கடித்து குதறிய சுவாரஸ்: 2 வருடம் விளையாட தடை? (வீடியோ )
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி வீரரை கடித்து வைத்த உருகுவே வீரர் சுவாரஸ்க்கு 24 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம்.'டி' பிரிவில் நடந்த இத்தாலிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ், ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருக்கையில், பந்து வருவதை எதிர்நோக்கி நின்ற இத்தாலி வீரர் ஜியார்ஜியோ செலினியின் இடது தோள்பட்டை மீது திடீரென பாய்ந்து சுவாரஸ் கடித்து தள்ளினார்.
இதனால் நிலைகுலைந்து போன செலினி மைதானத்தில் விழுந்தார். பின்னர் சுவாரசின் பற்களின் தடங்கள் பதிந்து இருப்பதை, பனியனை கழற்றி செலினி காண்பித்து, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவர் மார்கோ ரோட்ரிகசிடம் செலினி முறையிட்டார். ஆனால் நடுவர், சம்பவத்தை கவனிக்காததால், ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்.
இது தொடர்பாக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு 24 போட்டிகளில் விளையாட தடை அல்லது 2 ஆண்டுகள் விளையாட தடை இவற்றில் ஏதாவது ஒன்று விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் பற்றி சுவாரஸ் கூறுகையில், செலினியின் தோள்பட்டையில் எனது முகம் பட்டது உண்மை தான். ஆனால் நீங்கள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமின்றி களத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரண விடயம் இதை பெரிது படுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்சினையில் வீடியோ ஆதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. மைதானத்தை சுற்றிலும் மொத்தம் 34 கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான காட்சிகளை தீவிரமாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2010, 2013 ஆம் ஆண்டுகளில் இது போன்று கடித்து வைத்து விளையாட தடை பெற்ற சுவாரஸ் தற்போது மூன்றாவது முறையாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
0 comments :
Post a Comment