Thursday, May 8, 2014

இலங்கையின் அபிவிருத்தியைக் கண்ணூடாகக் காண முடிந்தது! – ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் பாராட்டு

வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய தடை!

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தியைக் கண்ணூடாகக் காண முடிந்ததாகவும அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் முன்னேற்றகரமான அபிவிருத்திப் பணிகளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ் பாராட்டியுள்ளார்.

உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அவர், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

முப்பது வருட பயங்கரவாத யுத்தத்தின் பின் வெற்றிகொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷக்குத் தெளிவுபடுத்தினார். தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வட மாகாணத்தில் அது 22 வீதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்த படியாக துரித முன்னேற்றத்தைக் கண்டுவரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையைக் குறிப்பிட முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு முன்னாள் புலி உறுப்பினர்கள் 12,000 பேருக்கு புனர்வாழ்வளித்து. அவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். சகல சிறுவர் போராளிகளும் பெற்றோர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், நீர்ப்பாசனம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெறுகின்றன. சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாண மாவட்ட மாணவர்களே அதிகளவில் உயர்கல்விக்குத் தெரிவாகியுள்ளனர்.

2005ஆம் ஆண்டு நாட்டில் மூன்று வீதத்தினரே தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர். தற்போது அரசாங்கத்தினால் இதனை 50 வீதமாக அதிகரிக்க முடிந்துள்ளது. வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றப்பட்டு சுபீட்சமிகு சமூகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ¤டன் வந்த தூதுக்குழுவினர் இலங்கையின் சமூக நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக வினவியபோது, கல்வி, சுகாதாரம் வங்கிச் சேவை போன்ற துறைகளில் பெண்களின் பங்களிப்பு 60 வீதத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். அரசியலில் மட்டுமே பெண்களின் பங்களிப்பில் முன்னேற்றத்தை காணமுடியாதுள்ளது என்பதையும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com