பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தை உடனடியாக கட்டுப்படுத்துக -மஹிந்த
பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக கண்டறிந்து, இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையோரை உடன் சட்டத்தின்முன் நிறுத்துமாறு, ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகளை அண்மித்த பிரதேசங்களில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கப்பம் பெறும் செயற்பாடுகள் தொடர்பிலான பல முறைப்பாடுகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறான வர்த்தகங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய, உடனடியாக விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஹெரோயின், பாபுல், மோதம், போதைமருந்து போன்றவைகளுக்கு பாடசாலை மாணவர்களை அடிமைப்படுத்த திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதான நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு, அண்மித்த பிரதேசங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு, இது தொடர்பில் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையோரை உடன் கைது செய்து, பதவி பாராது தண்டனை வழங்குமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டார். போதைப்பொருளுக்கு அடிமைப்படுவதிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது, அனைவரதும் பொறுப்பு என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment