்றிய பெற்றோரின் மனப்போக்கு, சமூகத்தில் நிலவும் அனுபவங்கள், பள்ளியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை ஆகியவற்றைப் பற்றிய கவலைகள் இளையோரிடத்தில் தீவிர மனவெழுச்சியை உண்டுபண்ணுகின்றது. மேலும் பெற்றோர், பெரியோர்களின்; கட்டுப்பாடுகளை அதிகம் விரும்புவதில்லை. இதனாலும் குமர்ப்பருவத்தினரிடத்தில் மனவெழுச்சிகள் ஏற்படுகின்றது. அத்தோடு மனவெழுச்சி மாற்றங்கள் பாலியல் உணர்ச்சிகளின் போதும் ஏற்படுகின்றது.

எனினும் இப்பருவத்தினரை அளவுக்கு மீறிக் கட்டுப்படுத்திப் பார்ப்பது பயனற்றது மட்டுமன்றித் தீமை பயக்கும். இவர்களுக்கு பெற்றோர் அன்பு, பரிவு காட்டி, அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியை மதித்து வீட்டில் பொறுப்புள்ள செயல்களை செய்ய வாய்ப்பு அளிக்கும் போது மனவெழுச்சி தவிர்க்கப்படும்.

நடத்தை மாற்றங்கள்

இளையோர்களிடத்தில் நடத்தை ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சமூக, அரசியல், சமய உணர்ச்சிகளின் போது பல வழிகளில் மாற்றமடைகிறது. தான் ஒரு கலைஞனாகவும் ஒரு வீரனாகவும், மேதையாகவும் விளங்க விரும்புகின்றான். பெற்றோரின் கட்டுப்பாடுகளிலிருந்து சிறிது சிறிதாக ஒதுங்குகிறான்.

அத்தோடு சுதந்திரத்தை விரும்புவதோடு தடைவிதிக்கும் போது சச்சரவு கொள்வார்கள். அவை தவிர குழுவாக செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் ஒருவனின் மனக் கருத்தின் அடிப்படையில் நடத்தைகள் மாற்றம் பெறுகின்றது.

மேலும் இளைஞன்; ஒருவன் சமூக பிரச்சினைகளை தன்னிலை நோக்குடன் அணுகாமல் சமூகத்தில்; பிறருடைய உரிமைகள், கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் நோக்குடன் அனுகுவான். மேலும் பிறருடன் ஒத்துழைத்துப் போகும் தன்மையும் தான் செய்யும் வேலைகளுக்கு தானே பொறுப்பேற்கும் தன்மையும் ஒரு பிரச்சினை பிறரை எவ்வாறு பாதிக்கும் என உணர்ந்து செயற்படுவான். அத்தோடு சமூகத்துடன் ஒன்றிப்போய் சமூகநலனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவான்.

மேலும் இளையோர்கள் குழுக்களாக சேர்ந்து செயற்படும் போதும் அவர்களது நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது ஒருவன் குழுவிலுள்ள ஒரு நபரைப் பார்த்து செயற்படும்போது அவனிடத்தில் நடை, உடை, பாவனை என்பவற்றில் மாற்றம் ஏற்படுகின்றது.

மேலும் பாடசாலையில் நடைபெறும் விழாக்களின் போது பங்கேற்று பல திறமைகளைப் பெற்றுக்கொள்கிறான். அவை தவிர சமூக வளர்ச்சிகளின் பிறப்பிடமும் இவ் இளையோர் பருவம் என்று கூறுமளவிற்கு சமயம சார் சமூக சேவைகளில் ஈடுபடுவதோடு, சமய வழிபாடு, சமய சடங்குகள், சமய விழாக்களின்போதும் ஈடுபட்டு தலைவர்களாக மிளிர்வார்கள். இவ்வாறாக இளையோர் செயற்பாடுகளில் நடத்தை ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதை நாம் அவதானிக்கலாம்.

ஆதலால்தான் பெற்றோர்கள் இப்பருவதிலுள்ள பிள்ளைகளின் நடத்தைகளை தினமும் கண்காணித்து அவதானமாக வளர்க்கவேண்டிய மிக முக்கியமான பொறுப்பை வகிக்கின்றனர். இப்பருவத்தில் பிள்ளைகளின் நடத்தைகளும் சிந்தனைகளுமே அவர்களின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளம் என்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சரியான முறையில் வளர்ப்பதன் மூலம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்க முடியும்.


தொகுப்பு :-

எப். எச். ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

1 comment: