த.தே.கூ திட்டமிட்டு தட்டிக்கழிக்கின்றது!! அரசில் தொடரந்தும் அங்கம் வகிப்பது குறித்து மறு பரிசீலனை செய்வாராம் டக்லஸ்!
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடாக தீர்க்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்து இரு வருடங்கள் கழிந்து விட்டன. இந்த நடைமுறை யதார்த்த வழிமுறையை முயன்றும் கூட பார்க்காமல் த.தே.கூ திட்டமிட்டே தட்டிக்கழித்து வருகிறது எனவும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் மீண்டுமொருமுறை பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அறுபது ஆண்டு காலப் பிரச்சினையை நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் ஆறுமாத கால அவகாசத்தில் தீர்ப்போம் வாருங்கள் என்று கால வரையறையை வழங்கியும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நடைமுறை யதார்த்த வழிமுறையை முயன்றும் கூட பார்க்காமல் திட்டமிட்டே தட்டிக்கழித்து வருகிறது.
அழைத்த போதே அவர்கள் வந்திருந்தால் இதுவரை நாம் தீர்வை எட்டியிருக்கலாம்.ஆனாலும், வழமைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக நீடிக்க வைப்பதற்காக பல்வேறு பொய்யான காரணங்களையே கட்டவிழ்த்து வருகிறது.
அரசியலுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவான மாகாண சபை முறைமையில் இருந்து தொடங்குவதே நடைமுறை யதார்த்தம் என்று நாம் தீர்க்கதரிசனமாக ஆரம்பத்தில் இருந்தே தெரிவிதது வருகின்றபோது மாகாண சபை முறைமை உருப்பட்டு வராத, ஒன்றுக்கும் உதவாத, உழுத்துப்போன, அரை குறை தீர்வு என்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பம் தொட்டே தட்டிக்கழித்தே வந்தனர்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் உட்பட எமக்குக் கிடைத்த பல அரிய வாய்ப்புக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து தட்டிக் கழித்து வருவதையே வழமையாக்கிக் கொண்டுள்ளனர் என்பது வரலாறு எமது தீர்க்கதரிசனங்களை ஏற்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் அன்றே முன் வந்திருந்தால் எமது மக்கள் பாரிய அழிவுகளை சந்தித்த துயரங்கள் இங்கு நடந்திருக்காது.
ஆனாலும், காலங்கடந்தாவது எமது வழிமுறையை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமையை ஆதரித்து அதற்கான தேர்தலிலும் போட்டியிட்டு இன்று அதன் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளார்கள்.
இவ்வாறு எமது வழிமுறைக்கு அவர்கள் வந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மையாக இருக்குமென்றால்,இன்று நாம் கூறும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் இறுதித்தீர்வை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் மறுக்க வேண்டும்?...
வட மாகாண சபை அதிகாரத்தை தம் வசப்படுத்திய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர், அதன் பயன்களை எமது மக்கள் அனுபவிப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாக பொய்யான காரணங்களைச் சொல்லி தட்டிக்கழித்து வந்த அவர்கள், தாம் கூறிவந்த போலியான எந்தக் காரணங்களுக்கான மாற்றங்களும் நடந்திராத போதும், இன்று யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் காலம் கடந்தாவது கலந்து கொள்ள முன் வந்திருக்கிறார்கள்.
எமது யதார்த்த வழிமுறையை ஏற்று யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள முன் வந்திருப்பது தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்தது என்பதில் உண்மை இருக்குமாயின், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் பின்னிற்க வேண்டும்?
மகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லை என்று போலிப் பரப்புரை செய்து வரும் அவர்கள், மாகாண சபை அதிகாரங்களை மத்திய அரசு பிடுங்க நினைக்கிறது என்று இன்னொரு பொய்யை சொல்வதன் மூலம் மாகாண சபைக்கு அதிகாரங்கள் உண்டு என்பதையே அவர்கள் தம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்கிறார்கள்.
எனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும். அரசியலுரிமை, அபிவிருத்த மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை மத்திய அரசில் இருந்து எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கவே நான் அரசில் அங்கம் வகித்து வருகின்றேன்.
பலரது தூற்றுதல்களுக்கு மத்தியிலும் நான் தொடர்ந்தும் அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருவது எமது மக்களுக்காகவே. எனது சாணக்கிய தந்திர மதிநுட்ப வழிமுறை மூலம் எமது மக்களுக்காக பலதையும் நான் ஆற்றி வருகின்றேன். எமது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உள்நாட்டில் அனைத்து தமிழ்க் கட்சி தலைமைகளும் இணைந்து யதார்த்த வழிமுறையில் நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்கு காட்டாத வரை சர்வதேச அழுத்தங்கள் எமது மக்களுக்கு ஒரு போதும் எந்தத் தீர்வையும் பெற்றுத்தராது. எமது நடைமுறை யதார்த்த வழிமுறையை ஏற்று தமிழத் தேசியக் கூட்மைப்பு வந்திருப்பது உண்மை என்றால்,..
நடைமுறைக்கு சாத்தியப்படாத வெற்று வீர கோசங்களை கைவிட்டு நாம் கூறி வந்த மாகாண சபை முறைமையில் இருந்து தொடங்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்று வந்திருப்பதும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வழிமுறையை பின்பற்றி கலந்து கொள்ள முன்வந்திருப்பதும் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மை என்றால்,.. நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவும் எமது மக்களுக்கான இறுதித் தீர்வை நோக்கிச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என நான் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளத் தவறினால் அரசில் தொடரந்தும் அங்கம் வகிப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment