Sunday, May 18, 2014

வவுனியா கல்வி நிலையங்களில் போட்டி.. காடையர்கள் கைவரிசை தொடர்கின்றது.

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனமாகிய கேம்பிரிட்ஜ் கல்லூரியில் 17.05.2014 சனிக்கிழமை இரவு இனம் தெரியாத காடையர்கள் சிலர் கல்வியை பாதிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் கேம்பிரிட்ஜ் கல்வி நிலையமானது வவுனியாவில் புதுக்குளம் மற்றும் பண்டாரிகுளம் பகுதிகளில் இரு கிளைகளுடன் இயங்கி வருகின்றது.

இது தொடர்பாக அங்கு கற்கும் மாணவர்களை முதலில் தொடர்பு கொண்டு கேட்ட போது, நாம் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றோம். எமது கல்வியை சீரழிப்பது போன்று இச் செயல் அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன் எமது கல்வி நிலைய மின்சார வயர்கள் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்து கல்விநிலைய நிர்வாகி வ.விஜீதரன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கல்வி நிலையங்களுக்கு எதிரான இச் செயற்பாடுகள் ஆங்காங்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது என்று தெரிவித்தூர். அத்துடன் ஏற்கனவே புதுக்குளம் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் பனர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததாகவும், மேலதிக வகுப்பறைக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த தகரம் மற்றும் ஏனைய பொருட்கள் சேதமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் மூன்று மாதங்களின் பின்பு தற்போது பண்டாரிகுளம் பேம்பிரிட்ஜ் கல்லூரியிலும் இச் செயற்பாடுகள் தொடர்ந்துள்ளமையையிட்டு கவலை தெரிவித்ததோடு, கடந்த 9ம் திகதி கல்லூரியின் மின்சார வயர்கள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. மேலும் தற்போது வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் கரும்பலகைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு நடைபெறுகின்ற கீழ்தரமான செயல்களுக்கு யார் காரணம் என சிலரிடம் வினவிய போது, இனம் தெரியாத நபர்களால் இச் செயல் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.

எதுவாக இருப்பினும் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் கல்விக்கூடத்தை சேதமாக்குவதும், ஆசிரியர்களுக்கு எதிராக செய்படுவதும் சமுதாய வளர்ச்சியை மேலும் சிக்கலுக்குள் தள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தொடர்பாக காவல் துறையினர் சரியான விசாரணையை மேற்கொட்டு நடவடிக்கை எடுகக வேண்டும்.

-வவுனியா நிருபர்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com