ஸ்காட்லாந்தில் பன்றி இறைச்சியை மசூதிக்குள் வீசிய இருவருக்கு சிறைத்தண்டனை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எடின்பரோ நகரில் உள்ள மத்திய பள்ளிவாசல் ஒன்றின் கதவு கைப்பிடிகளிலும் உள்ளேயும் பன்றி இறைச்சி வீசப்பட்டிருந்தைக் கண்டு வெகுண்ட இஸ்லாமிய மக்கள் காவல்துறையில் புகார் செய்தனர். பன்றி இறைச்சியைப் பயன்படுத்துவது என்பது இஸ்லாமியத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இதற்குக் காரணமாயிருந்த இருவர் விரைவிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டனர். தெற்கு ஸ்காட்லாந்தின் கலஷீல்ஸ் நகரைச் சேர்ந்த டக்லஸ் க்ருய்க்ஷன்க்(39) என்பவனும் கிளாஸ்கோ நகரின் அருகில் உள்ள பைஸ்லே என்ற இடத்தைச் சேர்ந்த செல்சியா லம்பி என்ற 18 வயது வாலிபனுமே இந்த காரியத்தைச் செய்திருந்தனர். இவர்களுக்கு தீவிர வலதுசாரி ஸ்காட்டிஷ் பாதுகாப்பு லீக் தொடர்பு இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
அச்சுறுத்தல் மற்றும் தவறான நடத்தையை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தியதாக நேற்று விசாரணை முடிவில் தெரிவித்த நீதிபதி, டக்லசுக்கு 9 மாத சிறைத்தணடனை விதித்தார். செல்சியாவை 12 மாதங்கள் இளம் குற்றவாளிகளுக்கான ஒரு நிறுவனத்தில் இருக்குமாறு அந்த நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் தவிர இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட 25 வயதுடைய வெய்ன் ஸ்டில்வெல் கடந்த செப்டம்பரில் இருந்தே 10 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றான்.
ஸ்காட்டிஷ் சமூகத்தின் மதிப்புமிக்க ஒருங்கிணைந்த பகுதியாக முஸ்லிம் சமூகத்தினர் இருந்து வருகின்றனர். எனவே நவீன ஸ்காட்லாந்தில் இது போன்ற தாக்குதல்களுக்கு இடமில்லை என்று நீதிபதி ஜான் லோக் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment