Sunday, April 6, 2014

சிஐஏ சித்தரவதையும், சர்வாதிகார அச்சுறுத்தலும். Patrick Martin

சிறைக்கைதிகள் மீதான சித்தரவதை மற்றும் அதை மூடி மறைக்க அரசு அதிகாரிகளால் கூறப்படும் திட்டமிட்ட பொய்கள் குறித்த பேரச்சமூட்டும் விபரங்களை அளித்து, செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான செய்தியிலிருந்து ஒரேயொரு தீர்மானத்திற்கு தான் வர முடியும்: அதாவது, ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் மேற்தட்டும் யுத்த குற்றங்கள் புரிந்த குற்றவாளியாக உள்ளது, அதற்கு அது பொறுப்பு கூற வேண்டியிருக்கும்.

ஆப்கானிஸ்தான், போலாந்து, ரூமேனியா, தாய்லாந்து மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள, “விசாரணைக்காக" கைதிகள் காவலில் வைக்கும் இரகசிய சிறைகூடங்களான, CIAஇன் “நிழலுலக முகாம்களின்" (black sites) நடவடிக்கைகள் குறித்து செனட் சபையின் உளவுத்துறைக்கான கமிட்டி நடத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புகளை, பெயர் வெளியிடாத "அமெரிக்க அதிகாரிகளிடம்" இருந்து கசிந்த கசிவுகளின் அடிப்படையில், போஸ்ட்டின் அந்த செய்தி விவரித்திருந்தது. அந்த "விசாரணைகளில்" தண்ணீரில் மூழ்கடித்தல், தூங்கவிடாமல் செய்தல், அடித்தல், மன அழுத்தத்திற்கு உள்ளாக்குதல், கடுங்குளிருக்கு உட்படுத்துதல், இன்னும் ஏனைய சித்தரவதை முறைகளும் உள்ளடங்கும்.

போஸ்ட்டில் வெளியான கட்டுரை, CIA எதை முடக்க ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறதோ கமிட்டியின் அந்த பாரிய அறிக்கையை சுருக்கி, சிறியளவில் தொகுத்து வழங்குகிறது. வியாழனன்று, 400 பக்க நிர்வாக சுருக்க அறிக்கை (executive summary) ஒன்றை வெளியிடவும், பகிரங்கமாக அனைவரின் பார்வைக்கு முன் கொண்டு வரவும் கோரி, செனட் கமிட்டி வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

6,300 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் மொத்த தொகுப்பையும் ஒருபோதும் வெளியிட வேண்டியதில்லை என்பது செனட் குழுவில் உள்ள ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருதரப்பினரின் கருத்தாக உள்ளது. அந்த அறிக்கை மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், ஒன்று இரகசிய விசாரணைகளின் முழு கால அட்டவணையை அளிப்பதாகவும், இரண்டாவதொன்று CIA அதிகாரிகள் திட்டத்தைக் குறித்து என்ன அறிந்து வைத்திருந்தார்களோ அதுவும் ஆனால் உண்மையில் நடந்து வருவதைக் குறித்து அவர்கள் கூறுவதும் முரண்பாடாக இருப்பதையும், மற்றும் மூன்றாவதொன்று 2002 மற்றும் 2006க்கு இடையே "நிழலுலக முகாம்களில்" வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கைதிகளின் ஏறத்தாழ அனைவரின் முழு விபரங்களையும் அளிப்பதாகவும், போஸ்ட் கட்டுரை விவரிக்கிறது.

போஸ்ட் செய்தியை பின்தொடர்ந்த மெக்கிளாட்ச் செய்தி சேவையின் தகவல்படி, 100 கைதிகளில் பாதிக்கு மேற்பட்டோர் ஏதோவொரு விதமான சித்தரவதை முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர், அத்தோடு ஏறக்குறைய ஐந்து பேர் விசாரணையின் போது இறந்துள்ளனர். குளிர்நீரில் மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் வெறும் ஒட்டு துணியோடு ஒரு குளிர்ந்த சிறையில் விடப்பட்டதால் ஹைப்போதெர்மியாவால் (hypothermia) உயிரிழந்த குல் ரஹ்மான், மற்றும் தலையை பிளாஸ்டிக் பையால் மூடி, சிலுவையில் அறையப்பட்டது மாதிரியிலான பாணியில் சுவற்றில் தொங்க விடப்பட்டு இறந்த மனாதல் அல் ஜமாதி ஆகியோரும் அதில் உள்ளடங்குவர்.

அந்த அறிக்கை விவரிப்பது என்னவென்றால் அங்கே நடப்பது தனிநபர்களின் "போக்கிரித்தனமான" நடவடிக்கைகளோ அல்லது "வரம்பு கடந்த" நடவடிக்கைகளோ அல்ல, மாறாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் செனியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். இதற்கு கைமாறாக, ஒபாமா நிர்வாகத்தின் செயலூக்கத்தோடு கூடிய ஈடுபாட்டோடு இந்த நாள் வரையில் மூடிமறைப்பு தொடர்கிறது, இதில் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட அதிகாரிகள் வரையில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் மிக நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர் — ஒபாமா வெள்ளை மாளிகையின் ஒரு முன்னாள் உயர்மட்ட உதவியாளரும், புஷ் நிர்வாகத்தின் அதிகாரியுமான— CIA இயக்குனர் ஜோன் பிரென்னென் ஆவார்.

சித்திரவதைத் திட்டத்தை மூடி மறைப்பதில் அமெரிக்க ஊடகங்களின் ஆன மட்டிலுமான முயற்சிகளுக்கு இடையில், அது குறித்த ஆரம்ப அறிக்கைகள் மேலே வரத் தொடங்கிய பின்னர், புஷ் நிர்வாகம் அதெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. CIA சிறையில் இருந்த கைதிகள் குவாண்டனமோவிற்கோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளில் (எகிப்து, சவூதி அரேபியா, இதர பிற நாடுகளில்) உள்ள சிறைக்கூடங்களுக்கோ அல்லது சித்திரவதை கூடங்களுக்கோ மாற்றப்பட்டனர்.

நீரில் மூழ்க செய்தல் மற்றும் ஏனைய சித்திரவதை முறைகளை நிறுத்த 2009இல் ஒபாமா உத்தரவிட்டார், அதேவேளையில் அந்த சித்திரவதை திட்டங்களுக்கு பொறுப்பான முகவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படாத படிக்கு தடுத்து நிறுத்தினார். இது, சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான தந்திரோபாயங்களில் கொண்டு வரப்பட்ட ஒரு மாற்றத்தின் பாகமாக இருந்தது, அதாவது கைது மற்றும் விசாரணை என்பதிலிருந்து டிரோன் ஏவுகணை தாக்குதல் மூலமாக படுகொலை செய்தல் என்பதற்கு மாறி இருந்தது.

அரசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் படுகொலையின் இந்த அனைத்து முறைகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா சாசனங்களின் கீழ் சட்டவிரோதமானதாகும், அத்தோடு சித்திரவதை மற்றும் படுகொலைகளுக்கு தடைவிதிக்கும் அமெரிக்க அரசியலமைப்பையும் மற்றும் சட்டங்களையும் மீறுவதாகும். வேறுவிதத்தில் இவை பலம் பொருந்திய இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கோளாறுகள் அல்ல, மாறாக இவை சீரழிந்த மற்றும் ஆழ்ந்த குற்றத்தனமான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விளைபொருள்களாக உள்ளன.

படுகொலை மற்றும் சித்திரவதைகளுக்கு யார் உத்தரவிட்டார்களோ, யார் படுகொலை மற்றும் சித்திரவதைகளுக்கு உதவினார்களோ, ஒத்துழைத்தார்களோ மற்றும் மூடி மறைத்தார்களோ, யார் இந்த முதலிரண்டு குழுக்களுக்கு சட்டரீதியிலான விளக்கங்களை வரைந்தார்களோ மற்றும் ஊடகங்களில் வக்காலத்து வாங்கினார்களோ, அவர்களில் பெரும்பான்மையினரை வாஷிங்டன் அரசியல் ஸ்தாபகம் உட்கொண்டிருக்கிறது.

எந்தவொரு சட்டரீதியிலான கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்படும் ஓர் உளவுத்துறை முகமை தான் இந்த ஒட்டுமொத்த அரசியல் எந்திரத்தையும் மேற்பார்வையிட்டு வருகிறது, இந்த உண்மை சித்திரவதை அறிக்கை வெளியாவதைத் தடுக்கும் CIAஇன் திட்டமிட்ட முயற்சிகளில் இருந்தே வெளிப்படுகிறது. அந்த முகமை செனட் சபையின் உளவுதுறைக்கான கமிட்டியையே உளவுபார்க்கும் அளவிற்கு சென்றது, இதை அந்த கமிட்டி தலைவர் டேயன் ஃபென்ஸ்டீனே கடந்த மாதம் வெளிப்படுத்தினார். ஃபென்ஸ்டீன் செனட் தளத்திலிருந்து உரையாற்றுகையில், “அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளார்ந்திருக்கும் அதிகார பகிர்வு கோட்பாட்டை" அந்த முகமை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். “நான்காம் அரசியலமைப்பு திருத்தம், கணினிவழி மோசடி மற்றும் முறைகேடு சட்டம், அத்தோடு உள்நாட்டில் சோதனைகளோ அல்லது கண்காணிப்போ செய்வதிலிருந்து CIAஐ தடுக்கும் நிர்வாக ஆணை 12333,” ஆகியவற்றையும் CIA மீறியுள்ளதாக அவர் மேலதிகமாக குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்க அரசியலமைப்பின் அஸ்திவாரங்கள் மீது CIA தாக்குதல் நடத்தி உள்ளதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டும் விதமாக, அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகையில், CIA அவரது கமிட்டியை மிரட்ட முயல்வதாகவும், மற்றும் நிர்வாக பிரிவை காங்கிரஸ் மேற்பார்வையிடும் கோட்பாட்டை நீக்க முயல்வதாகவும் ஃபென்ஸ்டீன் தெரிவித்தார்.

ஃபென்ஸ்டீன் உளவுத்துறை எந்திரத்தின் குற்றங்களுக்கு ஒரு கொள்கைரீதியான எதிர்ப்பாளர் கிடையாது. எட்வார்ட் ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட விதத்தில், தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தின் மீதான தேசிய பாதுகாப்பு முகமையின் சட்டவிரோத உளவுவேலைகளை மிகவும் விடாப்பிடியாக பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவராவார். அவரது செனட் உரைக்கு பின்னர், CIA மீதான அவரது விமர்சனங்களை விரிவாக விவரிக்க அவர் மறுத்துள்ளதோடு, அவர் உளவுத்துறை முகமைகள் மற்றும் ஒபாமா வெள்ளை மாளிகை இரண்டினோடும் நெருங்கி ஒத்துழைத்து வருகிறார்.

உளவுத்துறை கமிட்டிக்குள் அமர்ந்திருக்கும் செனட்டர்கள் ரோன் வெய்டென் மற்றும் மார்க் உடால் போன்ற, ஜனநாயக கட்சிக்குள் இருக்கும் NSA திட்டத்தின் தாராளவாத "விமர்சனர்களும்" எந்தவித வேறுபாடுமின்றி உள்ளனர். தொலைபேசியின் மெட்டாடேட்டாவை NSA சேகரிக்கும் நடைமுறையில் செய்யப்பட்ட அலங்கார மாற்றங்களை, கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் அறிவித்த போது அவர்கள் அதை பாராட்டினர். இந்த பொலிஸ் அரசு முறைகள் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றன என்பதைக் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை, மாறாக ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியவை அமெரிக்க மக்களிடையே சக்திவாய்ந்த விதத்திலும் அதிகளவிலும் எதிர்ப்பை உருவாக்கி வருவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர்.

அமெரிக்க ஆளும் மேற்தட்டின் எந்தவொரு பிரிவும் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற சுண்டு விரலைக் கூட தூக்காது. அது ஏனென்றால் அவர்களின் சொந்த வர்க்க நலன்கள் பணயத்தில் உள்ளன. பொலிஸ் அரசு தயாரிப்பிற்கான அடிப்படை உந்து சக்தியாக இருப்பது சமூக சமத்துவமின்மையின் அதீத உயர்வாகும். பகுப்பாய்வின் இறுதியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒப்பீட்டுரீதியில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் மக்களுக்கு எதிராக அவர்களின் செல்வ வளத்தையும், பிரத்யேக தனிச்சலுகைகளின் இடத்தையும், அரசியல் சர்வாதிகாரம் மற்றும் அரசு ஒடுக்குமுறை முறைகளின் மூலமாக மட்டுமே காப்பாற்றி வைக்க முடியும்.

CIA அது வழங்கிய தகவல்கள் பயங்கரவாத தாக்குதல்களை தடுத்தது என்று பொய்யாக வாதிட்டு, சித்திரவதையின் விளைவுகள் குறித்து அது மீண்டும் மீண்டும் பொய் உரைத்தது என்பது செனட் அறிக்கையின் வெளிப்பாடுகளுக்கு மத்தியில் இருக்கும் உண்மையாக உள்ளது. அப்படியானால், அந்த சித்திரவதை திட்டங்களுக்கு பின்னால் உள்ள நிஜமான நோக்கம் தான் என்ன? அது என்னவென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நோக்கி, சட்டவிரோத ஒடுக்குமுறையின் ஓர் அமைப்புமுறையை — அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கு உள்ளேயே — ஸ்தாபிப்பதாகும்.

அமெரிக்காவிலும் சரி வேறு ஒவ்வொரு நாட்டிலும் சரி, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் மிக மிக ஆற்றல் மிக்க சக்தியாக விளங்கும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒன்று திரட்டுவதை சார்ந்துள்ளது. இதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

No comments:

Post a Comment