இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்குவோம்! - புதிய தூதுவர்கள் உறுதி! -(படங்கள்)
இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்குவதாக, புதிய தூதுவர்கள், உறுதியளித்துள்ளனர். நாடெங்கும் சென்று மக்களை சந்தித்து, இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பில் தமது நாடுகளுக்கு தெரிவிக்குமாறு ஜனாதிபதி, புதிய தூதுவர்களை கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கு புதிதாக 6 வெளிநாட்டு தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். குதிரைப் படை வீரர்களினால், இவர்கள், ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உயரிய கௌரவம் வழங்கப்பட்ட இராஜதந்திரிகள், ஜனாதிபதியிடம், தமது நியமனங்களை கையளித்தனர்.
கொங்கோ தூதுவர் பீலிக்ஸ் என்கோமா முதலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார். இலங்கைக்கான ஆர்ஜன்டினா புதிய தூதுவர் ராகுல் இக்னீசியோ குவஸ்டாவினோ, தமது நியமனக்கடிதத்தை அதனை தொடர்ந்து கையளித்தார். கொரிய குடியரசின் தூதுவர் வெங் சோன் சேம், ஜனாதிபதியிடம், நியமனக் கடிதத்தை கையளித்தார். இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவராக நியமனம் பெற்றுள்ள விசன்டே விசென்சியோ அதனையடுத்து ஜனாதிபதியிடம் நியமனக்கடிதத்தை கையளித்தார். சுஹைர் ஹம்தல்லா ஸாயிட், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவராக ஜனாதிபதியிடம் நியமனக்கடிதத்தை கையளித்தார்.
இலங்கைக்கான எல்சல்வடோர் புதிய தூதுவராக கிளர்மோ ருபியோ பியூன்ஸ், ஜனாதிபதியிடம் நியமனக்கடிதத்தை கையளித்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி தூதுவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த முடியுமான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, தூதுவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் உறுதியளித்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படுமென, கொங்கோ புதிய தூதுவர் என்கோமா தெரிவித்தார். தமது பதவிக்காலத்திற்குள் விசேடமாக வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பினை விருத்தி செய்ய, நடவடிக்கை எடுப்பதாக, ஆர்ஜன்டினா புதிய தூதுவர் குவஸ்டா வினோ தெரிவித்தார். இலங்கைக்கான கொரிய தூதுவர் சொன் சேம்ஸ், இரு தரப்பு உறவுகளை விருத்தி செய்வதற்காக, மூன்று இலக்குகளை மையமாகக் கொண்டு செயற்படப்போவதாக, உறுதியளித்தார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை போன்று, வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு உட்பட தொடர்புகளை புதிய துறைகளுடாக விரிவுபடுத்துவது, தமது இலக்கு என, அவர் கூறினார். மோதல்களை தொடர்ந்து இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், புதிய தூதுவர்களுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
இலங்கையில் உள்ள சகல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து, உண்மையான நிலைறை அறிந்து, முழு உலகிற்கும் தெளிவுபடுத்துமாறு, ஜனாதிபதி, புதிய தூதுவர்களை கேட்டுக்கொண்டார். பிரதியமைச்சர் நியோமால பெரேரா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெனுகா செனவிரட்ன உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment