இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற் காக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இயங்க ஆரம்பிக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
ஜனாதிபதி அவர்களின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபரினால் நிறுவப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்டதாக இலக்கம் 135 தர்மபால மாவத்தையில மைந்துள்ள புத்தசாசன அமைச்சு அலுவலகத்தில் இயங்க ஆரம்பிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாட்டில் மதங்களுக்கு இடையே நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதுடன் எந்தவொரு மதத்துக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்குடனேயே இந்த விசேட பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அடங்கலாக 8 பேர் இந்த பொலிஸ் பிரிவில் அடங்குவர். திங்கள் முதல் ஆரம்பமாகவுள்ள இவ்விசேட பிரிவின் தொலைபேசி இலக்கங்கள், தொலைநகல் இலக்கம், ஈமெயில் போன்றவற்றின் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். பிரதேச ரீதியில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யலாம்.
அந்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்தாதவிடத்து அவர்கள் நேரடியாகவோ, தொலைபேசி மூலமோ, தொலை நகல் மூலமோ, ஈமெயில் மூலமோ புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவுக்குத் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment