Tuesday, May 13, 2014

வல்வெட்டித்துறை நகரசபையின் பதவிக்கான போராட்டத்தை முடிவுறுத்தல்....! -விளக்கமளிக்கின்றார் வல்வெட்டித்துறை நகரபிதா.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான திரு.சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், உபதலைவர் திரு.கந்தசாமி சதீஸ், மற்றும் திரு. கோ.கருணானந்தராசா, திரு.க.ஜெயராசா,திரு.ச.பிரதீபன் ஆகியோர் வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தில் இடம்பெற்ற சிற்றூழியர் நியமனத்தில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டு இது தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்கவேண்டும் என்று 18.04.2014 அன்று எனக்கும் செயலாளருக்கும் கடிதம் எழுதியதுடன், கௌரவஆளுநர் உட்பட பலருக்குப் பிரதிகளை அனுப்பியும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்கியும் எனக்கும் நகரசபை நிர்வாகத்திற்கும் எமது புனிதம் நிறைந்த வல்வெட்டித்துறை மண்ணுக்கும், மக்களுக்கும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.

இவ்வாறான அடாவடித்தனங்களையும், வன்முறைகளையும், அவதூறுகளையும் இவர்கள் மேற்கொள்வது இதுதான் முதல் தடைவ அல்ல என்பதை மக்களும், ஊடகங்களும் நன்குபுரிந்துகொண்டிருக்கும் நிலையில் 2011 ஆம் ஆண்டு யூலைமாதம் 27 ம் திகதி நகரசபை பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே, தனக்கும், திரு.க.சிவாஜிலிங்கத்திற்கும் தவிசாளர் பதவியை சுழற்சி முறையில் வழங்க திரு.மாவை.சோ.சேனாதிராஜா முன்வராவிட்டால் நகரசபையை முடக்கப் போவதாக கடிதம் எழுதியதன் தொடர்ச்சியாக சபை நடவடிக்கைகளை 2011 ஆம் ஆண்டில் இருந்தே குழப்புவதில் ஈடுபட்டுவந்ததுடன், வல்வெட்டித்துறையின் அபிவிருத்திகளுக்கும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்திவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2012 இல் எவ்வித காரணமும் இன்றி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்ததும், 2012, 2013 ஆம் ஆண்டு மக்களின் நலன்பேணும் வகையிலான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்காது இருந்ததுடன், வரவு செலவுத் திட்ட ஆலோசனைக் கூட்டங்களிலும் பகிஸ்கரித்து எவ்வித ஆலோசனைகளையும் வழங்காது, அதனைப் பார்வையிடாமலேயே தோற்கடித்திருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களின் பிரதிநிதிகள், வவுனியாவில் திரு.மாவை.சோ.சேனாதிராஜா அவர்களைச் சந்தித்தபொழுது, அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இவர்களின் நடத்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததால் 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் , இரண்டாவது வாசிப்பின் போது பொது மக்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர்கள் எதிர்பார்த்தபடி என்னைப் பதவியில் இருந்தும் நீக்கி தமது இலக்கை அடைய முடியாது போயுள்ளனர்.

இவ்வாறு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், எனது நிர்வாகம் நடைபெறுவதைப் பொறுக்கமுடியாத இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்ற பொறுப்புவாய்ந்த பதவியில் இருந்து இளைஞர்களைச் சரியான பாதையில் வழி நட்ததிச் செல்லவேண்டிய திரு.சூ.சே.குலநாயகம் அவர்கள் 'வரவுசெலவுத் திட்டத்தைச் செயற்படுத்த முடியாதவாறு தடை உத்தரவு விதிக்கவேண்டும்' என்றும் கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அதனூடாகவாவது என்னை வெளியேற்றி ஏற்கனவே திட்டமிட்டபடி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கு முயற்சி எடுத்தும், தோல்வியடைந்தநிலையில் மேலும் வழங்கப்படாத ஒரு சிற்றூழியர் நியமனத்தில் இலஞ்சம் பெறப்பட்டதாக ஒருபுதுக்கதையை அவிழ்த்துவிட்டு நகரசபைக்கு எதிராக அவதூறையும் ஏற்படுத்த முனைந்துள்ளனர். ஆனால் மகக்ள அவர்களது நடவடிக்கையை கோமாளிகளின் கூத்தாகவே பார்த்தார்கள் என்பதை ஊடகங்களும் அறிந்து கொண்டதால், அவர்களது இந்த நடவடிக்கையை பெரிது படுத்தவில்லை.

திரு.சூ.சே.குலநாயகம், உபதலைவர் சதீஸ், க.ஜெயராசா, கோ.கருணானந்தராசா, ச.பிரதீபன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி சிற்றூழியர் நியமனத்தில் எவ்விதமோசடியும் இடம்பெறவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தே, எனக்குத் தொடர்ச்சியாக வன்முறைகளைப் பிரயோகிக்கும் இன்னுமொரு தளமாக இதனையும் ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்தும் அதிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

சிற்றூழியர் நியமனம் மட்டுமல்ல வீதி அபிவிருத்திகள், சந்தைக் கட்டடங்கள், சாராயத் தவறணையை அப்புறப்படுத்தியமை, சந்தைக் குத்தகைகள் போன்ற மக்கள் நலன்பேணும் செயற்பாடுகளில் மோசடிகள் இடம்பெறுவதற்கு நானோ அல்லது எமது செயலாளரோ எந்தவகையிலும் இடம் கொடுத்ததுமில்லை, இனிமேலும் கொடுக்கப் போவதுமில்லை என்பதை என்மீது நம்பிக்கைவைத்துள்ள பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட சில உறுப்பினர்கள் எதிர்பார்த்ததுபோல், நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அவர்களது ஆட்களுக்குச் சலுகை செய்ய மறுத்ததால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர் என்பதை அனைவரும் அறிவர்.

ஆயினும் இதே சபையில் பலஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற காவலாளி நியமனம் மற்றும் சுகாதாரத் தொழிலாளிகள் நியமனத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக எமது நகர மக்கள் மூலம் அறியவருவதைக் கொண்டு, அவர்களைப் போன்று பின்னர் வரும் தவிசாளர்களும் இத்தகைய மோசடிகளைச் செய்வார்கள் என்ற ஒருகற்பனையில் தப்பான கருத்துக்களைக் கட்டவிழ்த்துவிட்டு , கௌரவமாக வாழ்கின்ற ஒருவரை அவதூறு செய்வதென்பது மன்னிக்க முடியாதகுற்றம். அவர்கள் கடிதத்தில் கோரியபடி 2011 ஆம் ஆண்டில் இருந்தே வேட்பாளர் தெரிவில் இடம் பெற்ற மோசடி மற்றும் தமக்குச் சுழற்சி முறையில் தலைவர் பதவியை வழங்காவிட்டால் வல்வெட்டித்துறை நகர சபையை முடக்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும், மீன்சந்தைக்குத்தகைகள், மாட்டிறைச்சிக் கடை குத்தகை பரிமாற்றத்தில் இடம்பெற்ற மோசடிகள், தொண்டைமானாறு துவிச்சக்கரவண்டிப்பாதுகாப்பு நிலையம், மயிலியதனை மயானத்திற்கு புலம் பெயர்ந்தவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பண மோசடிகள், போன்றவற்றில் சில உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடங்கி, சிற்றூழியர் நியமனத்தில் மோசடிகள் இடம் பெற்றதாகக் குறிப்பிட்ட விடயம் வரை ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட விடயங்களில் எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு அதி உச்ச தண்டனைகள் வழங்கும் அதே வேளை திரு.சூ.சே.குலநாயகம் மற்றும் உப தலைவர் க.சதீஸ், க.ஜெயராஜா, கோ.கருணானந்தராசா, ச.பிரதீபன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுககள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர்களுக்கும் எதிராக அதி உச்ச தண்டனை வழங்கவும் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டும் என்று உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஊடாக உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அவரூடாக கௌரவ ஆளுநருக்கும் நானும் கடிதம் எழுதியுள்ள நிலையில் பொதுமக்களும்,ஊடகங்களும் உண்மை நிலையை அறிந்து கொள்வதுடன், மேற்படி சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் ஊடகங்களினூடாக எனது விளக்கத்தை அளிக்கின்றேன்.

1. திரு.சூ.சே.குலநாயகமும், அவரால் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறப்படாது, வேட்பாளர் பட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட ஏனைய நான்கு உறுப்பினர்களும் கடிதம் எழுதியதுபோல் கடைசியாக நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு அமைய இதுவரை சிற்றூழியர் நியமனம் எவருக்கும் வழங்கப்படவில்லை.

2. சிற்றூழியர் நியமனம் தொடர்பாக உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் கௌரவஆளுநர் ஆகியோரின் அனுமதியின் பேரில் எமது செயலாளரினால் பத்திரிகை ஊடாக விளம்பரம் கோரப்பட்டது.

3. மேற்படி விளம்பரத்திற்குஅமைய கிடைத்த விண்ணப்பங்களைத் தொகுத்து செயலாளரினால் உள்ளுராட்சி உதவிஆணையாளரூடாக, உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அவருக்கு ஊடாக, கௌரவஆளுநருக்கு அந்தப் பட்டியல் அனுப்பப்பட்டது.

4. அப்பட்டியல் அவர்களால் பரிசீலிக்கப்பட்டபின்னர் நேர்முகப்பரீட்சை நடாத்துவதற்கான அதிகாரிகளின் குழுவையும் தெரிவுசெய்து அனுமதித்து அனுப்பியிருந்தனர். தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்; குழுவில் நானோ அல்லது செயலாளரோ இருக்கவில்லை.

5. பொருத்தமான ஊழியர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்ற அன்று அவர்கள் இருந்த மண்டபத்திற்குள் நானோஅ ல்லது செயலாளரோ செல்லவில்லை. ஆனால் அதே நேரத்தில் அக்குழுவின் தலைவராக இருந்த ஒரு அதிகாரியிடம் 'நேர்முகப்பரீட்சை சரியான முறையிலும், நேர்மையாகவும் நடாத்தப்படவேண்டும். அதேவேளை எனதோ அல்லது சபை உறுப்பினர்கள் எவரினதுமோ தலையீடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும், அதேவேளை வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குள் இருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமைகொடுங்கள். இதனூடாக எந்த ஒருதகுதி வாய்ந்த விண்ணப்பதாரியும் பாதிக்கப்படக்கூடாது' என்ற எனது வேண்டுகோளைக் குறிப்பிட்டு நேர்முகப்பரீட்சை தனிமையான ஒருமண்டபத்தில் எவ்வித தலையீடுகளும் இன்றி இடம்பெற வசதிகளைச் செய்துகொடுத்தோம். இது தொடர்பாக சிற்றுழியர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக ஒரு போலிக் குற்றச்சாட்டினை முன்வைத்து திரு.சூ.சே.குலநாயகம், மற்றும் உபதலைவர் க.சதீஸ் ஆகியோர் பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் செய்திகளை வெளியிட்டபொழுது, அதனைப் பார்வையிட்டு மிகவும் மனவேதனை அடைந்த நேர்முகப்பரீட்சைக் குழுவின் உறுப்பினர் என்னிடம் தனதுகவலையை பின்வருமாறுதெரிவித்தார்.

'நாங்கள் பல உள்ளுராட்சிசபைகளுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தவதற்காகச் சென்றிருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஒருவர்தான் இதில் எவ்வகையிலும் தலையிடாது இருந்ததுடன் தெரிவுகள் நேர்மையாக இடம் பெறவேண்டுமென்பதில் அக்கறையாகச் செயற்பட்ட ஒரேஒருதவிசாளர்''என்றுகுறிப்பிட்டது எங்களுடைய இதயசுத்தியையும், நம்பகத் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.

6. நேர்முகப்பரீட்சையின் பொழுது, சேவைபிரமாணங்களின் அடிப்படையில் எல்லாமே நடைபெற்றதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. புள்ளிகள் இடப்பட்டுமிகவும் சரியாகவும், நேர்மையாகவும் நம்பகத்தன்மையாகவும்,வெளிப்படைத் தன்மையாகவுமே தெரிவுகள் இடம்பெற்றன. அந்த நேர்முகப்பரீட்சையின் படி தெரிவு செய்யப்பட்ட உறுதிப்படுத்தப்படாத ஆரம்பப் பெயர்ப்பட்டியல் செயலாளரிடம் வழங்கப்பட்டபோதும்,அதன் உறுதிப்படுத்தப்பட்ட இறுதித் தெரிவுப் பட்டியல் இதுவரைஎமக்குஅனுப்பிவைக்கப்படாதநிலையில் எவ்வாறு அந்தநியமனங்கள் செயலாளரால் வழங்கப்பட்டிருக்க முடியும்?

7. எமதுசபையின் செயலாளர் மிகவும் கவனமாகவும்,நேர்மையாகவும், நியமன ஒழுங்குமுறைக்கு அமைவாகவும் செயற்பட்டுள்ளார் என்பதை உள்ளுராட்சித் திணைக்களத்தின் அதிகாரிகள் அனைவரும் உணர்ந்துஅவரைப் பாராட்டியதையும் நான் குறிப்பிடவேண்டும்.

8. உபதலைவர் க.சதீஸ் நியமனம் மற்றும் நேர்முகப்பரீட்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சுமார் 3மணிநேரம் வரை எமதுஅலுவலகத்தில் இருந்து அக்குவேறு, ஆணிவேராகப் பரிசீலித்துஅதில் எவ்விததவறுகளையும் கண்டுபிடிக்க முடியாதநிலையில், சிறிது தடுமாறியிருந்ததை அந்நேரம் அவதானித்தேன். அவர் சிறிது குழம்மிய நிலையில் யாரோ ஒரு விண்ணப்பதாரியுடன் தொலைபேசி உரையாடலையும் மேற்கொண்டதையும் நான் அவதானித்தேன்.

9. ஆயினும் அவர்கள் கேட்டுக்கொண்டபடி 05.05.2014 அன்றுவிசேட கூட்டத்தைக் கூட்டி அவர்கள் விருப்பப்படி விசாரணைக்குழுவை அமைப்பதற்கும் நான் சம்மதித்த பின்னர் திடீரென சூ.சே.குலநாயகமும், கோ.கருணானந்தராசாவும் எனக்கு எதிராகநம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாக கூறியபொழுது, 'தலைவருக்கு எதிராகநம்பிக்கையில்லாப் பிரேரணைகொண்டு வருவதற்குச் சட்ட ஏற்பாடுகள் இல்லை. ஆயினும் கௌரவ ஆளுநரின் விசாரணை முடிவில் இதற்கான தண்டனைகளை நானும் செயலாளரும் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பதால், அந்த விசாரணை முடியும் வரை இது தொடர்பாக எதுவும் செய்யமுடியாது' என்று தெரிவித்து, சபை அமர்வினை முடித்துக் கொண்டேன்.

அதன்பின் ஏற்கனவே பதவியைக் கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்ட திரு.சூ.சே.குலநாயகமும், உபதலைவர் க.சதீசும் ஏனைய இருவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர அனுமதிக்கப்படும்வரை தாம் மாநாட்டு மண்டபத்தை விட்டுவெளியேறப் போவதில்லை எனக்கூறி இரவு வரையும் மறுநாளும் சத்தியாக்கிரகம் இருந்தனர். ஒரு அரசாங்கக் கட்டடத்தில் அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அந்த மண்டபத்தைப் பூட்டமுடியாதவாறு தமது அரசியல் செல்வாக்கின் காரணமாக வெளியேற மறுத்தமையானது ஒரு சட்டமீறல் எனக் குறிப்பிட்டு, அவர்கள் வேண்டுமானால், அலுவலகத்திற்கு வெளியே நின்று பொது மக்கள் முன்னிலையில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்வதற்குத் தடையில்லை எனக்குறிப்பிட்டு இந்த நான்கு உறுப்பினர்களையும் வெளியேற்றி அரச அலுவலகத்திற்குக் குந்தகம் ஏற்படுத்த இடமளிக்கவேண்டாம் என வல்வெட்டித்துறை காவல் துறையில் முறைப்பாடு செய்திருந்தேன். அதற்கு அமைய மறுநாள் 6.00 மணிக்கு முன்னர் அலுவலகக் கட்டடத்தில் இருந்து வெளியேறாவிட்டால் நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் கையளிக்கப் போவதாக பொலிஸ் அதிகாரியினால் எச்சரிக்கை செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் தமிழரசுக் கட்சியின் துணைச்செயலாளருக்குத் தகவல் அனுப்பி அவரது உதவியுடன் அலுவலக மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

பதவிமோகத்தால் சீரழியும் வல்வெட்டித்துறை நகரசபையில் தற்போது அங்கம் வகிக்கும் சூ.சே.குலநாயகம்,க.சதீஸ்,கோ.கருணானந்தராசா,க.ஜெயராசா,ச.பிரதீபன் ஆகியோர் இன்னும் எஞ்சியுள்ள 14 மாதங்களுக்காவதுபொறுப்புடனும்,கௌரவமாகவும்,நடந்துகொண்டுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவாவது ஒன்றுபட்டு உழைக்க முன்வரவேண்டும். அதைவிடுத்து 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரைதொடர்ச்சியாக எனக்கும் வல்வெட்டித்துறை நகரசபைக்கும் எதிராகக் கட்டவிழ்த்துவிடும் வன்முறைகளையும், அடாவடித்தனங்களையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் நேர்மையாக நடக்கத் தெரியாதவர்கள் என்னை வெளியேற்றி தாம் அந்தப்பதவியைக் கைப்பற்ற முனையும் எந்த வன்முறைக்கும் நான் இடமளிக்கப் போவதில்லை என்பதை உணராவிட்டால்,இனிமேலும் எந்த முறையில் அவர்களுக்கு உணர்த்தவேண்டும்; என்பதை பொது மக்கள் தான் எனக்கு உணர்த்தவேண்டும்.

இதயசுத்தியுடன் நேர்மையாகவும்,பண்பாகவும் எவரொருவர் மக்களுக்காக சேவையாற்ற முன் வருகின்றாரோ அவர் என்றும் மக்களால் மதிக்கப்படுவர் என்பதை உணர்ந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், எதிர்காலத்திலாவது மக்கள் நலன்கருதி அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைப்பை நல்கவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன். அவர்களால், கடந்த மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரிகமானதும், மனிதநேயமற்றதுமான செயல்களை எமது உறவுகள் நன்கு புரிந்து கொண்டுள்ளதுடன், எமது மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாகவும் உள்ளனர் என்பதைக் கூறி வைக்கவிரும்புகி;னறேன்.இந்த யதார்த்தத்தை இன்னும் உணராவிட்டால் தந்தை செல்வா குறிப்பிட்டதுபோல் 'உங்களையும் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்'.

நடராஜா அனந்தராஜ்,
நகரபிதா,
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com