Saturday, May 17, 2014

மாணவர்களை வதைக்குள்ளாக்கும் ஆசிரியர்களைத் தண்டிப்பதற்கான சுற்றுநிரூபம் தயாராகின்றது!

மாணவர்களால் ஏற்படும் தவறுகளுக்கு ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது பற்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துரைக்கும்போது, ஆசிரியர்களின் அசமந்த போக்கினால் இவ்வாண்டுக்குள் மாத்திரம் இரு மாணவ உயிர்கள் பலியாகியுள்ளன எனவும் பெருந்தொகை மாணவ மாணவியர்கள் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு மாணவர்களைத் தண்டிக்கும்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றிய விடயங்கள் அடங்கிய சுற்று நிரூபம் அனுப்பிவைக்கப்பட்ட போதும், அவர்களுக்கு அதுபற்றி தெளிவுறுத்தப்படவில்லை எனத் தெளிவுறுத்துகின்ற அவர், குறித்த சுற்றுநிரூபத்தின்படி மாணவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது எனவும், அவ்வாறு கண்மூடித்தனமாகத் தண்டித்தால் தண்டனைக்கு உள்ளாகுவர் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களால் ஏற்படும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கும்போது, மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் என்ன என்பது பற்றி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படாமையினாலேயே அவர்கள், மாணவர்களின் முடிகளை வெட்டுகிறார்கள்… சப்பாத்துக்களை கழுத்தில் தொங்கவிடுகின்றார்கள்… முதலிய தாங்கவியலாத உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் செயல்களைச் செய்கின்றார்கள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com