அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகரில் அமைந்துள்ள பொது மலசலகூடங்கள் சுமார் 15வருட காலமாக திருத்தபடாமல் உள்ளதால் நோர்வூட் நகருக்கு வரும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பலாங்கொடை நோர்வூட் வழியாக சிவனொலிபாதமலை செல்லும் யாத்திரிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
உடைந்த மலசல கூடத்திற்கு வெளியில் சீறுநீர் கழிப்பதனால் துர்நாற்றம் வீசுவதனால் நோய்கள் பரவகூடிய அபாயமும் காணப்படுகின்றது. எனவே இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நோர்வூட் நகரத்தில் அம்பகமுவ பிரதேச சபை உபகாரியாலயத்திற்கு முன்பு 06.05.2014 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
எனினும் இது தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ்யிடம் கேட்டபோது, கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மூலமாக 66 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28 இலட்சம் நோர்வூட் நகரின் மலசலகூடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் நோர்வூட் நகரிற்கான மலசலகூடத்தின் பணிகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாஓயா பகுதியில் 50 வருட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. அவ்விடத்தில் எதிர்வரும் மாதம் 09.06.2014 அன்று முதல் குப்பைகளை கொட்ட வேண்டாம் என அட்டன் நீதிமன்றத்தின் நீதிபதி அமில ஆரியசேன 05.05.2014 அன்று உத்திரவிட்டுள்ளார்.
அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றமையாலும், துர்நாற்றம் வீசுவதாலும் அவ்விடத்தில் பொது மக்கள் வசிப்பதனால் டெங்கு நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதனாலும் அட்டன் பொலிஸார் மற்றும் பொது மக்களின் வேண்டுகோள் படியே நீதிமான் இவ்வாறு உத்திரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment