தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரசாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடன் அரசாங்கம் காத்திரமான தொடர்புகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ள அவர், தமிழ் ஊடகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இனவாதிகள் அல்லாத இளம் அரசியல் தலைவர்களை இலங்கை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதிகளவான தமிழ், முஸ்லிம்களை பாதுகாப்புப் படையில் அரசாங்கம் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும், போலியான செய்திகளை முறியடித்து உண்மையான தகவல்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அரச நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நந்தகோபன் என்ற புலித் தலைவரை கைது செய்தமை புலிகளுக்கு எதிரான முக்கிய திருப்பு முனையாக அமையும் எனத் தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசாங்கம் மாற்றம் செய்யக் கூடாது எனவும், தொடர்ந்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தளர்த்தினால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் மீள யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment