நான் பிரசவ வேதனையால் அலறினேன்.. தாதியர்கள் சிரித்துக் கொண்டு பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார்கள்…!
நான் பிரசவ வேதனை தாங்க முடியாமல் அலறினேன். தாதியர்கள் சிரித்துக் கொண்டு பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என, வைத்தியசாலை வேலைநிறுத்தம் காரணமாக உயிரிழந்த குழந்தையின் தாய் குறிப்பிடுகிறார்.
சென்ற 26 ஆம் திகதி குழந்தைப் பேற்றுக்காக ஆனமடுவ வைத்தியசாலைக்கு சென்று அத்தினமே குருணாகலை போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட போது, ஆபத்தான நிலையைச் சந்தித்த சமிலா சாந்தனீ (29) என்ற தாயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடயம் தொடர்பில் அந்தத் தாய் கருத்துரைக்கும்போது -
“வேதனை தாங்க முடியாமல் நான் அங்கிருந்தவர்களிடம் உதவி கோரி சத்தமிட்டேன். அப்போது சிற்றூழியர்கள் (எடெண்டன்) வந்து ஏன் நீ இவ்வாறு கத்துகிறாய்… இந்த இரண்டு பெனடோல்களையும் குடித்துவிட்டுத் தூங்கு.. கத்தாதே.. என்று பயமுறுத்திவிட்டு எனக்கு இரண்டு வில்லைகளைத் தந்துவிட்டுச் சென்றார்கள். நான் அவர்களை வணங்கிச் சொன்னேன். தயவுசெய்து எனது வேதனையைப் புரிந்து கொள்ளுங்கள்.. என்னை விட்டுச் செல்லாதீர்கள்… என்றேன்.
30 ஆம் திகதி அதிகாலை எனக்கு ஏற்பட்ட வலி பற்றி நான் எப்படிச் சொல்வேன்… என்னையும் என் பிள்ளையையும் காப்பாற்றுமாறு பெரும் சத்தத்துடன் கூறினேன். என்றாலும் யாரும் வரவில்லை. அதிகாலை 4.00 மணிக்கு நான் அனுமதிக்கப்பட்டிருந்த கட்டிலிலேயே எனக்கு என் மகன் கிடைத்தான். ஆயினும் எந்தவொரு வைத்தியரோ, தாதியோ, சிற்றூழியர்களோ என்னை நோக்கி வரவில்லை. குழந்தை கிடைத்து 10 நிமிடங்கள் சென்றிருக்கும். அப்போதுதான் ஒரு சிற்றூழியப் பெண் வந்து, ஆ.. குழந்தை ஒன்று கிடைத்திருக்கிறதே என்று கூறி என் குழந்தையை எனக்குக் காட்டிவிட்டு எடுத்துச் சென்றார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர்தான் வைத்தியர் வந்தார். நான் சுகாதாரத் துறையில் பணியாற்றுகின்ற மேலாளர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எனக்கு நடந்த அசௌகரியமான செயல் வேறு எந்தவொரு தாய்க்கும் ஏற்பட வழி செய்யாதீர்கள். கர்ப்பிணி தாய்மாருக்கான பகுதியில் மற்றவர்களின் வலி பற்றித் தெரிந்த, நல்லுள்ளம் படைத்த, மனிதாபிமானம் நிறைந்த தாதிமார்களையும், சிற்றூழியர்களையும் மாத்திரம் பணிக்கு அமர்த்துங்கள்” எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment