Sunday, May 4, 2014

தமிழீழத்தில் நேற்று மோதல்! எட்டு அமைச்சர்கள் ஸ்கைப்பில் இருந்து வெளிநடப்பு!!

வெளிநாடுகளில் தமிழீழத்தை உருவாக்கியுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசின்’ அமைச்சரவைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோது, அதில் தமிழீழத்தின் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர் சுதன்ராஜ் மீது 8 அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தொடர்பான செய்திகளுக்கே தமிழீழ தகவல் தொடர்பு அமைச்சர் முக்கியத்துவம் தருகிறார் என்பதே குற்றச்சாட்டு.

வெளிநாட்டு தமிழீழ அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகெங்கும் 663 மில்லியன் மக்களை உறுப்பினர்களாக கொண்ட ‘ஸ்கைப்’ (Skype) மூலம் தமது அமைச்சரவையை நடத்தி வருகிறது.

மாண்புமிகு தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரும் 12 அமைச்சர்களும் நேற்று ஸ்கைப்பில் லாக்-இன் செய்து, தமிழீழ நலனுக்கான திட்டங்களை வகுத்து, தமக்கிடையே உரையாடினர்.

வெளிநாட்டு தமிழீழ அமைச்சரவையில், பாரபட்சம் காட்டாமல் ஊருக்கு ஒன்றாக ஏராளமான அமைச்சர்கள் உள்ளனர். மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு களியாட்டத் துறை அமைச்சர் என பல அமைச்சர்கள் இருந்தும், வெறும் 12 பேர் மட்டுமே ஸ்கைப்புக்கு வந்தது, தமக்கு கவலையை ஏற்படுத்துவதாக தமிழீழ பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்தார்.

“எமது மதிப்புக்குரிய விளையாட்டுத்துறை அமைச்சர்கூட இன்று ஸ்கைப்புக்கு வரவில்லை என்பதை தமிழீழ பிரதமர் அவர்கள் கவனிக்க வேண்டும்” என மற்றொரு அமைச்சர் போட்டுக் கொடுத்தார். (ஒருவேளை ‘இந்த அமைச்சரவை கூட்டமே ஒரு விளையாட்டுத்தான்’ என விளையாட்டுத்துறை அமைச்சர் நினைத்து விட்டாரோ, என்னவோ)

இலங்கை உள்நாட்டு அபிவிருத்தி(யை வெளிநாட்டில் இருந்து கவனிக்கும்) அமைச்சர் (Homeland Development Minister) முருகதாஸ் பேசுகையில், “எமது மாண்புமிகு பிரதமர் உருத்திரகுமார் அவர்களின் இலங்கை பாஸ்போர்ட் காலாவதியானதை அடுத்து, அவரால் வெளிநாடுகளுக்கு சென்று அமைச்சரவை கூட்டங்களை நடத்த முடியாமல், ஸ்கைப்பில் நடத்தவேண்டி உள்ளது.

பிரதமருக்கு செல்லுபடியாககூடிய பாஸ்போர்ட் வழங்க ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்காக ஐ.நா. முன் போராட்டம் நடத்தவும் நான் தயார்” என்றார் உணர்ச்சிபூர்வமாக.

இதற்கு பதிலளித்த பிரதமர், “இந்த விஷயம் குறித்து உயர்மட்ட ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும்” என்றார்.

இந்தக் கூற்றால் சமாதானமடையாத அமைச்சர் முருகதாஸ், “அமெரிக்காவில் வசிக்கும் எமது மாண்புமிகு பிரதமர் அருகிலுள்ள நாடான கனடாவுக்கே செல்ல முடியாமல் இருப்பதை, மாற்றுத் தளங்கள் கிண்டல் செய்கின்றன” என்றார் கவலையுடன்.

premium-id“அப்படியா? என்னவென்று கிண்டல் செய்கிறார்கள்?” என ஆர்வத்துடன் விசாரித்தார், நிதியமைச்சர் ஜெயந்தன்.

“கூரையேறி கோழி பிடிக்க முடியாத பிரதமர், வானம் ஏறி தமிழீழம் பெற்று தருவாரா? என்று எழுதுகிறார்கள் மாண்புமிகு நிதியமைச்சரே”

“சரி.. சரி.. இந்த பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்” என அவசரமாக கூறினார் மாண்புமிகு தமிழீழ பிரதமர் உருத்திரகுமார் (இதற்கு மேலும் விட்டால், வேறு என்ன கதையெல்லாம் வருமோ என்று அவர் நினைத்திருக்கலாம்) .

இதையடுத்து, தமிழீழ ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜூக்கு எதிராக 8 அமைச்சர்கள் குரல்கொடுத்தனர்.

“அமைச்சர் சுதன்ராஜ், ஊடகங்களுக்கு அனுப்பும் செய்திகளில் தமக்கு வேண்டியவர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்” என்றார் ஒருவர்.

மற்றொரு அமைச்சர், அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார். “ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமை அமர்வு மாநாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரான்சில் தமிழீழ விழிப்பு மாநாடு நடந்தது. அதில் தமிழீழ மக்களின் பேராதரவை பெற்ற தலைவர்களான கொலின்ஸ், நாகலிங்கம், பாலசிங்கம், கமல் (நடிகர் அல்ல) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட தமிழீழ தலைவர்கள் ஒன்றாக கூடி நின்று போஸ் கொடுத்து எடுத்த போட்டோவை ஊடகத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், குரூப் போட்டோவில் புன்னகையுடன் காட்சியளித்த இருவரின் பெயரை மட்டும் பிரசுரித்து விட்டு, மற்ற தலைவர்களின் பெயர்களை தகவல் தொடர்பு அமைச்சர் சுதன்ராஜ் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தார்” என்றார், அவர்.

இதையடுத்து ஒரே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. ஸ்கைப் திரையில், ‘Audio level very very high’ என்ற எச்சரிக்கை சிவப்பு நிறத்தில் பளிச்சிட்டது.

குழப்பத்துக்கு காரணம், சபாநாயகர் (இந்த ஜாயின்ட்டில் அப்படியும் ஒருவர் உள்ளார்) தலையிட்டு, அமைச்சர் சுதன்ராஜூக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதுதான் என தற்போது கூறுகிறார்கள்.

குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்ததையடுத்து, 8 அமைச்சர்கள் ஸ்கைப்பை நிறுத்திவிட்டு, வேறு உருப்படியான வேலைகளை பார்க்க சென்றுவிட்டனர்.

ஸ்கைப்புக்கு வந்த 12 அமைச்சர்களில் 8 பேர் log off செய்துவிட்டதை தமது திரையில் கவனித்த மாண்புமிகு பிரதமர், இத்துடன் அமைச்சரவை கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என அறிவித்தார்.

அதையடுத்து, பிரதமரும், மீதி 4 அமைச்சர்களும் கோரஸாக தமிழீழ தேசியகீதம் பாட, அமைச்சரவை கூட்டம் இனிதே முடிந்தது.

அமைச்சரவை கூட்டத்தின் பாதியில், ஸ்கைப்பில் இருந்து வெளிநடப்பு செய்த அமைச்சர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரியவில்லை.

நன்றி விறுவிறுப்பு

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com