அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பெண் பட்டதாரிகளின் நியமனம் தற்காலிகமாக ரத்து!
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பயிலுநர் பட்டதாரிகளுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் பணிபுரிந்த பயிலுநர் பட்டதாரிகள் மிகத் தூர மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் சம்பந்தமாக தூர இடங்களில் நியமிக்கப்பட்ட பயிலுநர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவை சந்தித்து தாங்கள் தூர இடங்களுக்கு நியமிக்கப்பட்டதனால் எதிர்கொள்ளும் இன்னல்களையும் நியாயமான பிரச்சினைகளையும் எடுத்துக்கூறினர்.
அதற்கமைய நேற்றைய தினம் (30) அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவை அவரது அமைச்சில் சந்தித்து அம்பாறை மாவட்டத்திலிருந்து தூர இடங்களுக்கு நியமிக்கப்பட்ட பயிலுநர்களின் வேண்டுகோளை விளக்கிக் கூறினார்.
அதற்கமைய அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட பெண் பட்டதாரிகளின் நியமனத்தை நிரந்தரத் தீர்வு எட்டப்படும்வரை தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்கு ரத்துச் செய்வதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லாவிடம் உறுதியளித்தார். மேலும் இத்தீர்மானம் சம்பந்தமாக அம்பாறை மாவட்ட அரச அதிபர் நீல் டி அல்விஸ்க்கு இதனைச் செயற்படுத்துவதற்காக பணிப்புரையும் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment