பிரிட்டிஷ் இராணுவத்தினர் மீது மீண்டும் போர்க்குற்ற விசாரணை!!
பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஈராக்கில் செய்த சித்ரவதைகள் பற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீண்டும் விசாரணைகளைத் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சில அரசியல் தலைவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
2006ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்தப் போர்குற்ற விசாரணையை மீண்டும் துவங்கப்போவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் படூ பென்சவுடா நேற்று இதனை அறிவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பிரிட்டீஷ் ராணுவம் ஈராக் கைதிகளை கடுமையாக சித்ரவதை செய்துள்ளதான இந்த விவகாரம் தற்போது மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பிரிட்டீஷ் ராணுவத்தினரின் சித்ரவதைக்கு ஆளான சுமார் 412 கைதிகளுக்கு ஆதரவாக பொதுநல வழக்கறிஞர்கள் நிறுவனம் இந்த விசாரணையைக் கோரியுள்ளது. கைதிகளை கடுமையான உடல் மன சித்ரவதைகளுக்கு பிரிட்டீஷ் ராணுவம் ஆளாக்கியதாக அந்த நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
கைதிகளை தூங்க விடாமல் செய்வது, உணர்ச்சிகளை மழுங்கடிக்கும் சித்ரவதைகள், கொன்று விடுவதான அச்சுறுத்தல், கற்பழிப்பு செய்துவிடுவதான அச்சுறுத்தல் என்று பல்வேறு விதங்களில் பிரிட்டீஷ் ராணுவம் அங்கு தன் கைவரிசையைக் காட்டியுள்ளதாக தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிட்டிஷ் அரசு மறுத்துள்ளது. தலைமை வழக்கறிஞரான டொமினிக் கிரீவ் இது பற்றி கூறுகையில், இந்த குற்றச்சாட்டுகளை முழுதும் நிராகரிப்பதாகவும், பிரிட்டீஷ் நீதித் துறை இதனை தக்கவிதத்தில் எதிர்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment