இரு கொன்ஸ்டபிள்கள் ஆயுததாரிகளால் கடத்தி ஒருவர் சுட்டுக் கொலை! தகவல் தந்தால் ரூ. 10 இலட்சம் சன்மானம்!!
குருணாகல் - தம்புள்ளை வீதியில் நள்ளிரவில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு பொலிஸ் கொன்ஸ்டபிள் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். வெள்ளைவா னொன்றில் கடத்தி படுகொலை செய்த சந்தேகநபர்கள் தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமென பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
நிராயுதபாணிகளாக வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை வெள்ளைவானில் கடத்திச்சென்று சீருடைகளைக் களற்றி சுட்டுக்கொன்ற சம்பவம் குருணாகல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் யாப்பா முதியன்சலாகே சந்தன சம்பத் (வயது 42)க்கு பொலிஸ் சார் ஜன்டாக பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. சந்துனி என்ற 13 வயது பெண் பிள்ளைக்கும், சமிந்து உமங்க 10 வயது ஆண்பிள்ளைக்கும் தந்தையான சம்பத்தை பொலிஸ்மா அதிபரின் சிறப்பு விருது உட்பட 53 பொலிஸ் விருதுகளைப் பெற்றுள்ளார். வடக்கின் மனிதாபிமான நடவடிக்கை காரணமாக பூர்ண பூமி பதக்கமும் பெற்றுள்ளார்.
மின்னேரியா, மட்டக்களப்பு, திருகோணமலை, இங்கினியாகல, வவுனியா, சிலாபம், முந்தல், மன்னார், குருநாகல் ஆகிய பகுதிகளிலும் இவர் கடமையாற்றியுள்ளார். தம்புள்ளை - குருணாகல் வீதியில் இரவு போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது தம்புள்ளை பகுதியிலிருந்து வந்த வெள்ளை நிற வானொன்றை நிறுத்தி சோதனையிட் டுள்ளனர். வானின் அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கோரியபோது, வானுக்குள்ளிருந்தவர்கள் திடீரெனப் பாய்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் பிடித்து கடத்தி படகமுவ காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
காட்டுப் பகுதியில் வைத்து பொலிஸ் கொன்ஸ்டபிள் சம்பத்தை வெளியே இழுத்து ரி56 ரகத் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து மற்றைய பொலிஸ் கொன்ஸ்டபிளான விஜயசூரிய கொலையாளிகளுடன் போராடியுள்ளார். இதன்போது துப்பாக்கியின் மகசின் கழன்றுள்ளது. இவர் வானில் வந்த நபர்களுடன் போராடி படுகாயத்துடன் இருளில் ஓடித்தப்பியுள்ளார். இதனையடுத்து கிராமத்து மக்கள் வரவே சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை பொலிஸ்மா அதிபர் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைத்ததுடன், ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் விட்டுவிட்டுச்சென்ற மகசின் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வெள்ளைவானின் சாரதியுடன் மூவர் அல்லது நான்கு பேர் இருந் திருக்கலாம். எனினும், சம்பவத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு காயங்களுடன் குருணாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றைய கொன்ஸ்டபிளின் வாக்குமூலம் முழுமையாக கிடைத்தாலே உண்மை நிலை தெரியவரும் என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சீருடையில் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் உயிர் உடமைகளைப் பாதுகாப்பதற்காக நள்ளிரவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டது மிகவும் பாரதூரமான குற்றமாகும். ஆனபடியால் சந்தேக நபர்களைக் கைதுசெய்ய பொதுமக்கள் உதவவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தகவல் தருபவருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment