உக்ரேன் பற்றிய ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் மத்தியில் ரஷ்யா மீதான மோதலை வாஷிங்டன் விரிவாக்குகிறது. By Alex Lantier
ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கிழக்கு உக்ரேனிய ஆர்ப்பாட்டங்களில் இருந்து மாஸ்கோ தன்னை அந்நியப்படுத்தி காட்டினாலும், ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கியேவ் ஆட்சி தொடர்ந்து அதன் ஆயுதமேந்திய படைகளை திரட்டுகையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அவர்கள் ரஷ்யாவுடன் தொடர்ந்து அழுத்தங்களை அதிகரிக்கவுள்ளதாக அடையாளம் காட்டினர்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேன் மற்றும் ரஷ்யா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை கிழக்கு உக்ரேனில் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், கட்டிட ஆக்கிரமிப்புக்களை கைவிடுமாறும் கோரியுள்ளது. இப்பொழுது எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் கியேவில் பாசிசத் தலைமையில் பெப்ருவரி ஆட்சிசதியால் நிறுவப்பட்ட அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.
அறிக்கை தொடர்ந்து கூறுகிறது: “அனைத்துத்தரப்பினரும் எத்தகைய வன்முறை, அச்சுறுத்தல் அல்லது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். இதில் பங்கு பெற்றவர்கள் தீவிரவாதத்ததின் அனைத்து வெளிப்படுத்தல்கள், இனவாதம், சமயரீதியான பொறுமையின்மை, யூத எதிர்ப்பு உட்பட அனைத்தையும் கண்டித்து நிராகரிக்கின்றனர். அனைத்து சட்டவிரோத குழுக்களும் ஆயுதங்களைக் களையவேண்டும்; சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் முறையான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். உக்ரேனிய நகரங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெருக்கள், சதுக்கங்கள், பிற பொது இடங்கள் காலி செய்யப்பட வேண்டும்.” சர்வதேச கண்காணிப்பாளர்கள் “மோதல் தவிர்ப்பு நடவடிக்கைகளை” மேற்பார்வையிட வேண்டும், பெரும் குற்றங்கள் செய்யாத எதிர்ப்பாளர்களுக்கு மன்னிப்பு தரவேண்டும் என்றும் அறிக்கை அழைப்புவிட்டுள்ளது.
ரஷ்ய சார்பு எதிர்ப்புக்களை முடிவிற்கு கொண்டுவர அழைப்புவிடும் ஆவணத்தில் மாஸ்கோ கையெழுத்திட முடிவெடுத்த போதிலும்கூட, மேற்கு அதிகாரிகள் மாஸ்கோ மீது பொருளாதார, இராணுவ அழுத்தத்தை தக்கவைத்து தீவிரப்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முடிந்த சிறிது நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து தயாரிக்கும் என்றார்.
செய்தியாளர் கூட்டத்திற்கு முன் அவர் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் தொலைபேசி அழைப்பில் தடைகளைப் பற்றி விவாதித்தார். இரு தலைவர்களும் ரஷ்யா “குறுகிய காலத்தில்” நிலைமை மோசமடைவதை குறைக்கவில்லை என்றால் இன்னும் தடைகளைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டனர் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று கூறுகிறது.
“என்னுடைய நம்பிக்கை நாம் உண்மையில் தொடரும் நடவடிக்கைகளை அடுத்த சில நாட்களுக்குள் காணவேண்டும, ஆனால் பழைய செயல்களை நோக்கும்போது, அதை நம்புவதற்கில்லை, ரஷ்யர்கள் கிழக்கு, தெற்கு உக்ரேனில் தலையீடு செய்யும் முயற்சித் திறன்களுக்கு எப்படி விடையிறுப்பது என்று தயாராக இருக்க வேண்டும்” என்று ஒபாமா அறிவித்தார்.
கிரெம்ளின் ஆயிரக்கணக்கான துருப்புக்களை கிழக்கு உக்ரேன் எல்லையை அடுத்து நிறுத்திவைத்துள்ளது என்ற ஆதாரமற்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களை அவர் மீண்டும் கூறி ரஷ்யா “அழிவையும், குழப்பத்தையும்” விதைக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
உக்ரேனில் “தலையிடுவதற்காக” ரஷ்யாவை ஒபாமா கண்டித்தல் உக்ரேன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து செய்தி ஊடகத்தால் பரப்பப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் அறிக்கைகளில் காணப்படும் திமிர்த்தன பொய்கள், திரிபுகளை தொடர்கின்றது. நிகழ்வுகளை பின்பற்றும் எவருக்கும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையே தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை அகற்ற செயல்படும் வகையில் நெருக்கடியைத் தூண்டின என்பதை அறிவர். இவை உக்ரேன் விவகாரங்களில் தலையிட்டு, பாசிச கட்சிகளையும் துணை ஆயுதக்குழுக்களையும் அவற்றின் அதிர்ச்சித் துருப்புக்களாக பயன்படுத்தி ஒரு ஆட்சிசதியை செயற்படுத்தின.
ஜெனீவா பேச்சுவார்த்தைகள் நடைபெறுகையில், ஒபாமா நிர்வாகம் ஆத்திரமூட்டும்வகையில் அது கியேவ் அரசாங்கத்தின் ஆயுதப்படைகளுக்கு உதவியை அதிகரிக்கும் என அறிவித்தது. இது முதல் நாள் நேட்டோவின் பொதுசெயலர் ஆண்டெர்ஸ் போக் ராஸ்முசென் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவாக்கம் இருக்கும் என்று கூறியதற்கு இணங்க இருந்தது.
அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், போலந்து பாதுகாப்பு மந்திரி தோமஸ் சீமோனியாக் உடன் பேசிய பின் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நேட்டோ இராணுவ நிலைகொள்ளலை அதிகரிக்க கூடுதல் உதவியை அறிவித்தார். வாஷிங்டன் உக்ரேனிய இராணுவத்திற்கு மருத்துவப் பொருட்கள் வழங்குதல், மின்னியக்கிகள், தலைக்கவசங்கள் மற்றும் பிற கருவிகளை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
கியேவிற்கு வாஷிங்டனின் இராணுவ ஆதரவு ரஷ்யாவை சுற்றி வளைக்கும் நோக்கத்தில் பிராந்தியத்தில் தொடர்ந்த அதிகரிப்பின் ஒரு பகுதி ஆகும். ஒரு புதிய “வான் பாதுகாப்பு” ஒத்துழைப்பு அமெரிக்கா, போலந்து, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். இதனால் அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகள கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்வது, அமெரிக்க போர்க்கப்பல்கள் பால்டிக் மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இருப்பது அதிகரிக்கப்படும்.
கியேவ் ஆட்சி 16 ல் இருந்து 60 வயதான ரஷ்ய ஆண்கள் உக்ரேனுக்குள் பயணிப்பதை தடை செய்துள்ளது. உக்ரேனிய அரசாங்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு ரஷ்ய செய்தி நிறுவனம் RIA Novosti இடம், “இந்த தற்காலிக நடவடிக்கைகள் முக்கியமாக உடல்காத்திரமான ஆண்களுக்கு பொருந்தும். அவர்கள் எவ்வித்ததிலாவது கிழக்கு உக்ரேனிய நிலைமையில் செல்வாக்கைச் செலுத்தலாம்” என்றது.
இக்கொள்கை பற்றி உடனடி அறிவிப்பை பெற்ற ரஷ்ய விமானச்சேவையான Aeroflot பின்வருமாறு எச்சரித்தது: “கிரிமிய தன்னாட்சிக் குடியரசிலும் செவஸ்டாபோல் நகரிலும் வசிப்பவர்கள் எனப் பதிவு செய்த 20-35 வயதான உக்ரேனிய பெண்கள் விஷேடமாக பரிசீலிக்கப்பட்ட பின்தான் உக்ரேனில் நுழைய அனுமதிக்கப்படுவர்.”
நிகழ்வுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கூற்றுக்களான உக்ரேன் நெருக்கடி கிழக்கு உக்ரேனில் எதிர்ப்புக்களை தூண்டி உக்ரேனை வெற்றி கொள்ளும் கிரெம்ளினுடைய முன்னெடுப்பு என்பவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. உண்மையில் கிரெம்ளின் மேற்கில் இருந்து தொடர்ந்த அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டங்களையிட்டு பின் வாங்குகிறது. அதே நேரத்தில் கியேவ்விற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கியேவில் இருந்து அவர்களை தாக்குவதற்கு கிழக்கு உக்ரேனிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் அலை இராணுவப் பிரிவுகளை மழுங்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.
கிழக்கு உக்ரேனிய சாதாரணக் குடிமக்கள் கியேவில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதமேந்திய வாகனங்களை தடுத்துவிட்டனர். மேலும் ரஷ்ய சார்பு நடவடிக்கையாளர்கள் குடிமக்களை தாக்க கொடுக்கப்பட்ட ஆணைகளை மறுத்த வாகன ஓட்டிகளின் பல உக்ரேனியக் கவச வண்டிகளை கைப்பற்றினர். மேற்கு ஆதரவுடைய கியேவ் அரசுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் உக்ரேனியக் குடிமக்கள் மீது சுடுவதற்கு படையினர் மறுப்பது சமீபநாட்களில் மேற்கு செய்திஊடகங்ளில் கூட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
“உக்ரேனிய துருப்புக்கள் தாங்கள் விரோதப்போக்கு உடைய பகுதியில் செயல்படுகிறோம் என்பதை உணர்ந்தனர். ரஷ்யாவிற்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஆயுதக்குழுக்கள் பாதுகாப்பாளர்கள் என்று மக்களால் வரவேற்கப்படுகின்றனர்” என்று வியாழன் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியுள்ளது. “உக்ரேனிய இராணுவமும் மோசமான நிலையில்தான் உள்ளது. குடிமக்களால் தடுக்கப்பட்ட சில இராணுவத்தினர் பழைய வாகனங்களில் உள்ள இருப்புபடையினராவர். இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவையும் நீரையும் ஆர்வத்துடன் ஏற்றனர்.”
மக்கள்மீது சுடுவதற்கு மறுத்த படையினரை “கோழைத்தனத்திற்காக” விசாரணைக்கு உட்படுத்துவது என்று கியேவ் ஆட்சி உறுதி கொண்டுள்ளது.
இன்னும் பரந்த முறையில் இந்நிகழ்வுகள் முழு மேற்கு தலையீடு உக்ரேனின் அடித்தளத்தில் இருக்கும் பொய்கள், பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. ஐரோப்பிய சார்பு எதிர்ப்புக்களூடாக பெப்ருவரி 22 பாசிவாதிகளின் தலைமையிலான ஆட்சிசதியால் வெளிப்பட்ட கியேவில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி, ஜனநாயகத்திற்கான ஒரு புதிய உதயம் அல்ல, மாறாக மக்களின் பரந்த எதிர்ப்பை வன்முறையால் அடக்கும் சர்வாதிகார ஆட்சிதான். இது ஒன்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டது அல்ல, மேற்கு சக்திகள் ரஷ்யாவை சுற்றி வலுவிழக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்ட ஆக்கிரோஷக் கொள்கையில் ஒரு கருவிதான்.
ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் வெளிப்பாடு, கியேவ் அரசு எதிர்ப்புக்களை இரத்தம்தோய்ந்த முறையில் அழிக்கும் முயற்சியில் முதலில் தோல்வி ஆகியவை இருந்தாலும், கிழக்கு உக்ரேனில் நிலைமை இன்னும் உள்நாட்டுப்போர் விளிம்பில்தான் உள்ளது. அது கியேவ், மாஸ்கோ, நேட்டோ சக்திகளை போரில் ஈடுபடுத்திப் பெருக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.
தென்கிழக்கு உக்ரேனிய நகரமான மாரியுபோலில் நேற்று உக்ரேனிய இராணுவத் தளத்தின் மீது கிட்டத்தட்ட 300 போராளிகள் தாக்கியபின் கொடூர மோதல் வெடித்தது. தாக்கியவர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமுற்றனர், 63 பேர் கைப்பற்றப்பட்டனர், ஆனால் சில உக்ரேனிய படையினர் சரணடைந்தும் உள்ளனர்.
“ஆயுதங்களை கீழே போட்ட கோழைத்தனத்தை காட்டிய படையினரைக் கொண்ட 25வது விமானப் பிரிவு கலைக்கப்படும்” என்று இடைக்கால உக்ரேனிய ஜனாதிபதி ஒலெக்சாந்தர் துர்ஷிநோவ் கூறினார். “குற்றம் செய்த படையினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.”
ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் இன்னும் ஸ்லாவியன்ஸ்க் நகரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். கியேவ் அரசுக்கு விசுவாசமாக இருக்கும் இதன் படைகள் இந்த வாரம் முன்னதாகத் தாக்கனர். ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்கள் கிழக்கு உக்ரேனில் 10 முக்கிய நகரங்களில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
ரஷ்ய தொலைக்காட்சியில் நேற்று முக்கிய நேரத்தில் கொடுத்த பேட்டியில் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மிகவும் நெருக்கடியான நிலைமையை வலியுறுத்தினார்.
“கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஆயுதங்களை ஏந்தத் தொடங்கிவிட்டனர்” என்றார் புட்டின். “உக்ரேனிய நாட்டில் சிலவிடயங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்து ஒரு கலந்துரையாடலை கியேவ் அரசாங்கம் நடத்துவதற்கு பதிலாக அது இன்னும் பலாத்காரத்தால் அச்சுறுத்தி, அமைதியான மக்களுக்கு எதிரே டாங்குகளையும் விமானங்களையும் கூட நிறுத்துகிறது. இது உக்ரேனின் தற்போதைய ஆள்பவர்களின் மற்றொரு தீவிர குற்றம் ஆகும்.”
இனவழி ரஷ்யர்களுக்கு தாக்குதலில் இருந்து பாதுகாக்க கிழக்கு உக்ரேனுக்கு படைகளை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றம் அவருக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட புட்டின் “அந்த உரிமையைப் பயன்படுத்தும் கட்டாயம் வராது என்று உண்மையில் நம்புகிறேன்” என்றார்.
0 comments :
Post a Comment