Tuesday, May 6, 2014

பொதுபலசேனா மற்றும் ஜாதிக பலசேனா ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் எச்சரிக்கை!

சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்த கூடிய வகையில் எதுவித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமென பொதுபலசேனா மற்றும் ஜாதிக பலசேனா ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் திலின கமகே கடுமையாக எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி கொம்பனி தெரு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசிய பலசேனா அமைப்பின் செய்தியாளர் மாநாட்டில். அத்துமீறி பிரவேசித்து தேசிய பலசேனா அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய வட்டரக விஜித்த தேரர் உள்ளிட்டோரை அச்சுறுத்தி இழிவுப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொதுபலனசேனாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட எத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட 4 தேரர்கள் மற்றும் இருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது, இரு தரப்பினர்களினதும் வாதங்களை செவி மடுத்த மஜிஸ்திரேட் திலின கமகே பிரதிவாதியான சங்கைக்குரிய கலபொட எத்தே ஞானசாரதேரர் , விதாரந்தெனிய நந்த தேரர், ஆரியவன்ச சம்புத்த தேரர், சந்திரநந்த ஆகிய தேரர்கள் மற்றும் பி.ஜி.குணவர்தன, பி.வேவெல ஆகிய இருவரையும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க தகவல் அளிக்கையில்,

நிபோன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாட்டினை நடத்த ஒழுங்குகள் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கு பிரவேசித்த பொதுபல சேனா அமைப்பின் தேரர் குழப்ப நிலையை தோற்றுவித்தனர். அங்கு இடம்பெற்ற சம்பவங்களை ஊடகங்கள் மூலம் எமக்கு காண முடிந்தது. இது தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்டோம். பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் இந்நாட்டில் அமுலிலுள்ள சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதை காண முடிந்தது.

சட்டவிரோதமாக பிரவேசித்தல், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காமை, பொலிஸாரின் உத்தரவிற்கு கட்டுப்படாமை, உள்ளிட்ட பல குற்றச் செயல்களை இவர்கள் புரிந்துள்ளதாக விசாரணைகள் மூலம் எமக்கு தெரிய வந்தது. சமயங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாயின் உடனடியாக பௌத்த விவகார அமைச்சில் தாபிக்கப்பட்டுள்ள சமய முரண்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடுகளை செய்யவும். நாம் உடனடியாக அது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment