Tuesday, June 3, 2014

தற்கொலை செய்ய முயற்சித்த 15 வயது சிறுவன்!!

காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் காட்டுப் பகுதிக்கு சென்ற மாணவர் ஒருவர், தூக்கிட நினைத்த மரத்தின் கீழ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது உறவினர்கள் அவரை கண்டு பிடித்துள்ளனர். 15 வயது பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நொச்சியாகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் குறித்த மாணவர் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவர் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் காதல் தொடர்பினைப் பேணி வந்துள்ளார். ஓராண்டு காலம் நீடித்த இந்த காதல் உறவு அண்மையில் முறிவடைந்ததாகவும், இதனால் மாணவர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காதல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத 15 வயது மாணவர், காட்டுப் பகுதிக்கு சென்று மரமொன்றில் தூக்கிட்டு உயிரை விட திட்டமிட்டுள்ளார். இதன்படி கயிறு ஒன்றை எடுத்துக் கொண்டு சென்ற மாணவர், இறுதி நேரத்தில் எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஆழ்ந்து உறங்கிவிட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த முதலாம் திகதி காணாமல் போன மாணவரை பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களிலும் தேடி இறுதியாக தனுமடலாவ காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த போது கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஒரு நாள் உணவு எதுவுமின்றி மாணவர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com