Tuesday, April 22, 2014

ஐந்தில் ஒரு அமெரிக்க குழந்தைகளுக்கு உண்பதற்கு போதுமான உணவு கிடைப்பதில்லை! By Andre Damon

அமெரிக்க உணவு களஞ்சியத்தின் தேசிய வலையமைப்பான Feeding America, வியாழன் அன்று உள்ளூர் உணவுப் பாதுகாப்பற்ற தன்மை குறித்த அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது: இது, அமெரிக்காவில் டஜன் கணக்கான மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லை என்பதை காட்டுகிறது.

புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள கடைசி ஆண்டான 2012 ல், 14 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கட்தொகையில் 16 வீதத்தினர், உணவுப் பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்ந்துள்ளனர். இது 2007ல் இருந்ததைவிட 11.1 வீதம் அதிகமாகும். குழந்தைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மையின் அளவு இன்னும் மோசமானதாகும், 16 மில்லியன் குழந்தைகள் அல்லது 21.6 வீதம் என அதிர்ச்சிதரும் வகையில் உள்ளது.

“உணவுப் பாதுகாப்பற்ற நிலை, பெருமந்த நிலைக்கு பின்னர் எக்காலத்தையும்விட மிக அதிகமாக உள்ளது” என்று நன்கொடை உணவு வங்கிகளின் வலை அமைப்ப்பான Feeding America வின் செய்தி ஊடக உறவுகள் பிரிவு இயக்குனர் ரோஸ் ஃப்ரேசர் (Ross Fraser) கூறினார். “ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் பட்டினி ஆபத்தில் வாழ்கிறார். இதே நிலைதான் ஐந்து குழந்தைகளில் ஒன்றிற்கும்.”



மாநிலம் (state) மற்றும் மாவட்டம் (County) என்று பிரித்துப் பார்த்தால் உலகின் பல பகுதிகளில் இருக்கும் நிலைமையைவிட இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக மிசிசிபியில் மக்கட் தொகையில் 22.3%, நான்கில் ஒருவர் உணவுப் பாதுகாப்பு இன்றி உள்ளனர். இப்படித்தான நியூ மெக்சிகோவில் 29% குழந்தைகள் உள்ளன, கிட்டத்தட்ட அனைத்துக் குழந்தைகளிலும் மூன்றில் ஒரு பகுதியினர்.
நாட்டில் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியா உட்பட, 16 மாநிலங்களில் நான்கில் ஒரு குழந்தைக்கும் மேலாக, உணவுப் பாதுகாப்பு இன்றி உள்ளன.

உணவுப் பாதுகாப்பற்ற நிலை என்பதின் பொருள் ஒரு வீட்டில் “ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க போதுமான அளவு உணவு இராது” என்பதாகும் என்று ஃப்ரேசர் WSWS இடம் விளக்கினார். “சில சமயம் அவர்கள் உணவு உட்கொள்வதில்லை, அல்லது தங்கள் வயிற்றை தேவையான ஊட்டச்சத்து இல்லாத உணவுகளால் நிரப்புகின்றனர், ஒரு சமச்சீர் உணவிற்கு பதிலாக ஒரு கிண்ணம் அரிசி என.” “மந்த நிலை தாக்கியவுடன், உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை 38 மில்லியன் மக்களில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்லியன் என பெரிதும் உயர்ந்து விட்டது. ஃப்ரேசர் மேலும் கூறினார்: “மந்தநிலை முடிந்துவிட்டது என்ற அறிவிப்பு வந்தபோதிலுமகூட, இப்புள்ளிவிவரங்கள் காட்டுவது மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய கடினமான நேரத்தைக் கொண்டுள்ளனர், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான உணவைப் பெறுவதில் இடரைக் காண்கின்றனர்.”

லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டம், நியூ யோர்க பெருநகரப்பகுதி, கூக் மாவட்டம் (இதில் சிக்காகோ அடங்கியுள்ளது) ஆகியவை அமெரிக்காவிலேயே உயர்ந்த எண்ணிக்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களை கொண்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் 1.6 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர், நியூ யோர்க்கின் 5 பிரிவுகளில் 1.4 மல்லியன் மக்கள், கூக் மாவட்டத்தில் 0.8 மில்லியன் உள்ளனர். டெட்ராயிட் உள்ளடக்கிய, வேன் மாவட்டத்தில் வசிப்பவர்களில் 21 வீதத்தினர், (ஐந்தில் ஒருவருக்கும் மேலானோர்) 2012ல் உணவுப் பற்றாக்குறையில் இருந்தனர். டெக்சாஸில் உள்ள டல்லாஸ் மக்களில் 20 வீதத்தினர் உணவுப் பாதுகாப்பற்று இருந்துள்ளனர்.

அமெரிக்க தலைநகரின் தாயகமான கொலம்பியா மாவட்டத்தில், 28% குழந்தைகள் உணவு பாதுகாப்பற்ற வீடுகளில் வாழ்கின்றனர்.
கிராமப்புற வறுமையும் பட்டினியும் பரவலாக உள்ளன. அமெரிக்காவிலேயே உணவு பாதுகாப்பின்மையின் அதிக அளவு கிராமப்புற மிசிசிபியில் மிக உயர்ந்து ஐந்தில் நான்கு மாவட்டங்களில் இருந்தது. ஹோம்ஸ் மாவட்டம், தெற்கு மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பற்ற தன்மை 32% எனவும் Yazoo மாவட்டத்தில் இது 27% எனவும் கூறப்படுகிறது.

டெக்சாஸ் Zavala மாவட்டத்தில் குழந்தைகளில் 41 வீதம் உணவுப் பாதுகாப்பு அற்று உள்ளனர். அமெரிக்காவில் ஏனைய இரண்டு மாவட்டங்கள், அரிசோனாவில் உள்ள Yuma மாவட்டம் மற்றும் ஸ்டார் மாவட்டம் ஆகியவற்றில் குழந்தைகளின் உணவுப் பாதுகாப்பற்ற நிலை 40 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக உள்ளன .

பட்டினி ஆபத்து கிராமப்புற அமெரிக்காவிலும் மற்றும் உள் நகரங்களிலும் உயர்ந்துள்ள நிலையில், ஃப்ரேசர் இது இப்பகுதிகளுடன் நின்றுவிடவில்லை என எச்சரித்தார். “அமெரிக்காவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டினி உள்ளது. இந்த நாட்டில்தான் பெரும் செல்வமும் அதே நேரத்தில் பெரும் வறுமையும் உள்ளன.” Louden மாவட்ட உதாரணத்தை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார். இது வாஷிங்டன் டி.சி.யில் வசதியான புறநகரம் ஆகும்; இங்குள்ள உள்ளூர் உணவு வங்கி, உணவுத் தேவைக்கான அளிப்பு நான்கு மடங்காக அதிகமாகிவிட்டது என்று தகவல கொடுத்துள்ளது.

Feeding America அறிக்கை, கடந்த ஆண்டு அமெரிக்க விவசாயத் துறை வெளியிட்ட நிறுவனத்தின் 2012 தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை. மற்ற, அதிக விரிவற்ற ஆய்வுகள், அப்பொழுதில் இருந்து உணவுப் பற்றாக்குறை கணிசமாக உயர்ந்துள்ளது என்று குறிக்கின்றன. அமெரிக்க மேயர்கள் மாநாட்டின்படி, 25 பெரிய நகரங்களில் அவசர உணவு உதவித் தேவை 2012ல் 22 வீதத்தைத் தொடர்ந்து 2013ல் 7 வீதம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, Feeding America உடைய அறிக்கை, உணவு முத்திரை நலன்களுக்கு கடந்த ஆறு மாதங்களில் இரு தொடர்ந்த வெட்டுக்கள் ஏற்பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நவம்பர் 1, 2013 அன்று காங்கிரஸ் 2009 முதல் செயல்படுத்தப்பட்ட அவசர உணவு உதவி நிதிகளை காலாவதியாக விட்டது; இது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 36 டாலர் குறைப்பை விளைவாக்கும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முன்னதாக, எதிர்வரும் 10 ஆண்டுகளில் 8.7 பில்லியன் டாலர்கள் வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டு, ஜனாதிபதி ஒபாமாவால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
முழு Feeding America வலை அமைப்பின் செயற்பாட்டிற்கும், உணவு முத்திரை நலன்களில் ஆண்டு வெட்டுக்கள், முதல் வெட்டில் மட்டும் 5 பில்லியன் டாலர்கள் ஆகும். “இது நாங்கள் செய்வது அனைத்தையும் அழிப்பது போல் ஆகிவிட்டது” என ஃப்ரேசர் கூறினார்.

கூட்டாட்சி உணவு முத்திரை உதவி நலன்கள் இப்பொழுது சராசரியாக மாதத்திற்கு 134 டாலர்கள் எனத் தனிநபர்களுக்கும், 290 டாலர்கள் என குடும்பங்களுக்கும் அல்லது ஒரு நபருக்கு ஓர் உணவிற்கு 1.40 டாலர் என கொடுக்கிறது. “நம் உணவு வங்கிகளுக்குத்தான் மக்கள் உணவு உதவிகள் கிடைக்காத போது செல்கின்றனர்” என்றார் ஃப்ரேசர். பெரும்பாலான மக்கள் 21ம் தேதியை ஒட்டி தங்கள் பணத்தை எந்த மாதத்திலும் தீர்த்துவிடுவர் என்றும் குறிப்பிட்டார்.

உணவு வங்கி வலைப்பின்னல் அமைப்புக்கு வரும் மக்களில் கணிசமான பகுதியினர் வேலை செய்பவர்களாவர், ஆனால் போதுமான உணவை வாங்கப் பணம் இன்றி உள்ளனர் என்றும் ஃப்ரேசர் குறிப்பிட்டார். “அவர்களின் குறைந்த ஊதிய வேலைகளால் தமது வரவு-செலவை சமாளிக்க முடியாதுள்ளனர். ஒரு குறைந்த பட்ச ஊதியத் தொழிலாளி சம்பாதிக்கும் பணத்தில், சிக்காகோ நகர எல்லைகளில் கூட ஒரு குடியிருப்பை வாடகைக்கு பெற முடியாதுள்ளது.”

இப்படி வறுமை, பட்டினி, வீடற்ற நிலை பரவலாக வளர்ச்சியடைந்துள்ளமை, 2008 பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஆளும் வர்க்கத்தால் வேண்டுமென்றே தொடரப்பட்ட கொள்கையின் விளைவு ஆகும். முதலில் புஷ்ஷின் கீழும், பின்னர் ஒபாமாவின் கீழும் வங்கிப் பிணை எடுப்புக்கள் என்னும் வடிவத்தில், வோல் ஸ்ட்ரீட்டுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் கொடுக்கப்பட்டன; இதைத் தொடர்ந்து ஊதியங்கள், சமூக நலன்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களில் முடிவிலா வெட்டுக்கள் தொடரப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து செல்வந்தர்களுக்கு வரலாற்றுத் தன்மை கொண்ட செல்வ மறுவிநியோகத்தை விளைவித்துள்ளது. கடந்த வாரம்தான் நிர்வாகிகள் இழப்பீட்டு ஆய்வு நிறுவனம் Equilar இல் இருந்து வந்த அறிக்கை ஒன்று, அமெரிக்காவில் 100 மிக அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2013ல் அவர்களுடைய சராசரி ஆண்டு ஊதியம், 9% இருந்து $13.9 என உயர்வு கண்டதாகக் குறிப்பிடுகிறது.

2009ல் இருந்து அமெரிக்க பில்லியனர்கள் தங்கள் செல்வம் இருமடங்காகியிருப்பதைக் கண்டுள்ளனர். அமெரிக்காவில் இப்பொழுது 400 செல்வம் படைத்தவர்கள் மொத்தமாக 2 டிரில்லியன் டாலர்களை கொண்டுள்ளனர் அல்லது Feeding America வின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்கு தேவையானதைப் போன்று 400 மடங்கை கொண்டுள்ளனர் அல்லது உணவு முத்திரைகள் பெறும் ஒரு தனிநபரின் சராசரி ஆண்டு ஒன்றுக்கான வருமானத்தை போல் ஒரு பில்லியன் மடங்கு அதிகமானதை கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment