வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ளது. அதன் தலைவராக ஆனந்தராசா அவர்கள் உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள சகல சபைகளுமே கூட்டமைப்பின் உட்கட்சி மோதல்களால் முடங்கிக்கிடக்கின்றது. இந்த வரிசையில் வல்வெட்டிதுறை நகர சபைத்தலைவர் பதவிக்காக போட்டியிடும் ஒருவர் தற்போதைய தலைவர் ஆனந்தராசாவினால் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையே மக்கள்சேவையெனக்கருதிச் செயற்பட்டுவருகின்றார்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமர்வின் பொழுது, ஏபரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் தொடர்பான பிரேரணை செயலாளரினால் முன்வைக்கப்பட இருந்த நேரத்தில், ஈபிடிபியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர், பொ.தெய்வேந்திரனுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான உப தலைவர் க.சதீஸ உறுப்பினர்களான சூ.சே.குலநாயகம், கோ.கருணானந்தராசா ஆகியோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சபையில் இருந்தும் வெளியேறியிருந்தனர். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பொழுது அதில் பங்களிப்புச் செய்யாத நிலையில், மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளதால், வரவு செலவுத் திட்டத்தின் மீதான எவ்வித செலவினங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் போவதில்லை எனத் தொடர்ந்தும் நகராட்சி மன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அதிருப்திக் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்யவேண்டும் அல்லாவிட்டால் அதனை நடைமுறைப்படுத்த முடியாதவாறு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நகரசபையின் செயலாளர், தலைவர், மற்றும் முதலமைச்சர், உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் மேலும் ஏனைய பத்து பேருக்கும் எதிராக யாழ் மேல் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாகச் செயற்பட முடியாது என்று தெரிவித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் நகரசபையின் மார்ச் மாதக் கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரத்திற்கு எதிராக வாக்களித்தமை போன்று ஏப்ரல் மாதக் கொடுப்பனவுகளுக்கும் அங்கீகாரத்தை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில் சபைத் தலைவரின் அனுமதி பெறாமலேயே வெளியேறிச்சென்றனர்.
ஆயினும் அலுவலர்கள், ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமென்ற நோக்கில்,சபையில் சமுகமளித்திருந்த திருமதி.இ.கைலாஜினி,திரு.ம.மயூரன் ஆகியோரின் ஆதரவுடன் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகளுக்கான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதாக நகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாகத் தவிசாளர் கருத்துத் தெரிவித்த பொழுது,2011 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த 4வது நாளில் தமக்கு சுழற்சி முறையில் தலைமைப் பதவியை வழங்க வேண்டும் என்றும்,அவ்வாறு வழங்காவிட்டால் நகர சபை நிர்வாகத்தை முட்ககப்போவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு கடிதம் எழுதியதன் தொடர்ச்சியாகவே இத்தகைய செயற்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கமுடியாத பலவீனமான ஒரு அரசியல் தலைமைத்துவம் காரணமாகவே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல உள்ளுராட்சி மன்றங்களில் இத்தகைய குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவிததார்.
அதே வேளை வல்வெட்டித்துறை நகர சபையினால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களால்; தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையிலும்,அவர்கள் நகரசபையை முடக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment