மாணவிகளை இராணுவம் துன்புறுத்துகின்றதென 'தமிழ் கார்டியன்' வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது. அதிபர் சத்தியக்கடிதம்!
கிளி/புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகள் இராணுவ சிப்பாய்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக "தமிழ் கார்டியன்" பத்திரிகையில் வெளியான செய்தியினை பாடசாலை அதிபர் மறுத்துள்ளார். இணைய தளத்தில் வெளியான தவறான செய்தி தமது பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், இராணுவத்தினரின் சேவைகளை கலங்கப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு அதிபர், பரந்தனிலுள்ள 662 வது படைத் தளபதிக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை வரைந்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து மேற்படி கருத்தினை முன்வைத்தார்.
பாடசாலை அதிபரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எமது பாடசாலைக்கருகில் எந்தவொரு இராணுவ முகாமும் இல்லை. இராணுவ ரோந்து சேவைகள் மாத்திரமே நடத்தப்படுவதுண்டு. அவ்வாறான ரோந்தின் போதும் இராணுவத்தினர் எமது பிள்ளைகளுக்கு எந்தவொரு கெடுதலையும் செய்த தில்லை. இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் எமது பிள்ளைகள் பங்குபற்றுவார்கள். செய்திகளில் குறிப்பிடுவது போல் எமது பிள்ளைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருப் பின், அவர்களது பெற்றோர் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதித்திருக்க மாட்டார்கள்.
மீள்குடியேற்றத்தினைத் தொடர்ந்து எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான படைத்தளபதி பாடசாலையின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வரும் அதேநேரம், எமது கல்வி நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள், வருடாந்த சுற்றுலா ஆகியவற்றுக்கும் இராணுவத்தினர் உதவி புரிகின்றனர். எனவே, இனிமேலும் 'தமிழ் கார்டியன்' பத்திரிகை எமது பாடசாலை தொடர்பிலான வதந்திகளை பரப்புவதனை நிறுத்த வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தின் பிரதிகள் கிளிநொச்சி கல்வி வலய பணிப்பாளர் மற்றும் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment