Sunday, April 6, 2014

எமது ஜனாதிபதி சகல பிள்ளைகளும் நற்பிரசையாக மிளிர ஆவன செய்கிறார்! - சரத் ஏக்கநாயக்க (படங்கள் இணைப்பு)

“மேற்கத்திய நாடுகள் எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள மனுதொடர்பாக பல அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனாலும், அதற்கு அடிபணியாது எமது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டில் வாழும் சகல சமூகத்தினுடைய பிள்ளைகளும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்” மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண முதலமைச்சின் முஸ்லிம் சமய கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் மத்திய மாகாண அஹதிய்யாப் பாடசாலைகளின் 12 வது ஆசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வு, மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் மத்திய மாகாண முதல் அமைச்சரின் கல்வி மற்றும் கலாசாரப் பிரிவு இணைப்பதிகாரி ரஷீட் எம். ரியாழ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஏனைய மாகாணகளிலுள்ள அமைச்சுக்களில் மேற்கொள்ளப்படாத செயற் திட்டங்கள் மத்திய மாகாண அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்திலுள்ள மாணவர்களிடையே கல்வி மற்றும் சமய, கலாசார ஒழுக்க விழுமியங்கள் இதன் மூலம் கட்டி எழுப்பப்படுகின்றன. அந்த வகையில் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியைப் புகட்டுவாற்கான செயலமர்வுகள், மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நெறிகள், அஹதிய்யாப் பாடசாலைக்கு கட்டட உதவிகள் என்பன வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் செயற்படுத்துவது என்பது அரசியல் நோக்கத்திற்காக அல்ல. இந்த நாட்டிலுள்ள சகல சமூகத்திலுள்ள எதிர்காலச் சந்ததியினர்கள் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளாக உருவாக்கும் நோக்கதிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

வெறுமனே பாடசாலைக் கல்வியில் மாத்திரம் எந்தப் பயனுமில்லை. அந்த கல்வியில் ஒழுக்கம் நிறைந்து இருத்தல் வேண்டும். ஒழுக்கமுள்ள கல்வியை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் அஹதிய்யாப் பாடசாலைக் கல்வி. அறிநெறிப்பாடசாலைக் கல்வி, தஹம் பாடசாலைக் கல்வி ஆகிய பாடசாலைகளுக்கு பாரிய உதவிகளைச் செய்து வருவதாக முதல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ், அஹதிய்யாச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் கலாபூசணம் அஸ்ஹர், வளவாளர்களாக ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் நிசாம் , கண்டி வர்த்தக சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் இஸ்மாயீல் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.

(இக்பால் அலி)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com