சர்வதேச விசாரணையா? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்க வேண்டும் என்கின்றார் கருணா!
இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்றால் அதில் முதன்முதலில் த.தே.கூட்டமைப்பில் உள்ளவர்களையே விசாரிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார்.
இன்று த.தே.கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களுமே இலங்கையில் நடைபெற்ற அனைத்து அழிவுகளுக்கும் மிகவும் பெரும் பங்காற்றியவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையை மேலும் முன்னேற்றும் நோக்கில் வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டமிடல் பிரிவை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நேற்று திறந்துவைத்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது-
இந்திய படை இலங்கைக்கு வந்தபோது அதனோடு சேர்ந்து எமது இனத்தினை கொன்றொழித்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது சர்வதேச விசாரணை ஒன்றினை கோருவதற்கு?
முஸ்லிம் மக்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு தங்களது முழு ஆதரவினையும் வழங்குகின்றார்கள். ஆனால் தமிழர்களோ 100 வீதம் எதிர்ப்பினையே காட்டி வருகின்றார்கள் அப்படி இருக்கும் போது எப்படி அவரிடம் சென்று உதவி கேட்க முடியும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
இஸ்ஹாக்
0 comments :
Post a Comment