Monday, May 19, 2014

நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியையே அனுஷ்டிக்கின்றோம்!

நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார்.

ஆனால் புலிகளால் கொல்லப்பட்ட மக்களின் அடகஸ்தலங்களையோ, அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ரவிராஜ், கதிர்காமர் போன்றவர்களையோ கௌரவிக்க எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினையின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய சிறந்த இடமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைப்பது சகல கட்சிகளின் பொறுப்பு என்று குறிப்பிட்ட ஜனாதிபதி டயஸ்போராக்களுடன் இணைந்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்க வைக்க முயல்வது நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதியாகும் என்றும் கூறினார்.

5ஆவது வருட வெற்றிவிழா நேற்று மாத்தறை கடற்கரை வீதியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி நேற்றுப் போல இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் சகல சவால்களுக்கும் தைரியமாக முகம்கொடுத்து அவற்றை வெற்றி கொள்வதாகவும் தெரிவித்தார்.

வெற்றி விழா நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமிழிலும் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர். 2009 ஆம் ஆண்டில் இன்று போன்ற ஒரு தினத்திலே இந்த நாடு ஐக்கியப்படுத்தப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற நாளிலே நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தாய்நாட்டுடன் இணைக்கப்பட்டது. சமாதானம், ஸ்தீரத்தன்மை, உண்மையான ஜனநாயகம் என்பன நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்காக அர்ப்பணிப்பு மேற்கொண்ட படையினர் இன்று அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, பொதுமக்கள் ஆகியோர் பங்களிப்பதோடு பௌத்த பிக்குமார். கத்தோலிக்க, முஸ்லிம். இந்து மதத்தலைவர்கள் என சகல தரப்பினரதும் ஆசீர்வாதமும் கிடைத்தது. மத ஸ்தலங்களில் வழிபாடுகளும் நடத்தி தமது பங்களிப்பை வழங்கினர். பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.

எந்த சக்திகளுக்கும் தலைசாய்க்காது முப்படைகளின் தளபதியாகவும் காப்பாளராகவும் இருந்து இறுதி வரை உரிய தலைமைத்துவத்தை வழங்கி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினேன். ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல் என சகல தேர்தல்களிலும் மக்கள் ஆணை வழங்கினர். மீண்டும் மீண்டும் மக்கள் தந்த ஆணைப்படி அவர்களின் நம்பிக்கையை நிறைவு செய்து வருகின்றேன். நாட்டுப் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றுக்கு உகந்த தீர்வு வழங்கப்படும்.

பயங்கரவாதம் நிறைவு செய்யப்படும் வரை காத்திருக்காமல் அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. நாடு பூராவும் நெடுஞ்சாலைகள். காபட் வீதிகள், ஆஸ்பத்திரிகள், புதிய பாடசாலைகள், நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு புதிதாக நகரங்கள் அமைக்கப்பட்டும் வருகின்றன. நாடு மீட்டெடுக்கப்பட்ட நிலையில் இவை யாவும் உங்களுக்குரியவையாகும். தேசம் முகம் கொடுத்த முக்கிமான பிரச்சினைக்கே நாம் தீர்வு கண்டோம். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், சுதந்திரத்தை உறுதி செய்யவும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையை இலகுவாக மதிக்க முடியாது. முதற் தடவையாக பல வருடங்களின் பின்னர் வட பகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன,

ஊடகங்களுக்கு எந்தவித தணிக்கையும் செய்யப்படவில்லை. யுத்த களத்திற்கு செல்ல ஊடகங்களுக்கு இடமளித்தோம். ஊடக சுதந்திரம் விஸ்தரிக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் கூட நேரடியாக காண்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயகம் குறித்து பேசுபவர்கள் நாடு முன்பிருந்த நிலையைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டு மக்களுக்கு இலங்கை குறித்து நம்பிக்கை ஏற்பட்டுன்னது. முன்பு 4 இலட்சம் சுற்றுலா பயணிகளே இங்கு வந்தனர் இன்று 14 இலட்சம் பேர் வருகின்றனர்.

இலங்கையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதானால் பயங்கரவாதிகளே அது குறித்து முடிவு செய்தனர். ஆனால் தற்பொழுது பொதுநலவாய மாநாட்டை நாம் இங்கு நடத்தியதோடு உலக இளைஞர் மாநாட்டையும் நடத்தியுள்ளோம். சர்வதேச மாநாடுகள் நடத்தும் கேந்திர நிலையமாக இலங்கை மாறியுள்ளது. தேசிய கொடியை மேலே உயர்த்தியது போன்று நாடும் மேலே உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

எமக்கு மறைப்பதற்கு எதுவும் கிடையாது. உலகத்திற்கு சகல கதவுகளும் திறந்தே உள்ளன. சிங்களம், தமிழ், முஸ்லிம் என பல ஆயிரம் மக்களை கொலை செய்து தமிழ் மக்களை பணயக் கைதிகளாக பிடித்த பிரபாகரனுக்கு மலர் வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர். ஆனால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள. தமிழ். முஸ்லிம் மக்களின் அடக்கஸ்தலங்களை கௌரவப்படுத்த எவரும் இல்லை. உயிர் தியாகம் செய்தவர்களையே சமாதானத்தை விரும்புவோர் கௌரவிக்க வேண்டும். பயங்கரவாதிகள் குழுவொன்று நைஜீரியாவில் மாணவர்களை கடத்திய சம்பவம் உலக ஊடகங்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றது. ஆனால் 30 வருட யுத்தத்தின் போது பல ஆயிரம் சிறுவர்களை புலிகள் படையில் இணைத்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 600க்கும் அதிகமான சிறுவர்கள் சரணடைந்ததோடு அவர்கள் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்ல வசதி அளிக்கப்பட்டது. இது குறித்து சில நாடுகள் ஊமையாக, குருடாக, செவிடாக உள்ளன. நாம் இதனைக் கொண்டாடுவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

நாம் யுத்தத்தின் வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. 'இது யுத்த வெற்றியல்ல சமாதானத்தின் வெற்றியே இது பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாம் வெளிநாடுகளில் இருந்து படையினரை கொண்டுவரவில்லை. பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மக்களை எமது படையினரே மீட்டனர். மனிதாபிமான முக்கியத்துவம் அறிந்த மக்கள் என்ற வகையில் இந்த வெற்றியை கொண்டாடுவது எமது பொறுப்பாகும். யார் எதிர்த்தாலும் யார் பங்குபற்றாவிட்டாலும் நாட்டுக்குரிய இந்த நாள் என்றென்றும் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.. நாம் வாழும் இந்தக் காலத்தில் சயனைட் வில்லைகள் இல்லை. 30 வருட பயங்கரவாதம் காரணமாக இந்த நாட்டில் அனைவரும் வேதனைப்பட்டனர். முக்கியமாக எமது தமிழ் சகோதர மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், வேதனைகள், சோதனைகள் சொல்ல முடியாது.

பயங்கரவாதத்தை மீள தலை தூக்கவைக்கும் முயற்சிக்கு சிங்கள, தமிழ, முஸ்லிம் மக்களின் பாதுகாவலன் என்ற வகையில் நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். பயங்கரவாதத்தினால் நாசமடைந்த சகல பகுதிகளையும் முன்னேற்றி வருகின்றோம். தற்பொழுது எங்கும் சென்று வரலாம். அதுதான் சரியான சுதந்திரமாகும்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தில் இணைந்து வருகின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொலை செய்து வெளிநாடுளுக்கு சென்றவர்களும் புலிகளுக்கு பயந்து இலங்கையை விட்டு சென்றவர்களும் டயஸ்போராக்களுடன் இணைந்து பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்கிவைக்க முயல்கின்றனர். சிறு குழுவுக்குக் கிடைக்கும் டொலர்களுக்காக நாட்டுக்கு பெரும் அநீதி செய்கின்றனர்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமித்துள்ளோம். தேசிய பிரச்சினையின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய சிறந்த இடம் இது. இங்கு வந்து தமது கருத்துக்களை முன்வைப்பது சகல கட்சிகளினதும் பொறுப்பாகும். முன்னர் வட பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தென்பகுதிக்கு வந்தனர். இன்றும் அவர்களில் பலர் தெற்கில் வாழ்கின்றனர். 58 வீதமான தமிழ் மக்கள் வடக்கிற்கு வெளியிலே வாழ்கின்றனர். தெற்கில் இருந்து வடக்கிற்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் மக்கள் சென்று வருவது வருடாந்தம் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. புதிய நாடொன்று கட்டியெழுப்பப்படுகிறது.

உயிர் தியாகம் செய்து பெற்ற வெற்றியை பாதுகாப்பதன் மூலமே நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கு உரிய கௌரவம் வழங்க முடியும். பிரிக்க முடியாத நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகத்தான் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தனர். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தில் ஒரு துளியைக் கூட விட்டுக் கொடுக்காமல் இந்த தாய் நாட்டில் வாழ உறுதி பூணுவோம் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com